வினிகர் பயன்படுத்தலாமா?

? வினிகர் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் போன்ற பொருட்களிலிருந்தும் வினிகர் தயாரிக்கப்படுகின்றது. இவற்றைப் பயன்படுத்தலாமா?

ஃபாத்திமா

வினிகர் என்று கூறப்படும் காடியை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், “நம்மிடம் காடி மட்டுமே உள்ளதுஎன்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதைக் கொண்டு உண்ணலானார்கள். மேலும், “குழம்புகளில் அருமையானது காடியாகும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் (4169)

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லைஎன்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “காடி தான் குழம்புகளில் அருமையானதுஎன்று கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள், “இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் (4170)

ஆல்கஹாலில் இருந்து வினிகர் தயாரிக்கப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். போதை தரும் பொருட்களை வினிகராக மாற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இல்லை (மாற்றக் கூடாது)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4014)

எனவே போதை ஏற்படுத்தக்கூடிய ஆல்கஹாலை வினிகராக மாற்றினால் அதை உண்பது கூடாது. போதை இல்லாத பொருட்களிலிருந்து வினிகர் தயாரிக்கப்பட்டால் அதை உண்பது தவறல்ல.