இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

? இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

இப்னு ஸைன்

எகிப்தில் ஹசனுல் பன்னா என்பவர் இக்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.  “இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும்’ என்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்று இவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.

ஆனால் இவர்களின் பிரச்சாரத்தையும் செயல்பாட்டையும் கவனித்தால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் பாடுபடவில்லை. தங்களை ஆட்சியாளர்களாக ஆக்கிக்கொள்ள, மார்க்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என்பதை அறியலாம்.

குர்ஆன் ஹதீஸில் ஆட்சி அதிகாரம் பற்றி வரும் வசனங்களை மட்டும் இவர்கள் படிப்பார்கள். இதைத் தங்களுடைய கொள்கைக்கு ஆதாரங்களாகக் கூறிக் கொள்வார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், கடமைகள், வணக்க வழிபாடுகள், இஸ்லாம் வன்மையாக கண்டித்த பாவங்கள் ஆகியவற்றைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறைய கூறப்பட்டிருக்கும்.

இவர்கள் அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். சிந்திக்க மாட்டார்கள். மக்கள் இஸ்லாத்துக்கு மாற்றமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் உண்மையான இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களிடத்தில் கூட இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

இந்த இயக்கத்தில் இருப்பவர்களிடம் கூட இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும், நெறிமுறைகளையும் பார்க்க முடியாது. இஸ்லாமியப் போதனைகளில் பிடிப்பில்லாத இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை எப்படி உருவாக்க முடியும்? அப்படி உருவாக்கினால் அந்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சியாக இருக்குமா? என்று சிந்திக்க வேண்டும்.

இவர்கள் மக்களிடம் இஸ்லாத்தைக் காட்டி ஓட்டுக் கேட்பதால் கேவலத்தில் மற்ற அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டனர்.

இவர்கள் தங்கள் இயக்கத்துக்கு இக்வானுல் முஸ்லிமீன் இஸ்லாமிய சகோதர இயக்கம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்தப் பெயருக்கு ஏற்ப இவர்கள் நடப்பதில்லை. இவர்களின் அறியாமையை யாராவது ஒரு முஸ்லிம் சகோதரன் தெளிவுபடுத்தினால் அவனைக் கொல்வதற்குக் கூட தயங்க மாட்டார்கள். ஜிஹாத் என்ற பெயரால் இவர்கள் கொன்று குவித்த இஸ்லாமியர்களின் பட்டியல் ஏராளம்.

ஆட்சி அதிகாரத்தைப் பற்றி பேசும் இவர்கள் ஆட்சி அதிகாரத்தை  இஸ்லாம் எந்த இடத்தில் வைத்திருக்கின்றது? எந்தச் சூழ்நிலையில் அதற்காகப் பாடுபடச் சொல்கிறது? என்பதைச் சிந்திக்க மாட்டார்கள். இது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய நெறிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

இந்த இயக்கத்தின் அசத்தியக் கொள்கையை அச்சுப் பிசகாமல் பின்பற்றக் கூடியவர்கள் வேறு பெயர்களில் நம் நாட்டில் இருக்கின்றார்கள். மார்க்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இப்போது கூட மனிதச் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்காக எகிப்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இத்துடன் இஸ்லாமிய ஆட்சி கோஷத்தை சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விட்டார்கள்.