முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

கேள்வி:

முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் நாடுதோறும் மாறுபடுவதேன்? சரியான கணிப்பு உங்களிடம் கிடையாதா? என வினவுகிறார் எனது கிறித்தவ மத சகோதரி. தாங்கள் தக்க விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

– ஏ. ஜம்ரூத் அஜீஸ், கொடுங்கையூர்.

பதில் :

முஸ்லிம் பண்டிகைகள் மட்டுமின்றி மற்ற பண்டிகைகளும் கூட நாடுகள் தோறும் மாறுபட்டே வரும். அதுதான் உலக அமைப்பாகும்.

உலகில் ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒவ்வொரு நேரமாக இருப்பதை நாம் அறிவோம். இந்தியாவில் பகலாக இருக்கும் போது உலகின் பாதிப் பகுதிகளில் இரவாக இருக்கும்.

நாம் பகலில் கொண்டாடும் விழாவை நாம் மறு நாளுக்குள் நுழைந்த பிறகு தான் அவர்கள் கொண்டாட முடியும். உலகம் முழுவதும் ஒரே நேரமாக இருந்தால் மட்டுமே அனைவரும் ஒரே நேரத்திலும், ஒரே நாளிலும் எந்த விழாவையும் கடைப்பிடிக்க முடியும்.

சரியான கணிப்பு கிடையாதா? என்ற கேள்விக்கும் இது தான் விடையாகும்.

இஸ்லாம் கணிக்குமாறு நமக்குக் கூறவில்லை. பிறை பார்த்துத் தான் பண்டிகைகளைக் கொண்டாடுமாறு கூறுகிறது.

கிறித்தவ சகோதரி கூறுவது போல் கணிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் உலகம் முழுவதும் ஒரே நாளில் எந்த விழாவையும் கொண்டாட முடியாது.

கணிப்புப்படி நமக்கு இன்று காலையில் பண்டிகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நேரத்தில் இரவுப் பொழுதை அடைந்த அமெரிக்கா போன்ற நாட்டவர் மறுநாள் காலையில் தான் அந்தப் பண்டிகையைக் கொண்டாட முடியுமே தவிர நாம் கொண்டாடும் அதே நேரத்தில் கொண்டாட முடியாது.

உலகம் முழுவதும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாத வகையில் தான் இந்த உலகம் அமைந்துள்ளது.

பூமிக்கு எதிரும் புதிருமாக இரண்டு சூரியன்களை நிறுத்தினால் மட்டும் தான் இது சாத்தியப்படும். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுவதும் இல்லை.

மனிதர்களாகப் போட்டுக் கொண்ட டேட்லைன்’ காரணமாக இரண்டையும் ஒரே தேதி என்ற நாம் கூறிக் கொள்கிறோமே தவிர உண்மையில் அடுத்தடுத்த நாட்களில் தான் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது.

நள்ளிரவு 12 மணிக்கு அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கிறது என்றால் அதே நேரத்தில் பட்டப்பகலில் இருக்கும் நாம் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை.

இதைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்களின் பண்டிகைகள் வேறு வேறு நாட்களில் அமைவதைக் குறை கூற மாட்டார்கள்.