மீண்டும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை வந்துள்ளதே?

ஒரு முறை மட்டுமே பயன்படும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு 2023 ஜூலை 1 முதல் நாடு முழுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாலித்தீன் பைகளுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடாகா மற்றும் பஞ்சாபில் 2016 லேயே தடை விதிக்கப்பட்டு விட்டது.
அது போலவே ஜார்க்கண்ட், மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பாலித்தீன் பைகளுக்கு முன்னரே தடை உள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் சுற்றுச் சூழல் அமைச்சகம் பாலித்தீன் பைகளை பயன்படுத்த நாடு முழுவதும் தடை விதித்தது.
இப்படி பிளாஸ்டிக் தடை என்பது பல தருணங்களில் சொல்லப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவது திருப்திகரமாக இல்லை என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே தான் தற்போது மீண்டும் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் வகையிலான பிளாஸ்டிக் கப், தட்டுகள், பட்ஸ் எனப்படும் காது குடையும் குச்சிகள், குளிர்பானம் குடிக்க பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உள்ளிட்டவை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
இப்பொருள்கள் விற்பனையை கண்காணித்து தடை செய்யும் பொறுப்பு அந்தந்த மாநில பகுதி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களின் பயன்பாட்டை குறைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை சரியாக, மக்கள் இலகுவாக கடைபிடிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தற்போதைய காலத்தில் எல்லாமே பிளாஸ்டிக் மயமாகி விட்டது. அனைத்திலும் பிளாஸ்டிக் ஊடுருவி அதற்கு மக்களும் நன்கு பழக்கப்பட்ட பிறகு திடீரென்று அதை தவிர்க்க வேண்டும் என்றால் எல்லாவற்றிலும் மக்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாட்டை வழங்க வேண்டும்.
மக்களில் யாரும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தியே தீருவேன் என்று அடம் பிடிப்பதில்லை.
அரசும் தனியார் நிறுவனங்களும் தான் இத்தகு பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் பயன்படுத்த வழிவகுத்தது.
அதே அரசும் தனியார் நிறுவனங்களும் உரிய மாற்றை ஏற்பாடு செய்யாமல் அதை மக்களிடம் ஊக்கப்படுத்தாமல் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்றால் மக்கள் எப்படி அதை கடைபிடிப்பார்கள்?
அதனால் தான் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை ஏட்டில் இருந்தும் அதை நடைமுறைப்படுத்த இயலாமல் போகிறது.
அதே போல பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை என்றால் அது சம அளவில் இருக்க வேண்டும்.
சாமானியர்கள் பயன்படுத்தும் பாலீத்தீன் பைகளின் தடையில் மட்டும் கறார் காட்டுவது அதே அளவிலான ஏனைய பிளாஸ்டிக் பொருள்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது சரியான அணுகுமுறையாகாது.
பாலித்தீன் பைகள் மட்டும் சுற்றுச் சூழலுக்கு பிரச்சனையா?
தனியார் நிறுவனங்கள் விற்கும் வண்ணமிகு பிஸ்கட் கவர்கள், சிப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கவர்கள், பைவ் ஸ்டார் டைரி மில்க் போன்ற சாக்லேட் ஜரிகை கவர்கள், ஐஸ்கிரீம் கவர்கள். இவைகள் எல்லாம் பிளாஸ்டிக் இல்லையா?
ஒரு நடைபாதை ஹோட்டலிலோ அல்லது சின்ன பெட்டிக் கடையிலோ பாலித்தீன் பைகள் இருந்து விட்டால் அவர்களை ஏதோ கிரிமினல் குற்றவாளிகளை போல நடத்தி அவர்களிடமிருந்து அப்பொருளை பறிக்கிறார்கள்.
அதுவே பெரிய வணிக வளாகங்களில் உள்ள மேலே நாம் பட்டியலிட்ட பிளாஸ்டிக் பைகளை அவ்வாறு பறிப்பதில்லை.
சுற்றுச் சூழலை காக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்வதுடன் கண்காணிப்பு நடைமுறைகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.