கேள்வி:
புத்தர் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன? என்று புத்த மத நண்பர் கேட்கிறார். அவருக்கு எப்படி விளக்கம் கூறுவது?
– இலங்கை எம்.ஜே.எம். நிஜாம்தீன், ஜித்தா
பதில்:
குர்ஆன், உலகத்தில் வந்த ஒவ்வொருவரையும் பற்றி குறிப்பிடும் வரலாற்றுப் புத்தகமல்ல. அவ்வாறு எழுதப்படுவதாக இருந்தால் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரிதாக குர்ஆன் ஆகி விடும்.
மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தால் அது நன்மை தரும் என்பதை மட்டுமே குர்ஆன் கூறும். அது தான் மனிதனுக்குத் தேவையானது. ஒரு சிலருடைய வாழ்க்கையில் மனித குலம் பெற வேண்டிய படிப்பினைகளை மட்டும் குர்ஆன் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.
எனவே தான் குர்ஆனில் புத்தர் பற்றிக் கூறப்படவில்லை. கூறப்படாததால் எந்தக் குறையும் இல்லை.
அதே சமயம் புத்தர் பற்றி எத்தகைய முடிவை மேற்கொள்வது என்று சிந்தித்தால் அதற்கான விளக்கம் இஸ்லாத்தில் உண்டு.
புத்தர் ஒரு காலத்தில் பிறந்தார். பின்னர் இறந்து விட்டார். இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் வருடங்கள் கடந்து விட்டன. அவற்றுள் சுமார் நூறு வருடங்களுக்கும் குறைவாகவே புத்தர் வாழ்ந்திருப்பார். இத்தகைய ஒருவர் கடவுளாக இருக்க முடியாது. நம்மைப் போலவே வாழ்ந்து மறைந்தவரை வழிபட முடியாது; வணங்க முடியாது.
அவர் கடவுளாக இருந்தார் என்றால், உலகம் தோன்றி பல இலட்சம் வருடங்களாக அவர் இல்லாமல் இருந்தாரே அப்போது இவ்வுலகத்தை யார் நிர்வகித்தார்? என்றெல்லாம் திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு புத்தரை ஆய்வு செய்யலாம். அவரை வழிபடுவது தவறு எனக் கூறலாம்.
அது போல் அவரது புலால் உண்ணாமை என்ற கொள்கை எக்காலத்துக்கும் பொருந்தாது. மனித குலத்துக்கு நன்மை தராது என்று ஆய்வு செய்வதற்கான வாசலை திருக்குர்ஆன் திறந்து வைத்துள்ளது.
எனவே புத்தரானாலும், ராமரானாலும், கன்பூஷியஸ் ஆனாலும் நேற்று தோன்றிய ரஜ்னீஷ் ஆனாலும் இன்றைக்கு இருக்கிற சாய்பாபாக்கள் ஆனாலும் அவர்களைப் பற்றி எத்தகைய முடிவுக்கு வரலாம் என்று ஆராயப் புகுந்தால் திருக்குர்ஆனில் மிகத் தெளிவான விடை உள்ளது. இவர்களது பெயர்கள் தான் குர்ஆனில் இருக்காதே தவிர இவர்களது நடவடிக்கைகள் குறித்து என்னென்ன முடிவெடுக்கலாம் என்பதற்கு விடை இருக்கிறது. அதை உங்கள் புத்த மத நண்பருக்குக் கூறுங்கள்.