இது தான் ராமராஜ்ஜியமா?

முஸ்லிம்கள் மீது வன்மம் பரப்பும் தினமணிக்கு மறுப்பு

இந்திய பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி 22 அன்று ராமர்கோவில் திறப்பு நடைபெற்றது. ஒரு மதச்சார்பற்ற அரசின் மையத்தலைவர் வழிபாட்டுத்தல திறப்பில்  அரசியல் சாயம் பூசியதை பலரும் கண்டித்து எழுதினர்.

பிராமணரல்லாத பிரதமர் முன்னின்று ராமர் கோவிலுக்கு பிராண பிரதிஷ்டை செய்வது மதச்சடங்குகளை மீறும் செயல் என்று பல சங்கராச்சாரியர்கள் விமர்சிக்க பள்ளிவாசலை இடித்து கட்டிய கோவிலை திறக்க இத்தனை கொண்டாட்டங்கள் தேவை தானா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்தது.

இந்நிலையில் கோவில் திறப்புக்கு மறுநாள் 23.01.24 அன்று தினமணி ராமர் கோவில் திறப்பை கொண்டாடி தலையங்கம் தீட்டியது.

மலரட்டும் ராமராஜ்ஜியம் எனும் தலைப்பில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தானொரு அக்மார்க் ஆர்எஸ்எஸின் தொண்டன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டன.

தினமணியின் தலையங்கத்தை படிக்கும் போது ஒரு கணம் ஆர்எஸ்எஸின் ஆர்கனைஸர் பத்திரிக்கையை படிக்கின்றோமா? என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது.

பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ஆற்றிய உரை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தாக கூறி அவ்விருவருக்கும் தினமணி புகழாரம் சூட்டுகின்றது.

அனைவரையும் அரவணைத்து செல்லும் மனநிலை அவர்களிடத்தில் காணப்பட்டதாக கூறி மெய்சிலிர்க்கின்றது.

500 ஆண்டுகால பள்ளிவாசல் இடிப்பு, குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அழிப்பு, இந்தியாவெங்கும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என அத்தனைக்கும் இவர்களே மூளையாகவும் கருவியாகவும் இருந்துள்ளார்கள் என்பதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.

இவர்கள் தூவிய வெறுப்பு விதையினாலே மாட்டிறைச்சியின் பெயராலும் ஜெய் சிரி ராம் கோஷத்தின் பெயராலும் பல முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டார்கள்.

அப்போது எல்லாம் அமைதி காத்து வேடிக்கை பார்த்த இவர்கள் தாம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டா?

அப்படிக்கூறுவதற்கு தினமணி வெட்கி தலைகுனிய வேண்டும். அல்லது மனசாட்சியையும் மூளையையும் ஒருசேர கழட்டி வைத்திருக்க வேண்டும். இரண்டுமே தினமணிக்கு புதிதல்ல.

அடுத்து தினமணி இவ்வாறு கூறுகிறது

மசூதிகள் கட்டப்படுவது, இடிக்கப்படுவது, மாற்றி அமைப்பது ஆகியவற்றுக்கு இஸ்லாமில் எந்த தடையும்  இல்லை. சவூதி அரேபியா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கட்டமைப்பு திட்டங்களுக்காக பல மசூதிகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமில் பள்ளிவாசல் இடிக்கப்படுவதும் இடம் மாற்றி அமைப்பதும் சாதாரணமான ஒன்று தானாம். அதை தேவையில்லாமல் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் தலைவர்களும் அரசியலாக்கி விட்டார்கள் என்கிறது.

பள்ளிவாசல் இடிப்பை, குற்றச்செயலை, காட்டுமிராண்டித்தனத்தை எவ்வளவு நாசூக்காக சாதாரணமாக்க முயல்கிறார்கள்? மூளை மழுங்கியவர்களால் மட்டுமே இப்படியொரு வாதத்தை முன்வைக்க முடியும்.

இஸ்லாமில் பள்ளிவாசலை இடித்து அதை வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்க அனுமதி இருப்பதால் இவர்கள் பள்ளிவாசலை அத்துமீறி இடித்து தரைமட்டாக்கி வெளியே போய் பள்ளியை கட்டிக் கொள் என்பார்களாம்?

தினமணிக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசல்களை கட்டிக் கொண்டு இஸ்லாமில் எங்கு வேண்டுமானாலும் பள்ளிவாசல்களை கட்டிக் கொள்ளலாம் என்று கூறினால் வைத்தியநாதன் ஏற்பாரா?

தினமணி அலுவலகம் அம்பத்தூரில் உள்ள எக்ஸ்பிரஸ் கார்டனில் தான் இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனமா என்ன? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டிக் கொள்வதற்காக அலுவலகத்தை இடிக்க யாரும் முற்பட்டால் அப்போதும் இப்படித்தான் எழுதுவார்களா?

ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை தன் தேவைக்காக மறுசீரமப்பு செய்வது, அதற்காக இடிப்பதும் அதே இடத்தை அடுத்தவன் அபகரிப்பதற்காக இடித்து தள்ளுவதும் ஒன்றா?

