உலகில் எங்காவது ஒரு பகுதியில் கிலாஃபத் இறையாட்சி ஆட்சி ஏற்பட்டால் அதை ஆதரிப்பீர்களா?

? சூழல் காரணமாக ஓர் இறைமறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ ஆதரிப்பது தவறில்லை என்கிறீர்கள். சரி, அதே போல உலகில் எங்காவது ஒரு பகுதியில் கிலாஃபத் இறையாட்சி ஆட்சி ஏற்பட்டால் அதை ஆதரிப்பீர்களா?

அனீஸ் அஹமது

ஒரு ஆட்சியை கிலாபத் என்றும் இறையாட்சி என்றும் அவர்களே சொல்லிக் கொண்டால் அது சரியான ஆட்சியாகிவிட முடியாது. அது இஸ்லாமிய ஆட்சியாகவும் முடியாது.

இஸ்லாமிய ஆட்சி என்றால் இஸ்லாமிய சட்டதிட்டங்களை வளைந்து கொடுக்காமல் அப்படியே பின்பற்றுவதாகும். இப்படிப்பட்ட ஆட்சி இன்று உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய நாடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் நாடுகளிலும் இல்லை.

இஸ்லாத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும் நெறிமுறைகளையும் மீறி நடப்பவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு அழைப்பு விட்டால் அந்த அழைப்பு பொய்யானது, போலியானது. இவர்களை நம்பி இவர்களுக்குப் பின்னால் செல்லக் கூடாது. இந்த அழைப்பை விடுவதற்கு இவர்களுக்கு எள்ளளவு கூட தகுதி இல்லை.

முறையான இஸ்லாமிய ஆட்சி இறுதி காலத்தில் தான் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். யார் தலைமையில் அமையும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மஹ்தீ என்ற மன்னர் தோன்றுவார். அவர் தலைமையில் நல்லாட்சி அமையும். இதே போன்று இறுதிக் காலத்தில் நபி ஈசா (அலை) அவர்கள் வருகை தந்து நல்லாட்சி செய்வார்கள்.

இந்த இருவரின் தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் போது அதை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் இவர்களை ஒருவர் தலைவராக ஏற்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவர்களின் ஆட்சி கட்டாயம் ஏற்படும்.

அந்தக் காலத்தை நாம் அடைந்தால் நிச்சயமாக அவர்களின் ஆட்சியை ஆதரிப்போம். ஆனால் இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கும் வழிகேடர்களை ஒருக்காலும் ஆதரிக்க முடியாது.