தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

? தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

ரியாஸ்

பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆனால் மாற்று மதத்தில் உள்ளவர்கள் அவர்களது நம்பிக்கை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால் அவை தவறான பெயர்களாக இருக்கும். இவ்வாறு தவறான அர்த்தம் தரும் பெயர் கொண்டவரை அவருடைய பெயரைக் கூறி அழைப்பது தவறல்ல.

ஏனென்றால் பிறருடைய பெயரை நாம் குறிப்பிடும் போது அவர் அந்தப் பெயருக்குப் பொருத்தமானவராக இருக்கின்றாரா? அந்த பெயரில் சரியான அர்த்தம் உள்ளதா? என்று யாரும் பார்ப்பதில்லை.

ஒருவருடைய பெயரை நாம் குறிப்பிட்டால் அந்தப் பெயரில் உள்ள அர்த்தத்தை நாம் அங்கீகரித்து விட்டோம் என்று பொருள் அல்ல. பெயர்களைப் பொறுத்தவரை அது நபர்களைக் குறிப்பிடப் பயன்படும் அடையாளச் சொல் என்ற அடிப்படையில் தான் அதைக் கூறி வருகின்றோம்.

மோசடி செய்யபவனுக்கு அமீன் (நம்பிக்கைக்குரியன்) என்று பெயர் இருக்கும். இவனைப் பற்றித் தெரிவிக்கும் போது “அமீன் மோசடி செய்து விட்டான்’ என்று கூறுவோம். இவ்வாறு கூறுவதால் இவன் நேர்மையானவன் என்று நாம் அங்கீகரித்து விட்டதாகப் புரிந்து கொள்ள மாட்டோம்.

இதே போன்று ஒருவன் நாத்திகனாக இருப்பான். அவனுடைய பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்று இருக்கும். இவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டான் என்ற அர்த்தத்தில் இவனை அப்துல்லாஹ் என்று யாரும் அழைப்பதில்லை.

அவரவருக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளதோ அதைக் கூறித் தான் அடையாளம் சொல்ல முடியும். எனவே ஒருவனுக்குத் தவறான பெயர் வைக்கப்பட்டிருந்தால் அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது குற்றமாகாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பலருக்குத் தவறான பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெயராலேயே அவர்களை அழைத்து வந்தார்கள்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அடிமை என்ற பொருள் தரும் பெயரை வைக்கக் கூடாது. ஆனால் நபிகள் நாயகத்தின் பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிப் ஆகும். இதன் பொருள் முத்தலிபின் அடிமை என்பதாகும். முத்தலிப் என்பது அல்லாஹ்வின் பெயர் இல்லை. இவ்வாறு முஸ்லிம்கள் பெயர் வைக்கக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் நபியாவேன். இதில் பொய்யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்” என்று கூறியுள்ளனர்.

பார்க்க: புகாரி 2864, 2874, 2930, 3042, 4315, 4316

அவர்களின் பாட்டனார் பெயர் தவறானது என்றாலும் அவரது பெயரை அப்படியே சொன்னால் தான் அது அவரைக் குறிக்கும் என்பதால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல் உஸ்ஸா (உஸ்ஸாவின் அடிமை) அப்து ஷம்ஸ் (சூரியனின் அடிமை) போன்ற பெயர்கள் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமானவை. இந்தப் பெயர்களைக் கொண்ட நபர்களை அந்தப் பெயரைச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் அழைத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி), நூல்: முஸ்லிம் 5269

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, “கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 348

“அப்து ஷம்சின் மக்களே’ என்றால் சூரியனுக்கு அடிமையானவனின் மக்களே என்று அர்த்தம்.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் இது மாதிரியான தவறான அர்த்தம் கொண்ட பெயர்களைச் சூட்டியிருந்தால் அந்தப் பெயர்களை மாற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இத்தகைய பெயர்களை வைத்திருந்தால் அவர்களை மாற்றச் சொல்ல முடியாது என்பதால் அந்தப் பெயர்களாலேயே அவர்களை அழைத்து வந்தார்கள். எனவே மாற்று மதத்தினரின் பெயர்களைக் கூறி அழைப்பது தவறல்ல.

இது போல் சில ஊர்களின் பெயர் அல்லது தெருக்களின் பெயர் இணை கற்பிக்கும் அர்த்தம் கொண்டதாக இருக்கும். அந்த ஊரின் பெயர் அதுதான் என்றால், அந்தத் தெருவின் பெயர் அதுதான் என்றால் நாமும் அப்படித் தான் குறிப்பிட வேண்டும்.

கிருஷ்னன் கோவில் என்று ஒரு ஊர் இருந்தால் அப்படித்தான் கூற வேண்டும். அப்படி ஒரு கோவில் இருந்தால் அதை அப்படியே தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னதால் நாம் கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டோம் என்று ஆகாது. மற்றவர்கள் பெயர்களைப் பயன்படுத்துவதில் மட்டும் இஸ்லாம் விதி விலக்கு அளித்துள்ளது என்பதை மேற்கண்ட ஆதாரத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மார்க்கத்தில் தராவீஹ் என்று ஒரு தொழுகை இல்லை. இதை நாம் விமர்சிக்கும் போது தராவீஹ் 20 ரக்அத்தா என்று கூறுவோம். இதனால் நாம் தராவீஹ் தொழுகையை ஏற்றுக் கொண்டோம் என்று ஆகாது, மக்கள் எப்படிக் குறிப்பிடுகிறார்களோ அப்படிக் குறிப்பிட்டால் தான் நாம் அதைப் பற்றிப் பேசுகிறோம் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.