இஃதிகாஃப் சட்டங்கள்
இஃதிகாஃப் எனும் வணக்கம்
இஃதிகாப் என்ற சொல்லுக்கு ”தங்குதல்” என்ற பொருள். இஸ்லாமிய வழக்கில் வழிபாடுகள் செய்வதற்காக பள்ளியில் தங்குவதைக் குறிக்கும். இதுவும் ஓரு வணக்கமாகும். இந்த வணக்கம் முந்தைய காலத்திலும் இருந்துள்ளது.
இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.
திருக்குர்ஆன் 2:125
இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபியிடம் கஅபாவை புதுப்பிக்க வேண்டிய நோக்கத்தைக் கூறும் போது, அதில் இஃதிகாஃப் இருப்பதையும் அல்லாஹ் சேர்த்து குறிப்பிடுகிறான்.
இதன் மூலம் முந்தைய காலத்திலும் இஃதிகாஃப் எனும் வணக்கம் இருந்துள்ளது; அதனை பள்ளிவாசலில் தான் செய்ய வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
மற்ற வணக்கங்களைப் போன்று இஃதிகாஃபையும் அல்லாஹ்விடம் நன்மையைப் பெற வேண்டும் என்பதற்காக செய்ய வேண்டும். இதற்கு மாறாக சில முஸ்லிம்கள், நல்லடியார்களின் ஆசியும் அருளும் வேண்டுமென்று தர்காவில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது இணை வைப்புக் காரியமாகும் .
ரமளானில் இஃதிகாஃப்
நபியவர்கள் இஃதிகாஃப் எனும் வணக்கத்தை ரமளானில் அதிகம் செய்துள்ளார்கள். இதன் மூலம் அதிகமான வணக்க வழிபாடுகளை செய்யும் நிலையில் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள வழிகாட்டியுள்ளார்கள்.
‘நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்) வர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 813
இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம் அதிகமான அமல்களைச் செய்வதாகும். அந்த அமல்களை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில் செய்து நன்மைகளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதே ரமளானில் இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம். எனவே, ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது .
இஃதிகாஃபின் துவக்கம்
ரமளானில் கடைசிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2041
மஃரிப் தான் நாளின் துவக்கம். எனவே இஃதிகாஃப் இருப்பதற்குரிய நாளை முழுமையாக அடைய வேண்டுமெனில் 20 வது நாளின் ஃபஜ்ருக்குப் பிற்கு இஃதிகாஃப் இருக்க பள்ளிக்குச் சென்று விட வேண்டும்.
இஃதிகாபின் முடிவு நேரம்
ஆரம்பத்தில் நபியவர்கள் ரமளானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு தான் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்க வழிகாட்டினார்கள். இது தொடர்பான செய்திகளின் வழியாக இஃதிகாஃபின் முடிவு நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்து ஒன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல்: புகாரி 2018
ரமளான் மாதம் 29ல் முடிந்ததும் மஃக்ரிபில் ஷவ்வால் பிறை தென்பட்டுவிட்டால் இஃதிகாப் இருப்பவர் அந்த இரவே வீட்டிற்கு சென்று விடலாம்.
பிறை தெரியாவிட்டால், ரமளான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்துவிட்டு அதாவது அடுத்த மஃரிப் தொழுகைக்குப் பிறகு தான் இல்லம் திரும்ப வேண்டும்.
இஃதிகாஃப் இருப்பவர்கள் பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் செல்ல வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?
பள்ளிவாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்து விட்டோம். பள்ளிவாசலுக்கு வந்து பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2041
ஆயிஷா (ரலி) இஃதிகாஃப் இருக்க அனுமதி கோரிய போது நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். எனவே பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். கணவன் மனைவி ஆகிய இருவம் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.
தமது மனைவியுடன் நபியவர்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரீ 309
அந்நிய ஆணுடன் எந்தப் பெண்ணும் தனியாக இருக்கக் கூடாது என்பது பொதுவான சட்டம். ஆகவே, இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது அவசியம்.
இதற்குப் பதிலாக, பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது. பள்ளியில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும். இதற்கு மாறாக வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் ஆகும்.
“பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அலீ அல்அஸ்தீ
நூல்: பைஹகீ 8573
இஃதிகாஃப் இருக்க கூடாரம் அமைக்கலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, “இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்வதற்கு நற்செயல் புரியும் எண்ணம் தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!” என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2041
பெண்கள் இஃதிகாஃப் இருந்ததை நபியவர்கள் வெறுக்க வில்லை. அதற்காக பள்ளியில் கூடாரங்களை அமைத்துக் கொண்டதைத் தான் கண்டித்தார்கள். அவற்றை அவிழ்த்து எறியச் சொன்னார்கள். எனவே, இஃதிகாஃபின் போது கூடாரங்களை அமைப்பது கூடாது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான சட்டம்.
மற்ற மாதங்களில் இஃதிகாஃப் இருக்கலாமா?
அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் இஃதிகாஃப் இருந்துள்ளதால், ரமளான் அல்லாத மாதங்களிலும் நாம் இஃதிகாஃப் இருக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2041
ஒரு நாள் இஃதிகாஃப் இருக்கலாம்?
இஃதிகாஃப் இருந்தால் பத்து நாட்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நாளும் கூட இருக்கலாம். எந்த மாத்தில் வேண்டுமானாலும் இஃதிகாஃப் இருக்கலாம்.
மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உமது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 2032
உமர் (ரலி) அவர்கள் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்தார்கள். அவர்கள் கால நேரம் குறிப்பிடாமல் பொதுவாகவே நேர்ச்சை செய்தார்கள். அதை நிறைவேற்ற நபியவர்கள் உத்தரவு இட்டார்கள். இதன் மூலம் எந்த மாதத்திலும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இஃதிகாஃப் இருக்காலம் என்பது தெளிவாகிறது.
அதேசமயம், ரமளானில் லைலத்துல் கத்ரை அடைய இஃதிகாஃப் இருப்பவர்கள் கடைசி பத்து நாட்களிலும் இருப்பதே சிறந்தது. அவ்வாறுதான் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
இஃதிகாஃபின் போது செய்யக் கூடாதவை
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிற்றிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(திருக்குர்ஆன் 2:187)
இஃதிகாஃப் இருப்பவர் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று அல்லாஹ் தடுத்துள்ளான். வேறு சில கட்டுப்பாடுகளையும் நபியவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலும் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 2115
இஃதிகாஃப் போது குளிப்பு கடமையானால்?
குளிப்பு கடமையாக இருக்கும் நிலையில் பள்ளியில் தங்கக் கூடாது என்பது பொதுவான சட்டமாகும்.
குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.
திருக்குர்ஆ 4: 43
குளிப்புக் கடமையானால் குளித்து விட்டு தான் பள்ளிக்குள் இஃதிகாஃபை தொடர வேண்டும். அவ்வாறு குளிப்பதற்காக பள்ளிவாசலை விட்டு வெளியேறுவது இஃதிகாஃப் இருப்போர் மீது குற்றமாகாது.
அவசியத் தேவைக்கு வெளியே செல்லலாம்
நோயாளியை விசாரிப்பதும், ஜனாஸாவில் பங்கெடுப்பதும் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும். இதற்காக கூட பள்ளியை விட்டு வெளியேற நபியவர்கள் தடுத்திருக்கும் போது, இஃதிகாஃப் இருப்போர் தேவையில்லாமல் பள்ளிக்கு வெளியே செல்வது கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரி விடுவேன். அவர்கள் தமது தலையை வீட்டுக்குள் நீட்டுவார்கள். மனிதனின் அவசியத் தேவைக்காக (மலஜலம் கழித்தல்) தவிர வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2029
இந்தச் செய்தி மூலம், எந்தவொரு காரியத்தையும் முடிந்தளவு பள்ளியை விட்டு வெளியேறாமல் செய்ய முயற்சிக்க வேண்டும் என்பது விளங்குகிறது.
அவசியத் தேவைகள், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பள்ளிக்கு வெளியே செல்லலாம் என்பதற்கு பின்வரும் செய்தி சான்றாகும்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: புகாரி 2035, 2038
மாதவிடாய் பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?
குளிப்புக் கடமையாக இருப்பவர் பள்ளிவாசலில் தங்குவது கூடாது. எனவே மாதவிடாய் பெண்கள் இஃதிகாஃப் இருக்க கூடாது.
சிலருக்கு வழக்கமான மாதவிடாய் நாட்களுக்கு பிறகும் தொடர்ந்து உதிரப் போக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது ஒரு நோயாகும். இந்தப் பாதிப்புள்ளவர்கள் வழக்கமான மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு குளித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கலாம். இந்த நிலையில் இஃதிகாஃப் இருப்பது குற்றமில்லை.
நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 309, 310