இஸ்ரேலில் சனிக்கிழமை அதிகாலை முதல் கேட்கத் துவங்கிய குண்டுச் சத்தம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
ஹமாஸ் படை சுமார் 5000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி விட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஹமாஸின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலின் இராணுவத் தளவாடங்களும் தப்பவில்லை.
பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு மத்தியில் நடைபெற்ற இத்தனை ஆண்டு காலத் தாக்குதல்களில் இப்படி யோ£¢ இழப்பை இஸ்ரேல் இதுவரை சந்திக்கவில்லை என்கிறார்கள்.
எனவே இஸ்ரேலும் திருப்பித் தாக்குதலை நடத்தியுள்ளது.
காசாவில் உள்ளவர்கள் வெளியேறிச் செல்லுங்கள் எங்கள் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று பகிரங்க அறிவிப்பைச் செய்து யுத்தத்தைத் துவங்கி விட்டார்கள்.
வழக்கம் போல் காசாவில் உள்ள மக்களின் குடியிருப்புகளில் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கிறார்கள்.
இனி சில மாதங்களுக்கேனும் இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் வான்வெளியில் ஏவுகணைகளின் சீற்றமும் புகைமூட்டமும் நிலத்தில் இரத்த ஆறுகளும் ஓடுவது உறுதி.
எப்படியும் அதிகளவில் பலியாகப் போவது யுத்தத்திற்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களே.
இந்த யுத்தத்திற்கு என்ன காரணம்? யார் மீது தவறு என்பதையெல்லாம் ஓரிரு வரிகளில் கூறிவிட முடியாது.
இஸ்ரேலில் தற்போது நடப்பவற்றைப் புரிந்து கொள்ள இஸ்ரேல் எனும் நாடு உருவான வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் யூதர்களுக்கென்று சொந்த நாடு கிடையாது. இருக்கும் இடங்களில் எல்லாம் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இரண்டாம் உலகப்போரின் போது கொடுமையின் உச்சத்தையே அடைந்தார்கள்.
ஆங்காங்கே இருந்து தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார்கள். அப்போது பல்வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள் பாலஸ்தீன நிலப்பகுதியில் வந்து குடியேறத்துவங்கினார்கள்.
பாலஸ்தீன மக்களும் அவர்களை அனுமதித்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக யூதர்களின் குடியேற்றம் அதிகரிக்கத்துவங்கியது.
தங்களுக்கு இருக்கும் செல்வ வளத்தை வைத்துக் கொண்டு அங்குள்ள ஏழைகளிடம் இருந்து நிலங்களையும் வாங்கினார்கள். வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள ஏழைகளிடமிருந்து நிலம் வாங்குவதைப் போல.
இப்படியே அவர்களின் படிப்படியாக அதிகரித்து. ஒருகட்டத்தில் தங்களது முன்னோர்களின் வசித்த புனித நிலம் இதுதான் என்றும் இஸ்ரவேல் என்று தங்களது வேதத்தில் குறிப்பிடப்படும் பூமி (இஸ்ரேல்) இது தான் என்றும் கதைகூற ஆரம்பித்தனர்.
இப்படித்தான் யூத வந்தேறிகள் பாலஸ்தீனப் பூமிக்குச் சொந்தம் கொண்டாடினார்கள்.
பிறகு உலகில் தங்களுக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பாலஸ்தீனப் பகுதியிலிருந்து அதன் சொந்த மக்களை விரட்டியடித்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு அதற்கு இஸ்ரேல் என்று பெயரிட்டது. தங்களைத் தனிநாடாகவும் அறிவித்துக் கொண்டது.
1947 க்கு முன்பு இஸ்ரேல் எனும் ஒரு நாடே கிடையாது.
இப்படிப் புராணக்கதைகளையும் மத நம்பிக்கையையும் கூறி பாலஸ்தீனத்திடமிருந்து திருடி உருவான நாடு தான் இஸ்ரேல்.
எப்படி இந்தியாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாபர் மஸ்ஜிதை சங்பரிவாரக் குழுக்கள் தங்களது மத நம்பிக்கையைச் சொல்லி இடித்துத் தகர்த்து அதன் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டார்களோ ஏறக்குறைய அதே நிலைதான்.
அதன் பின் யூதர்களுக்கு உள்ள செல்வாக்கின் காரணத்தால் உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.
இஸ்ரேல் எனும் திருட்டு நாடு இப்படித்தான் உருவானது. இந்த உண்மையை உலகிலுள்ள அத்தனை பேரும் நன்கறிவார்கள்.
பாலஸ்தீன மக்களோ தங்களுக்கு நடந்த கொடுமையைச் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.
ஆனால் சிறுநிலத்தைப் பிடுங்கிக் கொண்டதோடு யூதர்கள் நிற்கவில்லை.
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளிடமிருந்து ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க ஆரம்பித்தார்கள்.
முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையைப் பறித்தார்கள்.
பாலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளையும் ஆக்கிரமித்தார்கள்.
மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழத் தடை விதிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது என்று கொடுமை செய்தார்கள்.
அதையும் மீறித் தொழுதால் சிறுவர்கள் என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தும் அக்கிரமத்தை அரங்கேற்றினார்கள்.
சொந்த நாட்டு மக்கள் வந்தேறிகள் போலவும் யூத வந்தேறிகள் பூர்வகுடிகள் போலவும் கதை மாறிப்போனது.
உலக நாடுகள் பார்க்கும் வகையில் இஸ்ரேல் வெறியாட்டம் போட்டது.
இதுவரை இஸ்ரேலால் இலட்சக்கணக்கான பாலஸ்தீனிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட.
