இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ஐ கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று பிஜேபி அரசு அடாவடித்தனமாக நீக்கியது.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அது தொடர்பாக 11.12.2023 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கம் சரியே என்று கூறியுள்ளது.
370 எனும் பிரிவு தற்காலிகமானது தானே தவிரக் காலத்திற்கும் உள்ள ஒன்றல்ல. அதை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது என்றும், குடியரசுத்தலைவர் ஆட்சியில் மாநிலத்தின் சார்பில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைக் கேள்வி கேட்க முடியாது என்றும் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் அடாவடித்தனமான முடிவை சரிகாணும் விதமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே தான் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
உண்மையில் இது தீர்ப்பு தானே தவிர நீதியல்ல.
பிரிவு 370 என்பது ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் அரணாக இயற்றப்பட்ட தனிப்பிரிவு. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு விஷயங்களைத் தவிர மத்திய அரசோ குடியரசுத்தலைவரோ எந்த உத்தரவைப் பிறப்பித்தாலும் அது காஷ்மீரைக் கட்டுப்படுத்தாது.
காஷ்மீர் மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்த பிறகே ஏனைய உத்தரவுகள் செல்லுபடியாகும் என்பது தான் காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தாகும்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து பல்வேறு பகுதிகள் விடுதலையாகிய வேளையில் இந்த நிபந்தனையின் பேரிலேயே ராஜா ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார்.
1950 முதல் 2019 வரை சுமார் 70 ஆண்டுகாலமாக காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு கொள்ளைப்புற வழியாகப் பறித்தது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தில் கை வைப்பதாக இருந்தால் எந்தவொரு திருத்தத்தைச் செய்வதாக இருந்தாலும் மாநில அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் தேவை என்று அந்தச் சட்டப்பிரிவிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கு மாற்றமாக காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை இல்லாமலாக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அவரது உத்தரவின் மூலம் மட்டுமே சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 370 நீக்கம் செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி நியாயமானதாக, நீதியானதாக, சட்டத்தின் அடிப்படையிலானதாகக் கருத முடியும்?
மேலும் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் பிரிவு 370 தற்காலிகமானது என்று ஏற்க கூறியது முடியாத கருத்தாக உள்ளது.
சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது சட்டப்பிரிவு 370, சரத் 3-ன் படி, இதனை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் (2015) குறிப்பிட்டுள்ளது.
அது மட்டுமின்றி இத்தனை ஆண்டுக்காலம் அது நடைமுறையில் இருந்தும் வந்துள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையை இல்லாமலாக்கிக் குறுக்கு வழியில் பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியதை உச்சநீதிமன்றம் சரி காண்பது ஆச்சரியமளிக்கின்றது.
மாநில சட்டப்பேரவையைக் கலந்து ஆலோசிக்காமல் குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் ஒரு மாநிலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை உச்சநீதிமன்றம் சரிகாணும் என்றால் மக்களுக்கான பாதுகாப்பு எங்கே? மக்கள் எங்கே போய் நியாயம் தேடுவார்கள்?
சங்கப்பரிவாரங்கள் கூப்பாடு போடுவதைப் போல இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது காஷ்மீர் மட்டுமல்ல. காஷ்மீரைப் போலவே இந்தியாவில் பல மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- நாகாலாந்து
- மிசோரம்
- வடகிழக்கு மாநிலங்கள்
- மஹாராஷ்டிரா
இந்த மாநிலங்களுக்காகச் சிறப்பு அந்தஸ்தைக் குறிக்கும் ஏனைய பிரிவுகளின் நிலை என்ன?
நாளைக்கு அவற்றையும் பாஜக அரசு குடியரசுத் தலைவரின் ஒரு உத்தரவின் மூலம் நீக்கினால் காஷ்மீருக்கு ஏற்பட்ட கதிதான் அந்த மாநிலங்களுக்கும் ஏற்படும்.
