கேள்வி :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும்.
-கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர்
பதில்:
ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு வாரிசுரிமை ஒரு காரணமாக ஆகாது. எந்தப் பணியையும் அதற்குத் தகுதி உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனார் என்ற அடிப்படையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நிச்சயமாக அப்பதவி வழங்கப்படவில்லை.
இன்னும் சொல்லப் போனால் அப்பதவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரிடம் வழங்கிச் செல்லவில்லை. யாரையும் நியமனம் செய்யாமல் தான் மரணித்தார்கள்.
நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின் யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பதில் நபித்தோழர்களிடையே மிகப்பெரிய கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டது. அபூபக்கருக்கும், உள்ளூர் வாசிகளின் தலைவரான ஸஅது அவர்களுக்கும் இடையே கடும் போட்டியும் நிலவியது.
மக்களின் அதிகப்படியான ஆதரவின் காரணமாக அபூபக்கர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருந்ததை மக்கள் கண்டதால் தான் பொறுப்பை ஒப்படைத்தனர்.
ஒரு மனிதனின் சொத்துக்களை அவனது வாரிசுகள் அடைவார்கள் என்று உலகுக்குச் சட்டம் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதற்கும் தனது குடும்பத்தார் வாரிசு இல்லை; அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்கள்.
தமக்கு உடமையான சொத்துக்களையே அரசுக் கருவூலத்தில் சேர்க்குமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு உடமையாக இல்லாததைத் தமது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பார்களா?
திருக்குர்ஆனின் போதனையும், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளும் குலம், கோத்திரத்தின் அடிப்படையில் ஒருவரும் சிறப்படைய முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றன.
அதே சமயத்தில் ஒரு ஆட்சித் தலைவரின் வாரிசுக்கு அதற்கான தகுதி இருந்து அந்தத் தகுதியின் காரணமாக அப்பதவியைப் பெற்றால் அதை இஸ்லாம் எதிர்க்காது என்று கூறலாம். இதனால் தான் அலீ (ரலி) அவர்களுக்குப் பின் அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள்.