ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?

கேள்வி :

எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?

இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11

பதில் :

உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.

குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன.

سنن أبي داود

1413 – حدَّثنا أحمد بن الفرات. أبو مسعود الرازي، أخبرنا عبدُ الرزاق، أخبرنا عبد الله بن عمر، عن نافع عن ابن عمر، قال: كان رسولُ الله – صلَّى الله عليه وسلم – يقرأ علينا القرآنَ، فإذا مرَّ بالسجدة، كبَّر وسَجَد وسَجَدْنا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத்

இந்த ஹதீஸை இப்னு உமரிடமிருந்து நாஃபிவு அறிவிப்பதாகவும், நாஃபிவு என்பாரிடமிருந்து அப்துல்லாஹ் பின் உமர் என்பார் அறிவிப்பதாகவும் உள்ளது.

நபித்தோழர் அல்லாத இந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை பல அறிஞர்கள் குறை கூறியிருக்கின்றார்கள் என்று ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை அலீ பின் முதைனீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்யும் போது தக்பீர் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.