மனத்துணிவு பெற என்ன செய்வது?

கேள்வி :

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா?

முஹம்மத் இஸ்ஹாக்

பதில்:

நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது.

ஒரு காரியத்தில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளைச் சரியாகச் செய்த பிறகு அதில் குறை ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறலாம்.

குறை ஏற்பட்டதற்கு நமது முயற்சியின்மை தான் காரணமாக இருந்தால் அப்போது அல்லாஹ்வின் நாட்டத்தின் மீது பழிபோடாமல் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

3143حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ وَمُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ قَالَا حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ سَيْفٍ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ لَمَّا أَدْبَرَ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَلُومُ عَلَى الْعَجْزِ وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ رواه أبو داود

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருவருக்கிடையே தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பு யாருக்குப் பாதகமாக அமைந்ததோ அவர் திரும்பிச் செல்லும் போது அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பாளன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவரிடம்) அலட்சியப் போக்குடன் இருப்பதை அல்லாஹ் பழிக்கிறான். எனவே நீ புத்திக் கூர்மையுடன் செயல்படு. இதன் பிறகு உன்னை ஏதேனும் மிகைத்து விடுமேயானால் அப்போது அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பாளன் எனக் கூறு என்றார்கள்.

நூல் : அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கை விசாரிக்கின்றார்கள். இந்த வழக்கில் தோற்றுப் போனவர் சரியான ஆதாரங்களை எடுத்து வைத்து திறமையுடன் செயல்படவில்லை. முயற்சி செய்யவுமில்லை. தீர்ப்பு தனக்குப் பாதகமாக அமைந்ததற்கு இவருடைய கவனமின்மை தான் காரணம் என்பதை அவர் உணராமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றார். இதை நபியவர்கள் கண்டிக்கின்றார்கள்.

செய்ய வேண்டிய முயற்சிகள் அனைத்தையும் சரியாகச் செய்து விட்டு அதன் பிறகு தோல்வி ஏற்பட்டால் அப்போது தான் அதை அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறவேண்டும்.

எனவே நீங்கள் துணிச்சல் இல்லாமல் இருப்பது ஒரு குறைதான். நீங்கள் நினைத்தால் இதைச் சரி செய்ய முடியும். இதை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த முற்சியில் ஈடுபடாமல் இது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறி இருந்து விட்டால் இதனால் ஏற்படும் கஷ்டங்களுக்கும், சங்கடங்களுக்கும் அல்லாஹ் காரணமாக மாட்டான். நீங்கள்தான் காரணம்.