வாரிசு இல்லாத பெண் தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைத்து விட்டார். இஸ்லாத்தில் தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா?

வாரிசு இல்லாத பெண் தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைத்து விட்டார். அவளது கூடப் பிறந்த சகோதரர்களுக்கும் அச்சொத்தில் பாகம் கிடைக்குமா? ஷரீஅத் சட்டம் என்ன சொல்கிறது? இஸ்லாத்தில் தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா?
கலீல் ரஹ்மான், செங்கல்பட்டு

தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

வளர்ப்புக் குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கலாம்.

(பாகப் பிரிவினை என்பது) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

அல்குர்ஆன் 4:11

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.)

அல்குர்ஆன் 4:12

மரண சாசனம் செய்ய அனுமதி உள்ளதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.

ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்பட வேண்டும்.

விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். “அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பங்கு! ஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3936, 4409, 5668, 6373

இந்த அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட சொத்தை மரண சாசனம் செய்திருந்தால் அதை வாரிசுகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

குழந்தை இல்லாத பெண் தனது சொத்தை வளர்ப்பு மகனுக்கு முழுமையாக எழுதி வைத்திருந்தாலும் அதில் மூன்றில் ஒரு பகுதி போக மீதமுள்ள இரண்டு பங்கு அந்தப் பெண்ணின் சகோதர, சகோதரிகளுக்குக் கீழ்க்கண்ட வசனத்தினடிப்படையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும்.

கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 4:176