இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

கேள்வி :

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

ஃபாத்திமா

பதில் :

இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை வெளியேற்றும் போது புதிதாக நல்ல இரத்தம் உடனே உற்பத்தியாகி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அந்த மக்கள் நம்பினார்கள்.

உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் இரத்தத்தை வெளியேற்றும் கலை அறிந்த வைத்தியர்கள் மூலம் இதைச் செய்வார்கள்.

மனிதர்களின் கழுத்தில் குறிப்பிட்ட இரண்டு நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் வழியாக இரத்த்த்தை வெளியேற்றுவதுதான் இரத்தம் குத்தி எடுத்தல் என்பதாகும். சிறு குழாயை எடுத்துக் கொள்வார்கள். அதன் ஒரு புறம் ஊசித் துவாரம் போல் சிறிய ஓட்டை இருக்கும். மறு புறம் பெரிய துவாரம் இருக்கும். ஊசித் துவாரம் கொண்ட முனையை அந்த நரம்பில் செலுத்தி மறு முணையை வாயில் வைத்து உறிஞ்சி இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இவ்வாறு செய்த பின் உடலில் பல நோய்கள் நீங்குவதாக அவர்கள் நம்பினார்கள்.

இந்த வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இருந்ததால் அவர்களும் இது போன்ற சிகிச்சையைத் தமக்காக செய்து கொண்டார்கள். ஆனால் இதற்கும், மார்க்கத்துக்கும் சம்மந்தம் இல்லை.

இது வஹியின் அடிப்படையில் செய்த ஒன்றல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதாராக ஆவதற்கு முன்பே இந்த வழக்கம் இருந்ததால் இது இறைவன் புறத்திலிருந்து வந்த வழிகாட்டுதல் அல்ல. மனிதர்கள் தமது அனுபவ அறிவைக் கொண்டு கண்டறிந்த மருத்துவம் தவிர வேறில்லை. இதை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.

அந்த முறையில் நன்மை இருப்பதாக நமக்குத் தெரிந்தால் அதைக் கடைப்பிடிக்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம்.

அன்றைக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதில் சாம்பலைப் பூசி இரத்த ஓட்டத்தை நிறுத்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் வெட்டப்பட்ட போது செய்யப்பட்டது. இது அன்றைய மருத்துவ முறை என்ற அடிப்படையில் செய்யப்பட்டதே தவிர மார்க்க அடிப்படையில் செய்யப்பட்டதல்ல. அது போன்றது தான் இரத்தம் குத்தி எடுத்தல் என்பதும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத்தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்களின் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

صحيح مسلم

6277 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ عَامِرٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَعَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ « لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ ». قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ « مَا لِنَخْلِكُمْ ». قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ « أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

صحيح مسلم

إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

صحيح مسلم

فَإِنِّى إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا فَلاَ تُؤَاخِذُونِى بِالظَّنِّ وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللَّهِ شَيْئًا فَخُذُوا بِهِ فَإِنِّى لَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இரத்தம் குத்தி எடுத்தல் முதல் வகையைச் சேர்ந்ததாகும்.