கேள்வி :
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று கூறுகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின் கைஸ் (ரலி) கறுப்பாகவும், குள்ளமாகவும், அருவருப்பான தோற்றம் உடையவராகவும் இருந்தார்; அதனால் தான் அவரது மனைவி அவரை விவாகரத்துச் செய்தார் என்று எழுதப் பட்டுள்ளது. இதில் எது சரி?
பதில் :
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَتْ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْبَلْ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً قَالَ أَبُو عَبْد اللَّهِ لَا يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்.) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5273
ஸாபித் பின் கைஸ் (ரலி) குறித்து அவரது மனைவி கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தான் இடம் பெற்றுள்ளது.
அவர் அருவருப்பான தோற்றம் உடையவராக இருந்தார் என்ற கருத்தில் இப்னுமாஜா, அஹ்மது போன்ற நூற்களில் இடம் பெற்றுள்ள செய்தி பலவீனமானதாகும்.
இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்று அந்தப் பெண்மணி கூறுவதிலிருந்து அவரது தேவையைப் பூர்த்தி செய்யும் கணவராக இருக்கவில்லை என்பது மட்டும் தெரிகின்றது. இது தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸிலிருந்து கிடைக்கும் விளக்கமாகும்.