ஏலச்சீட்டு கூடுமா?

கேள்வி :

ஏலச்சீட்டு கூடுமா?

பதில் :

ஏலச்சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை.

ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டுவார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் சேரும். பத்து நபர்களில் ஒருவருக்கு அந்தத் தொகையைக் கொடுப்பார்கள். குறிப்பிட்ட மாதத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்று குலுக்கல் மூலம் நிர்ணயித்து கொடுத்தால் இதில் குற்றம் சொல்ல முடியாது. அல்லது பத்துப் பேரில் யாருக்கு முக்கிய தேவை உள்ளது என்று ஆய்வு செய்து முடிவு செய்தால் அதையும் குற்றம் சொல்ல முடியாது.

ஒவ்வொரு மாதத்திலும் யாருக்குக் கொடுப்பது என்பதை ஏலத்தின் மூலம் முடிவு செய்கிறார்கள். அதாவது ஒரு லட்ச ரூபாய்க்குப் பதிலாக யார் குறைந்த தொகையை வாங்கிக்கொள்ள முன்வருகிறார்களோ அவர்களுக்கு அந்தக் குறைந்த தொகையைக் கொடுப்பார்கள்.

ஒரு லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 90 ஆயிரம் தந்தால் போதும் என்று ஒருவரும் 80 ஆயிரம் தந்தால் போதும் என்று வேறு ஒருவரும் போட்டியிட்டால் 80 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டவருக்கு 80 ஆயிரத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவர் மீதி ஒன்பது மாதங்களுக்கு தலா பத்தாயிரம் கட்டி வர வேண்டும். இவரிடம் வசூலிக்கப்படுவது ஒரு லட்சம். ஆனால் இவருக்குக் கொடுப்பது 80 ஆயிரம். இதை ஏலச் சீட்டு நடத்துபவர் எடுத்துக் கொள்வார். அல்லது இதில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதியை ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்.

இது அப்பட்டமான மோசடியாகும். ஒருவனின் நெருக்கடியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுரண்டலாகும். அவனிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயைச் சுருட்டுவதற்கு மார்க்கம் அனுமதித்த எந்தக் காரணமும் இல்லை.

முன் கூட்டியே பணம் கொடுப்பதால் 80 ஆயிரத்தைக் கொடுத்து விட்டு பின்னர் ஒரு லட்சம் அவனிடம் வசூலிப்பது வட்டியில்தான் சேரும்.