ராமர் கோயில் வெற்றியை அடுத்தே காசி, மதுராவிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன என்று யோகி கூறுகிறாரே?

பாபர் மஸ்ஜிதை சட்டத்திற்கு புறம்பாக இடித்து விட்டு ராமர் கோயில் கட்டியதை வெற்றி என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
சட்டத்தின் எந்தக் கூறுகளும் பாபர் மஸ்ஜித் வழக்கில் கவனிக்கப்படவில்லை.
பள்ளிவாசலை இடித்தவர்களுக்கே அதன் நிலத்தை வழங்கியது பெரும் அநியாயமாகும்.
அந்த அநியாயத்தையே தீர்ப்பென்று உச்சநீதிமன்றம் வழங்கியதால் முஸ்லிம்களும் வேறு வழியில்லை என கடந்து சென்று விட்டனர்.
உண்மை நிலை இப்படியிருக்க ராமர் கோயில் வெற்றி என்று சொல்வது சட்டவிரோத செயலுக்கு அங்கீகாரம் தேடும் செயலாகும்.
இப்போது கியான்வாபி மசூதி, ஷாஹி ஈத்கா மசூதி என நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிவாசல்களுக்கு இந்துத்துவ அமைப்புகள் உரிமை கோருவதும் சட்டத்திற்கு புறம்பானது தான்.
பாபர் மஸ்ஜித் பிரச்சனையின் துவக்கத்திலேயே வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 என்று சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்டு விட்டது.
அச்சட்டத்தின் நோக்கம் இந்தியா சுதந்திரம் பெறும் போது எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எவ்வாறிருந்தனவோ அப்படியே தொடர வேண்டும் என்பது தான்.
மசூதியாக இருந்தவை மசூதியாக, கோயிலாக இருந்தவை கோயிலாக, சர்ச்சாக இருந்தவை சர்ச்சாக என அப்படியே தொடர்வதை உறுதி செய்யும் சிறப்பு சட்டம் அது.
இன்னொரு வழிபாட்டு தலத்தில் யாரும் உரிமை கோரக்கூடாது என்பது தான் அச்சட்டத்தின் பொருளே.
ஆனால் தற்போது அச்சட்டத்திற்கு மாற்றமாக, சட்டவிரோதமாக காசி, மதுராவிலுள்ள மசூதிகளுக்கு உரிமை கோருகிறார்கள்.
உ.பி முதல்வர் யோகி, மறைமுகமாக அல்ல நேரடியாகவே அது போன்ற சட்டவிரோத உரிமை கோரல்களுக்கு ஊக்கமளிக்கின்றார்.
இப்படித்தான் துவக்கத்தில் பாபர் மசூதிக்கும் தோண்டி பார்த்தால் ராமர் பிறந்த இடம் என்பதற்கான ஆதாரம் கிடைக்கும் என்றார்கள். அகழ்வாராய்ச்சி செய்தும் கூட ஒரு ஆதாரமும் அகப்படவில்லை.
இதிலிருந்தே இவர்களின் உரிமைக் கோரல்கள் யாவும் அரசியலுக்காக செய்யும் அற்பத்தனம் என்பதை அறியலாம்.
இரு சமூகத்திற்கு மத்தியிலேயே நீண்ட கால வெறுப்புணர்வை விதைத்து அதனூடாக கலவரத்தை உருவாக்கும் பின்புலத்தில் இந்த உரிமை கோரல்கள் அமைந்துள்ளன.
அத்தகைய உரிமை கோரல்களுக்கு பாஜகவின் ஆசி எப்போதும் உள்ளது என்பதை உணர்த்துவதாகவே யோகியின் இப்பேச்சு உள்ளது.
நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும் அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாமல் மீண்டும் மீண்டும் மதத்தின் பெயரால் கலவரத்தை உருவாக்கும் ஆபத்தான அரசியல் செய்து வருகிறார்கள்.
இவர்களின் மதவாத அரசியலை மக்கள் புரிந்து கொள்வதுடன் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பதே ஜனநாயகத்திற்கு ஆற்றும் கடமையாகும்.