இது காஷ்மீருடன் நிற்கும் விவகாரம் அல்ல.
தங்களுக்கு ஒத்துவராத, தங்கள் சித்தாந்தத்துடன் பொருந்திப் போகாத ஒவ்வொரு மாநிலத்தையும் நிர்மூலமாக்கும் விவகாரம்.
காஷ்மீர் பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள மாநிலத்தின் உரிமைகள் அத்தனையும் கேள்விக்குறியாகி உள்ளன.
மக்களை மக்கள் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசிக்காமல் தான் தோன்றித்தனமாக சட்டம் இயற்றும் துணிவை பாஜக அரசுக்கு இந்தத் தீர்ப்பு உண்டாக்கி விட்டது என்பது தான் உண்மை.
பிரிவு 370 ஐ நீக்கிவிட்டால் காஷ்மீர் சொர்க்கப் பூமியாகும் என்ற அளவிற்குப் பாஜகவினர் கதை விட்டார்கள். ஆனால் அதற்கு மாநில அந்தஸ்து கூட இன்னும் வழங்கவில்லை. தேர்தல் நடத்த ஆர்வம் காட்டவில்லை. ஏன்? இப்போது தேர்தல் நடத்திப் பார்க்கட்டும். பாஜகவின் சாயம் வெளுத்துப் போகும். அந்தளவு கடும் அதிருப்தியில் காஷ்மீர் மக்கள் உள்ளனர். ஆகவே தான் இன்னமும் தேர்தல் நடத்தாமல் மாநில அந்தஸ்து வழங்காமல் காலம் கடத்திக் கொண்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாஹ் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து கருத்துச் சொல்லும் சுதந்திரம் கூட அவருக்கு வழங்கப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் பொதுவெளியில் காஷ்மீர் மக்கள் இன்பத்தில் திளைத்திருப்பதைப் போன்று கதை விடுகின்றனர்.
தமது வீடு பூட்டப்பட்டிருப்பதைப் படத்துடன் பதிவிட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து வீடியோ பதிவொன்றைத் தனது ட்விட்டரில் பதிந்துள்ளார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவருக்கே இந்த நிலைமை என்றால் காஷ்மீரின் சாமானிய மக்களின் நிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. தாங்கள் விரும்பும் காட்டுத்தர்பாரைக் கட்டவிழ்த்து விடவேண்டும். அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது என்பதற்குத் தான் காஷ்மீர் மாநிலத்தின் உரிமையைப் பாதுகாத்து வந்த பிரிவு 370 ஐ நீக்கினார்கள்.
உச்சநீதிமன்றம் தாம் வழங்கிய தீர்ப்பில் மக்களின் உரிமையைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தான் அறிவுஜீவிகளின் பார்வையாக உள்ளது.
ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி கவுல் கூறிய சில கருத்துகள் கவனத்திற்குரியவை.
காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தின் ஊடுருவலால் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். 1980-களில் தொடங்கி அங்கு எண்ணற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், நடுநிலையான உண்மை கண்டறியும் நல்லிணக்கக் குழுவை அமைக்க நான் பரிந்துரைக்கிறேன். அந்தக் குழுவானது 1980-களில் தொடங்கி நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்கட்டும். அரசுக்குத் தெரிந்தே நடந்த உரிமை மீறல்களாக இருக்கட்டும், அரசு சாராத மீறல்களாக இருக்கட்டும், எல்லாவற்றையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும்.
ராணுவம் என்பது எதிரிகளை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டது. அதைக் கொண்டு ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைக்கக்கூடாது.
ஒட்டு மொத்தத் தீர்ப்பில் நீதிபதி கவுலின் இந்த வார்த்தைகள் மட்டுமே காஷ்மீர் மக்களுக்கான சிறு ஆறுதலாகும்.
காஷ்மீர் மக்களுக்குச் செய்துள்ள நம்பிக்கை துரோகத்திற்கு எதிர்வரும் தேர்தலில் பாஜகவிற்குத் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.