பைபில் ஒளியில் இயேசு

இயேசு என்று அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் தூதர்தான் என திருமறைக் குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் உண்மையான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும்தான் வணங்குமாறு மக்களுக்குக்குப் போதித்தார்கள். இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், இன்ஜீல் வேதங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் ஈஸா எனும் இயேசு அவர்கள் இறைவனிடம் உயர்த்தப்பட்ட பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் அவரை இறைவனுடைய மகன் என்றும், அவர்தான் இறைவன் என்றும் தவறான கொள்கைகளைக் கிறித்தவ மக்களுக்கு மத்தியில் பரப்பினர். இயேசு போதித்த உண்மையான கொள்கைகள் மறைக்கப்பட்டு அவருக்குப் பின் தோன்றிய வழிகேடுகளே இயேசுவின் கொள்கைகளைப் போன்று ஆகிவிட்டது.
ஒரு உண்மைக் கிறித்தவர் தனது கைகளில் வைத்திருக்கும் பைபிளை உண்மையை அறியும் எண்ணத்துடன் படிப்பாரேயானால் நிச்சயமாக திருமறைக் குர்ஆன் குறிப்பிடுவதைப் போல் இயேசு இறைவனின் தூதர்தான் என்பதையும், ஒப்பற்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத்தான் இயேசு வணங்குமாறு மக்களுக்குப் போதித்தார் என்பதையும் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் என்பதை இயேசுவே எடுத்துரைக்கும் வகையிலும், மற்றவர்கள் கூறுவதை இயேசு ஆமோதிக்கும் வகையில் ஏராளமான வசனங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளன. அவற்றை ஒவ்வொரு ஆதாரமாகக் காண்போம்.
ஆதாரம் : 1
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.
(லூக்கா 4 : 43, 44)
மேற்கண்ட வாசகம் இயேசு அவர்கள் தமக்கு முன்னிருந்து மக்களை நோக்கிக் கூறியதாகும்.
“தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப் பட்டேன்” என்று இயேசு கூறியதாக இடம் பெற்றுள்ளது.
தேவனுடைய ராஜ்யம் என்றால் மறுமை வாழ்வைக் குறிப்பதாகும். அதாவது மரணித்திற்குப் பின்னுள்ள வாழ்வைப்பற்றி மக்களுக்குப் போதிப்பதற்காக இறைவனால் அனுப்பட்ட தூதர்தான் இயேசு என்பதை அவர் தமது வார்த்தகளினால் எடுத்துரைத்துள்ளார்.
இறைச் செய்திகளையும், மறுமை வாழ்வைப் பற்றியும் மக்களுக்குப் போதிப்பது இறைத்தூதர்களின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். அதைச் செய்வதற்காகத்தான் இயேசு அனுப்பப்பட்டுள்ளார் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஆதாரம் : 2
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
(யோவான் 5 : 37, 38)
‘என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்’
‘அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை’
ஆகிய வாசகங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் இயேசு என்பதற்குத் தெளிவான சான்றாகும். அதுமட்டுமல்ல!
‘என்னை அனுப்பின பிதா’ என்று இயேசு குறிப்பிடுவதிலிருந்து இயேசு வேறு, பிதா எனும் கடவுள் வேறு தெளிவாகிறது. இயேசு இறைவனுமல்ல! இறைவனுடைய மகனுமல்ல என்பதற்கு இது வெளிப்படையான ஆதாரமாகும்.
“நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளும் இயேசு கடவுளல்ல என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஏனெனில் இயேசுவின் ருபத்தை (தோற்றத்தை) மக்கள் கண்டுள்ளார்கள். அவரின் சப்தத்தை மக்கள் கேட்டிருக்கிறார்கள். எனவே இயேசு தன்னைக் கடவுள் என்று கூறினார் என்பது சிறிதும் கூட அறிவின் அடிப்படையில் சரியானதல்ல என்பதற்கு இவ்வசனமும் சான்றாகும்.
ஆதாரம் : 3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
(யோவான் 17 : 3. 4)
இது இறைவனை நோக்கி இயேசு கூறிய வாசகங்களாகும்.
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்ற இயேசுவின் வார்த்தை அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதை ஒளிவு மறைவின்றி அவரின் வார்த்தைகளிலிருந்தே எடுத்துரைக்கிறேன்.
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும்’’ என்று இயேசு கூறுவதிலிருந்து இயேசு கடவுளல்ல. அவருக்கும் ஒரு தேவன் (கடவுள்) இருக்கிறான் என்பது மெய்யாகிறது.
“நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்” என்ற வாசகமும் இயேசு ஒரே இறைவனையே வணங்கினார். அந்த இறைவன் இட்ட கட்டளைகளையே செய்து முடித்தார் என்பதும் தெளிவாகிறது.
ஆதாரம் : 4
நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (என்று கூறினார்.)
