திருக்குர்ஆன் தமிழாக்கத்தில், சூரத்துந்நூர் 36, 37 ஆகிய வசனங்களுக்கு மொழியாக்கம் செய்ததில், “இறையில்லங்கள் உயர்த்தப்படவும் அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில், முஃமின்கள் துதிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். “முஃமின்கள் என்றால் ஆண்கள் என்று அர்த்தம்; சில ஆண்கள் என்று அரபியில் இல்லை” என்று ஒரு ஆலிம் கூறுகிறார். விளக்கவும்.
எம். திவான் மைதீன், பெரியகுளம்
நீங்கள் குறிப்பிடும் அந்த வசனத்தில், சில ஆண்கள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில், ரிஜால் என்ற அரபி வார்த்தை இடம் பெற்றுள்ளது. ரிஜால் என்பதற்கு நேரடிப் பொருள் ஆண்கள் என்பது தான்.
இந்த வசனத்தில் ஆண்கள் என்று கூறப்படுவது ஒட்டு மொத்த ஆண் இனத்தைப் பற்றியும் அல்ல! அல்லாஹ்வை நினைவு கூரும் சில ஆண்களைப் பற்றித் தான். எனவே இந்த இடத்தில் ரிஜால் என்பதற்கு, “சில ஆண்கள்’ என்று மொழி பெயர்த்ததில் எந்தத் தவறும் இல்லை.
ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில் முஃமின்கள் என்று மொழி பெயர்த்திருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். முஃமின்கள் என்று அரபியில் இல்லை. அதனால் அடைப்புக் குறிக்குள் முஃமின்கள் என்று போட்டுள்ளனர்.
இதே ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில் 72:6 வசனத்தில் இடம் பெறும், “ரிஜால்’ என்ற வார்த்தைக்கு “சில ஆண்கள்’ என்றே மொழி பெயர்த்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.