சூரத்துல் பகராவின் 78வது வசனத்தில், “அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசனத்தில் பொய் என்ற வார்த்தையே இடம் பெறவில்லையே?

  திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில், சூரத்துல் பகராவின் 78வது வசனத்தில், “அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசனத்தில் பொய் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் வாரி விடுகின்றார் என ஒரு பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உண்மையைத் தெளிவுபடுத்தவும்.

சி. அஹ்மது நைனா, நாகூர்

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

அல்குர்ஆன் 2:78

இந்த வசனத்தில் பொய்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள இடத்தில், “அமானிய்ய’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இதற்கு இட்டுக்கட்டுதல், கற்பனை செய்தல், பொய் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. “பொய் என்றாலே கற்பனையாக ஒருவன் இட்டுக்கட்டிக் கூறுவது தான்” என்று லிஸானுல் அரப் என்ற அகராதி நூலில் இதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது.

எனவே கற்பனை, இட்டுக்கட்டுதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும் விதத்தில் அமைந்துள்ள பொய் என்ற அர்த்தம் இந்த இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.