பேருந்துகளில் பாடல்களை ஒலிக்க விடும் தொல்லைக்கு முற்றுபுள்ளி இல்லையா?

பாடல்கள், சினிமா போன்ற வீணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஒருவரது தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. ஆனால் இன்று அதை வெறுப்போர் மீதும் திணிக்கும் வகையில் கடும் சத்தத்துடன் பேருந்துகளில் செல்போன்களில் பாடல்களை ஒலிக்க விடுவது அதிகமாகவே உள்ளது.
ஆளாளுக்கு தங்களது செல்போன்களில் தாங்கள் விரும்பிய பாடல்களை சத்தமாக ஒலிக்க விடுவதால் அருகில் பயணிக்கும் சக பயணிகளுக்கு கடும் தொந்தரவும் சிலருக்கு தலைவலியும் ஏற்படுகிறது.
இந்தத் தொல்லைகளை ஒரளவு கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடகா அரசுப் போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது.
கர்நாடகா அரசுப் போக்குவரத்து கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
பேருந்தில் பயணிப்போர் செல்போன்களில் சத்தத்துடன் பாடல்களை கேட்பது, திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
குறிப்பாக நீண்ட தூர பயணத்தில் இரவு நேரத்தில் தூங்கும் பயணிகளுக்கு இந்த பாடல், திரைப்பட சத்தம் கடும் இடையூறை ஏற்படுத்தியதால் அடிதடி சண்டைகள் ஏற்பட்டு உயர்நீதிமன்றம் வரை வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
எனவே இத்தகைய பிரச்சனைகளை களையும் விதமாக கர்நாடகா மாநில அரசுப் பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது போன்ற செயல்களுக்கு தடை விதித்து அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.
உத்தரவை மீறி சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தமாக பாடல்களை கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை பேருந்திலிருந்து இறக்கி விட ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு இறக்கி விடப்படும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது என கர்நாடகா மாநிலப் போக்குவரத்து கழக இயக்குனர் சிவயோகி கலசத் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
உண்மையில் வரவேற்கத்தக்க உத்தரவு இது. ஆனாலும் இது போதுமானதாக இல்லை.
இந்த உத்தரவு கர்நாடகா மாநில அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் தான் பொருந்தும். தனியார் பேருந்துகளை இது கட்டுப்படுத்தாது.
அது தவிர செல்போனில் அல்லாமல் சில பேருந்துகளிலேயே கடும் சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவது, தொலைக்காட்சி மூலம் ஆபாச சினிமாக்களை ஒளிபரப்புவது என பயணிகளுக்கு தொல்லை தருபவற்றின் பட்டியல்கள் உள்ளன.
அவற்றுக்கும் கடிவாளம் இடும் வகையில் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தால் பயணிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
ஒரு காலத்தில் மிகுந்த ரசனைக்குரியதாக இருந்த பேருந்துப் பயணங்களை பேருந்துகளில் ஒலிக்க விடும் பாடல்கள், சினிமாக்கள் கெடுத்து விட்டன.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் அளவு ஆபாசமான பாடல்களை எல்லாம் ஒலிக்க விடுகின்றனர்.
மாணவ, மாணவியர்களின் பிஞ்சு உள்ளங்களில் ஆபாச பாடல்கள், திரைப்படங்கள் மூலம் தீய சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன.
வயதானவர்கள், நோயாளிகள், உறவினர் இறப்பிற்காக செல்பவர்கள், இதய நோயாளிகள் என பலரும் பயணிக்கும் பேருந்துகளில் அவர்களது மனநிலையையும் உடல் நலனையும் ஒரு சேர சிதைக்கும் வகையில் இத்தகு பாடல்கள், திரைப்பட ஒளிபரப்பு அமைந்து விடுகிறது.
அதிலும் தற்போதைய பேருந்துகளில் திரையரங்குகளை பின்னுக்குத்தள்ளும் அளவு அதிநவீன சவுண்ட் சிஸ்டம்களை எல்லாம் பொருத்தியுள்ளனர்.
சில இருக்கைகளில் தலைக்கு நேராக இந்த சவுண்ட் ஸ்பீக்கர்கள் இருந்து பயணிகளை ஒரு வழி பண்ணி விடுகிறது. நமது காதுகளின் ஜவ்வை உண்மையிலேயே கிழியச் செய்யும் அளவு அதிக சப்தத்தை வைத்து பயணிகளை இம்சிக்கின்றனர்.
பிறருக்கு இடையூறு இல்லாமல் செல்போனில் ஒருவர் கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார் எனில் அது அவர் சம்பந்தப்பட்ட விஷயம்.
ஆனால் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் பாடல்களை கேட்பது, சினிமாக்களைப் பார்ப்பது, மற்றும் பேருந்துகளிலேயே சத்தமாக இவற்றை ஒலிக்க விடுவது போன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும்.
தமிழக அரசு மற்றும் தமிழக போக்குவரத்து கழகம் இவற்றை கவனத்தில் கொண்டு சீர் செய்தால் பயணிகள் நிம்மதியாக பயணிக்க வழியேற்படும்.