நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

கேள்வி :

ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன?

நாளிர்.

பதில் :

சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும் இது பாவமான செயலாகும்.

சுய இன்பம் கூடாது என்பதற்கான ஆதாரங்களை தனிக்கட்டுரையில் காணலாம்

நோன்பு என்பது இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் எனும் போது சுய இன்பம் கொண்டு இச்சையைத் தீா்த்துக் கொள்வது எப்படி நோன்பாகும்?

நோன்பு நோற்றுக் கொண்டு ஹலாலான வழிமுறையிலேயே (மனைவியுடன் உறவு கொண்டு) இச்சையைத் தணிக்கக் கூடாது என்றால் தடை செய்யப்பட்ட ஹராமான சுய இன்பம் மூலமாக இச்சையைத் தணிப்பது அறவே கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

صحيح البخاري

1903 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»

யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அறிவிப்பவா் அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1903

உண்ணாமல் பருகாமல் இருப்பது மாத்திரம் நோன்பல்ல! தீய நடவடிக்கைகளை முற்றிலுமாக விட்டொழிப்பது தான் நோன்பின் நோக்கம் என்று இந்த நபிமொழி உணா்த்துகின்றது.

எனவே ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது நோன்பாகவே ஆகாது. அல்லாஹ்விடத்தில் அதற்கு எந்தக் கூலியையும் பெற முடியாது.