நோன்பு திறக்கும் நேரத்தில் அடியானுக்கும், இறைவனுக்கும் இடையில் எந்த திறையும் இல்லை என்று வரும் செய்தி ஆதரப்பூர்வமானதா?

? “அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா?’ என ஒரு முறை இறைவனின் தூதர் மூசா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், “மூஸாவே, கடைசி காலத்தில் முஹம்மதின் உம்மத்தவர்களை நான் அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், குழி விழுந்த கண்களுடனும், தாகத்தால் வறண்ட நாக்குகளுடனும், பலவீனமான உடலுடன் பசியால் துன்பப்படும் வயிறுகளுடனும், காய்ந்த ஈரல்களுடனும் என்னை அழைப்பார்கள். மூஸாவே அவர்கள், உன்னை விட அதிகம் சிறந்தவர்கள். நீர் என்னுடன் பேசும் போது சுமார் 70,000 திரைகள் உனக்கும் எனக்கும் இடையில் உள்ளன. ஆனால் இப்தார் நேரத்தில் ஒரு சிறு திரை கூட எனக்கும், நோன்பு திறக்கும் முஹம்மதின் உம்மத்தினருக்கும் இடையில் இல்லை. மூஸாவே, நானே, எனக்குள் நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளிகள் கேட்கும் பிரார்த்தனையை ஒரு போதும் மறுக்கக் கூடாது எனும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன்.

இந்தச் செய்தி எந்த கிரந்தத்தில் உள்ளது? இதன் தரம் என்ன?  கருத்துக்களை சிந்தித்தால் நிறைய கேள்விகள் எழுகின்றன. தெளிவாக்குங்கள்.

ஹஸன்

இந்தக் கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் கிடையாது. இது ஒரு கட்டுக்கதை. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இறைவன் வானத்தில் இருந்து கொண்டே பூமியில் உள்ள மூஸா நபியிடம் தனது பேச்சைக் கேட்கும் விதமாக நேரடியாகப் பேசியிருக்கிறான். இது நபிமார்களிலேயே மூஸா நபிக்கு மட்டும் உரிய சிறப்பாகும். அதனாலே அவர்கள் கலீமுல்லாஹ் என்றழைக்கப்படுகிறார்கள்.

இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.  (அல்குர்ஆன் 2:253)

விசாரணை நாளின் போது மக்கள் மூஸா நபியை நோக்கி அல்லாஹ் நேரடி உரையாடலுக்கு உங்களைத் தேர்வு செய்தான் என்று கூறுவார்கள் என நபியவர்கள் கூறியுள்ளனர்.  (பார்க்க: புகாரி 7510)

அங்கே அவர் வந்த போது “மூஸாவேஎன்று அழைக்கப்பட்டார். “நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் “துவாஎனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!  (அல்குர்ஆன் 20:11-13)

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.  (அல்குர்ஆன் 4:164)

நோன்பு திறக்கும் நிலையில் நாம் என்ன பிரார்த்தனை ஓதினாலும் அது இறைவனுடைய பேச்சை நாம் நேரடியாக கேட்கும் விதமாக இருக்காது. இவ்வாறிருக்கையில் இது இறைவன் மூஸா நபியிடம் பேசியதை விட எப்படி சிறப்பானதாகும்? இதுவே இந்தச் செய்தி தவறு என்பதை உணர்த்துகின்றது

மேலும் மூஸா நபியைச் சிறப்பித்து பல ஹதீஸ்கள் உள்ளன. நபியர்கள் மூஸாவை விட தன்னை சிறப்பித்து உயர்த்தி விடக்கூடாது எனுமளவுக்கு கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், “உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அந்த யூதர், “உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு)  அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்- அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், “மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள்.  நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2411

இந்த ஹதீஸ் மூஸா நபியின் சிறப்பை உணர்த்துகின்றது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுக்கதை மூஸா நபியை அவமதிக்கும் வகையில் உள்ளது.

இறைவன் மூஸா நபியிடம் நேரடியாகப் பேசியதை குர்ஆனில் அல்லாஹ் சிறப்பித்துக் குறிப்பிடுகிறான். மறுமையிலும் மூஸா நபிக்கு உள்ள அந்தச் சிறப்பை மக்கள் குறிப்பிடுகிறார்கள் எனும் போது இந்தச் சம்பவம் மூஸா நபிக்கு இறைவன் வழங்கிய அந்தச் சிறப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

எனவே இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதில் சந்தேகமில்லை.

மேலும் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ் கூறும் போது உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். ஒட்டிய வயிறு உள்ளிட்ட மேற்சொன்ன கட்டுக்கதையில் உள்ள அனைத்தும் அனைத்து சமுதாயத்துக்கும் உள்ளதாகும். மேலும் நோன்பு துறக்கும் இப்தார் என்பதும் அனைத்து சமுதாயங்களுக்கும் வழங்கப்பட்ட பொதுவான சிறப்பாகும். மற்ற சமுதாய மக்களுக்கு நோன்பு இல்லாதது போலவும் முஹம்மது நபியின் உம்மத்துகளுக்குத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது போலவும் இந்தக் கட்டுக்கதையில் சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் எந்த உம்மத்தின் எந்த மனிதனும் எந்த ஒரு நபியை விடவும் உயர முடியாது. ஒரு நபியை விட நபியல்லாதவர்கள் சிறந்தவர்கள் என்று எந்த நூலில் இடம் பெற்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அதைக் கட்டுக்கதை என்று சொல்லிவிடலாம்.