(யோவான் 8 : 41, 42)
“நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்” என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் தான் என்பதற்குத் தெளிவான சான்றாகும். இயேசுவின் இந்த வார்த்தைகள் விளக்கம் கூறுவதற்கு எந்தத் தேவையுமில்லாத அளவிற்கு தெளிவானதாகும்.
“நான் சுயமாய் வரவில்லை. அவரே என்னை அனுப்பினார்” என்ற வாசகம் இயேசு இறைவனால் அனுப்பட்ட தூதர்தான். அவர் இறைவனுமல்ல, இறைவனின் மகனுமல்ல என்பதை எடுத்துரைக்கிறது.
“ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன்” இந்த வாசகம் இயேசுவை நோக்கி யூதர்கள் கூறியதாகும்.
அதற்க இயேசு யூதர்களை நோக்கி “தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள்” என்று பதிலளிக்கிறார்.
இதிலிருந்து “பிதா” என்ற வார்த்தை அனைத்து மக்களுக்குமான ஒரே இறைவனைக் குறிப்பதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் “பிதா” என்றால் தந்தை என்று பொருள். பைபிளின் பல்வேறு வசனங்களில் இயேசு இறைவனை “பிதா” என்ற வார்த்தையால் அழைத்துள்ளார். இதிலிருந்து சிலர் இயேசு கடவுளின் மகன் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான வாதமாகும். ஏனெனில் “ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன்” என்ற யூதர்களின் கூற்றும், “தேவன் உங்கள் பிதா” என்ற இயேசுவின் கூற்றும் அனைத்து மக்களுக்கும் தேவனே பிதாவாக இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறது. இதிலிருந்து இறைவனை நோக்கி “பிதா” என்று பைபிளில் குறிப்பிடப்படுவது இரத்த உறவின் அடிப்படையிலான தந்தை உறவல்ல. மாறாக அனைவரையும் படைத்த உண்மை இறைவனே “பிதா” என்று அழைக்கப்படுகிறார். எனவே “பிதா” என்ற வார்த்தையை வைத்து இயேசு இறைவனின் மகன் என்று வாதிப்பது முற்றிலும் பிழையான வாதமாகும்.
அதே நேரத்தில் இறைவன் அல்லாதவர்களுக்குப் “பிதா” என்ற வார்த்தை பைபிளில் குறிப்பிடப்பட்டால் அது இரத்த உறவின் அடிப்படையிலான தந்தை உறவைக் குறிப்பதாகும்.
ஆதாரம் : 5
அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
(யோவான் 8 : 39, 40)
“தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்” என்று இயேசு தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்த வாசகம் இயேசு இறைவனின் தூதர்தான் என்பதை எடுத்துரைக்கிறது. ஏனெனில் இறைவனிடமிருந்து அருளப்படும் இறைச் செய்திகளை மக்களுக்குப் போதிப்பதுதான் இறைத்தூதரின் பணியாகும். அதைத்தான் இயேசு செய்துள்ளார்.
ஆதாரம் : 6
14. பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
(யோவான் 7 ; 14 – 18)
‘என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது’
‘அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்’
‘தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்’
இவை அனைத்துமே இயேசு கூறிய வாசகங்களாகும். ஒவ்வொரு வாசகத்திலும் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதையும், இறைச் செய்திகளைத்தான் நான் எடுத்துரைக்கிறேன், எனது சுய கருத்துக்களை அல்ல என்று இயேசு உறுதிப்படுத்திக் கூறுகிறார். நடுநிலையோடும், நியாயக் கண்ணோட்டத்துடனும் இவ்வசனங்களைப் படிக்கின்ற யாவரும் இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆதாரம் : 7
27. இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம்; கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
28. அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
29. நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
(யோவான் 7 : 27,28,29)
ஆதாரம் : 8
32. ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்.
(யோவான் 7 : 32, 33)
ஆதாரம் : 9
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோவன் 5 : 23, 24)
ஆதாரம் : 10
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
(மத்தேயு 15 : 24)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் இயேசு இறைவனிடமிருந்து அனுப்பட்ட இறைத்தூதர்தான் என்பதை இயேசுவின் வாய் வார்த்தைகளிலிருந்தே தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதற்குப் பிறகும் இயேசுவை இறைவன் என்றோ, இறைவனின் மகன் என்றோ, கூற முடியுமா?
இயேசு இறைவனின் தூதர்தான் என்பதற்கு பைபிளில் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.
ஆதாரம் : 11
இயேசுவைத் தீர்க்க தரிசி எனக் குறிப்பிடும் பைபிள் வசனங்கள்
“தீர்க்கதரிசி” என்றால் “இறைத்தூதர்” என்று பொருளாகும். பைபிளின் ஏராளமான வசனங்களில் இயேசு தீர்க்கதரிசி என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
(மத்தேயு 5 : 11, 12)
இது இயேசு தனது சீடர்களுக்குச் செய்த உபதேசமாகும்.
“உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என்று இயேசு தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
முன்வாழ்ந்த இறைத்தூதர்களும், அவர்களைப் பின்பற்றிய மக்களும் எவ்வாறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்களோ அதுபோன்ற சோதனைகள் இயேசுவுக்கும், அவரைப் பின்பற்றிய மக்களுக்கும் ஏற்படும். அச்சோதனைகளைப் பொறுத்துக் கொண்டால் மறுமையில் பாக்கியங்களை அடையலாம் என்பதை இயேசு தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தாக இவ்வசனங்கள் குறிப்பிடுகிறது.
இயேசுவுக்கு முன் பல இறைத்தூதர்கள் இவ்வுலகிற்கு வந்துள்ளனர் என்பதும், அவ்வரிசையில்தான் இயேசுவும் இறைத்தூதராக வந்துள்ளார் என்பதையும் இவ்வசனம் எடுத்துரைக்கிறது.
இயேசு தனது சீடர்களுக்குச் செய்த இந்தப் போதனையிலிருந்து இயேசு இறைவனின் தூதர்தான் என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது.
ஆதாரம் : 12
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
(லூக்கா 7 : 11. 17)
“மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார்” என்று மக்கள் குறிப்பிடுவதிலிருந்து யாரும் இயேசுவை கடவுளாகக் கருதவில்லை. அவரும் அவ்வாறு கூறவில்லை. மாறாக இறைவனின் தூதராகவே கருதினார்கள் என்பது தெளிவாகிறது.
ஆதாரம் : 13
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
(மத்தேயு 21 : 10. 11)
இவ்வசனமும் இயேசு இறைத்தூதர்தான் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. அதுமட்டுமல்ல! இயேசு வாழும் காலத்தில் மக்கள் அவரைக் இறைத்தூதராகத்தான் நம்பியுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
ஆதாரம் : 14
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 5 : 17 – 19)
நியாயப் பிரமாணம் என்றால் இறைச் செய்தி ஆகும், தீர்க்க தரிசனங்கள் என்றால் நபிமார்களின் போதனை ஆகும். இயேசு அவர்கள் இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அதை முழுமைப்படுத்துவதற்கே தான் வந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். இயேசுவிற்கு முன்னால் பல தூதர்கள் இவ்வுலகிற்கு வந்துள்ளனர் என்பதையும் இயேசுவின் வார்த்தைகளாலேயே இவ்வசனம் குறிப்பிடுகிறது. இயேசு இவ்வாறு குறிப்பிட்டதாகத் திருக்குர்ஆனும் எடுத்துரைக்கிறது.
“எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்ட சிலவற்றை உங்களுக்கு அனுமதிப்பதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்.) உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்குக் கட்டுப்படுங்கள். என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான். எனவே, அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி” (என்றும் கூறினார்.)
(அல்குர்ஆன் 3:50, 51)
ஆதாரம் : 15
1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
(யோவான் 3 : 1,2)
இயேசுவின் மூலம் நிகழ்ந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவரை நோக்கி கூறப்பட்ட வார்த்தைகள்தான் இவை. எந்த ஒரு இறைத்தூதரும் இறைவனின் கட்டளையில்லாமல் அற்புதங்களைச் செய்ய முடியாது என்பதை இவ்வசனம் குறிப்பிடுகிறது. இயேசு இறைவனின் தூதர்தான் என்பதற்கு இவ்வசனமும் ஓர் சான்றாகும்.
இறைமார்க்கத்தைப் போதித்த போதகரே இயேசு
இறைத்தூதர்களின் முக்கியப் பணிகளில் ஒன்று, இறைவனுடைய மார்க்கத்தை மக்களுக்குப் போதிப்பதாகும். இயேசு மக்களுக்கு இறைமார்க்கத்தைப் போதித்தார், கற்றுக் கொடுத்தார் என்பதைப் பைபிளின் பல வசனங்கள் குறிப்பிடுகின்றன.
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.
(மத்தேயு 4 : 23)
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
(மாற்கு 1 : 14, 15)
பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
(லூக்கா 4 : 31, 32)
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
(யோவான் 8 : 31, 32)
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
( மத்தேயு 4 : 17)
(இயேசு தனது சீஷர்களிடம்) உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
(மத்தேயு 6 : 8 – 10)
இயேசு இறைவேதத்தையும், வணக்க வழிபாடுகள் செய்யும் முறைகளையும், இன்னும் பல உபதேசங்களையும் மக்களுக்குப் போதித்தார், கற்றுக் கொடுத்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து இயேசு கடவுளுமல்ல! கடவுளின் மகனுமல்ல! அவர் இறைவனின் தூதர்தான் என்பது பைபிள் வசனங்கள் மூலமாகவே உறுதியாகின்றது.