எப்போதும் கேட்கும் இஸ்ரேலின் குண்டுச் சத்தம் பொறுக்காமல் உயிர் பிழைத்தால் போதும் என்றெண்ணி அண்டை நாடுகளுக்கு அகதிகளாகப் போனவர்கள் பலர்.
இப்படி பாலஸ்தீன நிலத்தின் மண்ணின் மைந்தர்களையே அகதிகளாக விரட்டியடித்த பெருமை இஸ்ரேலுக்கு உண்டு.
உலக நாடுகளின் போர் விதிகள் எதையும் இஸ்ரேல் பேணியதில்லை.
இப்படி இஸ்ரேலின் கொட்டம் அதிகரிக்கும் போது பாலஸ்தீனத்தில் விடுதலை கேட்கும் அமைப்புகள், குழுக்கள் எழுச்சி பெறத்துவங்கியது. ஆயுதம் தாங்கிய குழுக்கள் பல தோன்றின. அவர்களின் கோரிக்கை பாலஸ்தீன மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் – விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்.
இஸ்ரேல் தனது அத்துமீறலை, அடக்குமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்களிடமிருந்து பிடுங்கிய நிலத்தைத் தங்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் சொந்த நாட்டு மக்களின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாகவே இஸ்ரேலின் மீதான தாக்குதல்கள் உள்ளது.
இந்த அடிப்படையிலேயே கடந்த காலத்தில் பாலஸ்தீனத்திற்கு இந்தியா தனது ஆதரவை அளித்தது.
1974 ல் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு இந்தியா தனது ஆதரவை அளித்தது.
உலக நாடுகள் பலவும் 1988 பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கத் தயங்கிய வேளையில் 1988 ல் இந்தியா அங்கீகரித்தது.
2003 ம் ஆண்டு இஸ்ரேலின் தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவு அளித்து பாலஸ்தீன் பக்கமே நின்றது.
இப்படி பல்வேறு நேரங்களில் பாலஸ்தீன மக்களின் பக்கம் நின்ற இந்தியா இப்போது இஸ்ரேலுடன் நிற்பதாக அறிவித்துள்ளது.
மோடியைப் பிரதமராகக் கொண்ட இந்தியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
சங்பரிவாரக் கும்பல்கள் சமூக வலைத்தளத்தில் புகுந்து இஸ்ரேல் மீதான தாக்குதல்களை இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பிதற்றுகின்றனர்.
அப்படியென்றால் இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடிய நேதாஜியின் படைக்கு என்ன பெயர்? அது எந்த வகைப் பயங்கரவாதம்?
இப்போது இஸ்ரேல் மீதான தாக்குதலைப் பயங்கரவாதம் என்று கூறுபவர்கள் இதற்கு முன்பு இஸ்ரேலின் தாக்குதல்களால் அப்பாவி பாலஸ்தீனியர்கள் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பலரும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதைப் பயங்கரவாதம் எனக் கூற மறந்தது ஏன்?
ஆயுதம் தாங்கிய குழுக்களால் மக்கள் கொல்லப்படும் போது பயங்கரவாதமாக இருப்பது அதே மக்கள் அரசால் கொல்லப்படும் போது மட்டும் எப்படி யுத்தம் என்று மாறுகிறது?
அப்பாவி மக்கள் உயிர்ப் பலியாவதற்கு யார் காரணமாக இருந்தாலும் குற்றமே. அது ஹமாஸாக இருந்தாலும் சரி. இஸ்ரேலாக இருந்தாலும் சரி. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இஸ்ரேலிய அரசால் குழந்தைகள் உட்படக் கொத்துக் கொத்தாகப் பலர் செத்து மடியும் போது அமைதி காப்பவர்கள் இஸ்ரேலின் அட்டூழியத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாலஸ்தீனியர்கள் திருப்பித் தாக்கினால் மட்டும் பயங்கரவாதம் என்பது ஒட்டு மொத்த பாலஸ்தீனியர்களை உலக அரங்கில் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் முயற்சியாகும்.
பலஸ்தீன் நாட்டின் அதிபராக அப்பாஸ் இருக்கிறார். அவர் கூறுவதைப் பாருங்கள்.
“பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறிக் குடியேறுபவர்களுக்கு எதிராக, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை பாலஸ்தீனியர்களுக்கு உண்டு”.
எனவே தற்போது இஸ்ரேலில் நடைபெறுவதற்கு முழுக்காரணமும் இஸ்ரேல் தான். பாலஸ்தீனியர்களை போராளிகளாக மாற்றுவது அவர்களே. அவர்களின் அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளுமே அந்தப் பூமியை யுத்தப் பூமியாக மாற்றியுள்ளது.
பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை எனும் பெயரில் இன அழிப்பில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. முஸ்லிம்களின் வழிபாட்டுரிமையைப் பறிக்கின்றது. இஸ்ரேலின் அட்டூழியத்தைத் தடுத்து விட்டால் பாலஸ்தீனத்தில் அமைதி திரும்பி விடும்.
இஸ்ரேல் திருந்தாத வரை அங்கு நிகழும் யுத்தச் சத்தத்தை எவராலும் நிறுத்த இயலாது.
இவற்றுக்கிடையில் சிக்கிக் கொண்டு -தினமும் இரத்தத்தையும் பீரங்கி சத்தத்தையும் கேட்டுக் கொண்டே வாழ்க்கையைக் கழிக்கும் அப்பாவி மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது.
அவர்களின் வாழ்வில் அமைதி ஏற்படவாவது உலக நாடுகள் இதில் தலையிட்டுத் தக்கத் தீர்வை அளித்திட முன்வர வேண்டும்.