ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்பது உண்மையா?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்றும், வெள்ளிக் கிழமைகளில் இந்த சூராவிற்கென்று தனிச் சிறப்பு உள்ளதாகவும் கூறுகின்றனரே! குர்ஆன், ஹதீஸில் இது பற்றி ஏதேனும் குறிப்புள்ளதா?
எஃப். ரியாஸ் அஹ்மத், காயல்பட்டிணம்

பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு  எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அதுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5011, 3614, முஸ்லிம் 1325, திர்மிதி 2810, அஹ்மத் 17776

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெரும் குழப்ப வாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

நூல்: முஸ்லிம் 1475, திர்மிதி 2811, அபூதாவூத் 3765, அஹ்மத் 20720

இவையே கஹ்ஃப் எனும் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களில் சரியான ஹதீஸ்களாகும். இவை தவிர மற்ற அனைத்து செய்திகளும் குறையுடைய, பலவீனமான செய்திகளாகவே அமைந்துள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது தொடர்பாக ஹதீஸ் நூற்களில் இடம் பெறும் செய்திகளும் ஆதாரப்பூர்வமானவையாக இல்லை.