கேள்வி :
கணவன் இறந்த பின் ஒரு பெண் மறுமணம் புரிந்து ஒரு வாரிசையும் பெற்றெடுத்தால் முதல் கணவனின் சொத்தில் அவளுக்கு என்ன பங்கு கிடைக்கும்?
அபூதாஹிர்
பதில் :
கணவன் மரணிக்கும் போது அந்தக் கணவனுக்குப் பிள்ளை இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு கிடைக்கும். அந்தக் கணவனுக்கு பிள்ளை இல்லாவிட்டால் கணவனின் சொத்தில் நான்கில் ஒன்று கிடைக்கும். யார் சொத்துக்கு உரியவரோ அவருக்குப் பிள்ளை இருப்பதைப் பொருத்துத் தான் பாகங்கள் வித்தியாசப்படும். சொத்துக்கு உரிமையாளராக இல்லாத அவரது மனைவிக்கு வேறு கணவன் மூலம் பிள்ளை இருந்தாலோ, இல்லாவிட்டாலோ அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 4:12