இரண்டையும் ஒன்று போல் சமமாக பாவித்து பலரும் வாசிக்கும் பத்திரிக்கையில் பகிரங்கமாக எழுத முடிகிறது என்றால் இதிலிருந்தே இவர்களின் சிந்தனையின் தரம் என்ன என்பதை அறியலாம்.

பாபர் மஸ்ஜித் இடிப்பை பற்றி இப்போது இப்படி கூவும் தினமணி இதற்கு முன்பு வேறு விதமாக கூவியதும் உண்டு.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் சதிச் செயல்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட 32 நபர்களை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020 அக்டோபர் விடுவித்தது.

அப்போது இடிப்பும் தீர்ப்பும் என்று தலைப்பிட்டு தினமணி தலையங்கம் எழுதியது. அத்வானி, முரளி மனோகர்ஜோஷி போன்றோர் அப்பழுக்கற்ற அப்பாவிகள் என்றே அன்றும் எழுதியது. இருப்பினும் சில விஷயங்களை சுட்டிக்காட்ட தவறவில்லை.

தினமணி அன்றைய தலையங்கத்தின் ஒரு பகுதி

தீர்ப்பின் சில அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை. முஸ்லிம்கள் தொழுகை நடத்தாமல் கைவிடப்பட்ட கட்டடமாக இருந்ததால் இந்திய குற்றவியல் சட்டத்தின் 295 ஆவது பிரிவின் படி மத வழிபாட்டு தலத்தை இடித்த குற்றம் ஏற்படவில்லை என்பது தவறான கண்ணோட்டம்.

பிறகு எதற்காக மாவட்ட நிர்வாகம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்ட வேண்டும்.?

அது ஆலயமோ மாதாகோயிலோ மசூதியோ எதுவாக இருந்தாலும் வழிபாடு நடக்கவில்லை என்று கூறி இடிக்கும் உரிமை கும்பல்களுக்கு கிடையாது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த புகைப்படங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி சேனல்களின் ஒளிக்காட்சி இருக்கிறது. 28 ஆண்டுகள் விசாரிக்க அவகாசம் தரப்பட்டிருக்கின்றது. அப்படி இருந்தும் அன்றைய பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட ஒருவரைக் கூட அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த சிபிஐயால் முடியவில்லை என்று சொன்னால் அது கையலாகத்தனமா? மெத்தனமா இல்லை பொறுப்பற்றத்தனமா, என்னவென்பது?

பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை கண்டு மனம் குமுறி தினமணி எழுதிய வார்த்தைகள் இவை.

வழிபாடு நடக்கவில்லை என்று கூறி பள்ளிவாசலை இடிக்கும் உரிமை எந்த கும்பலுக்கும் இல்லை என்று சொன்னதுடன் அதனால் வழிபாட்டுத்தலத்தை இடித்த குற்றம் வராது என்று சொன்ன நீதிபதியையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

பள்ளி இடிப்புக்கு எதிராக இவ்வாறு பொங்கி நான்காண்டுகள் கூட கடக்கவில்லை.

இப்போது ராமராஜ்ஜியம் என்றும் பள்ளிவாசலை இடிப்பதும் கட்டுவதும் சர்வ சாதாரணம் என்று சரடு விடுகின்றது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ல் பாபர் மஸ்ஜித் குறித்து தீர்ப்பளித்த போது அப்போதும் விமர்சனம் செய்தே தினமணி எழுதியது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள் தான். அது சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர நீதிமன்ற தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்க கூடாது. ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கை பிரச்சினைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கின்றது.

ஒரு நீதிமன்றத்தில் பணி நம்பிக்கைக்கு தீர்ப்பு கூறுவதல்ல. சட்டப்படி இடம் யாருக்கு சொந்தம் என்று தீர்மானிப்பது தான்.

நல்லவேளை இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்கு தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்திற்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னமோ?

இவையெல்லாம் தினமணி எழுதிய வார்த்தைகள் தாம்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்று பங்காக பிரித்து வழங்கிய தீர்ப்பை கட்டப்பஞ்சாயத்துக்கு சரி. நீதிமன்ற தீர்ப்புக்கு இது சரிவருமா? நீதிமன்றத்தாலும் இப்படியொரு தீர்ப்பை எழுத முடியுமா? என கேள்வியால் துளைத்தெடுத்த தினமணி தான் இன்று பள்ளிவாசலை இடிக்கலாம் கட்டலாம் இஸ்லாமில் அது அனுமதிக்கப்பட்டது என்று பிதற்றுகின்றது.

காலங்கள் மாற மாற காட்சிகள் எவ்வளவு வேகமாக மாறுகிறது.

அக்காலத்தில் மன்னர்கள் புகழ் பாடும் புலவர்கள் இருப்பார்கள். மன்னர் மனம் மகிழ வாய்க்கு வந்தபடி புகழ்ந்து மன்னர் அள்ளி வீசும் பொற்கிழியை பெற்று செல்வார்கள். அத்தகைய புலவர்களின் இடத்தை நிரப்புகிறது தினமணி.