இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

மக்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் இலவசங்கள் என்பது இந்திய அரசியலின் மோசமான கலாச்சாரம் என்று பிரதமர் மோடி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
இலவசங்கள் பற்றி பிரதமர் மோடி அவர்கள் பேசியதைப் தொடர்ந்து நாட்டிற்கு இலவசங்கள் தேவைதானா என்பது விவாதப் பொருளாக மாறி உள்ளது.
தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மோடி அவர்களின் கருத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களின் கருத்திற்கு காட்டமான முறையில் பதிலளித்துள்ளார்.
இலவசங்கள் பற்றி சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் டெல்லியில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குகிறேன்.
அடிமட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது இதில் என்ன தவறு உள்ளது?
டெல்லியில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது இதை நாட்டின் வளர்ச்சிக்கு தடை என்பவர்கள் அமைச்சர்களுக்கு 6 ஆயிரம் 7 ஆயிரம் யூனிட்டுகள் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
இது ஏன் அரசின் கண்களை உறுத்துவதில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சரியான கேள்விதான்.
இருவருமே தேர்தலை மையப் படுத்தி அரசியல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்றாலும் இலவசங்கள் குறித்த பாஜகவின் பார்வைக் கோளாறை கெஜ்ரிவாலின் கேள்விகள் அம்பலப்படுத்தியுள்ளன.
மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை விமர்சனம் செய்யும் பாஜக ஏன் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் இலவசங்களையும் சலுகைகளையும் எதிர்ப்பதில்லை?
மக்கள் சேவை செய்பவர்களுக்கு சலுகைகள் தேவை என்பதை உணரும் அதே வேளையில் அடித்தட்டு மக்களை முன்னேற்றி விடுவதற்கு சில மானியங்களும் சலுகைகளும் தேவை என்பதை அரசு ஏன் உணரவில்லை?
மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை மோடி விமர்சனம் செய்தார் என்பதுடன் இது நிற்கவில்லை.
அதை நிறுத்துவதற்கு பாஜகவின் பரிவாரம் நீதிமன்றம் வரையிலும் செல்கின்றது.
டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களைத் தடுக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள், கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் ஊரக வேலைத்திட்டம், மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், ஊட்டச்சத்து திட்ட அடிப்படையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு திட்டங்கள் என சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளையும் எதிர்த்து அவற்றை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 77,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் அஸ்வினி உபாத்யாய தொடுத்த அனாவசியமான இந்த வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது.
இலவசங்கள் குறித்து பல்வேறு தரப்பின் கருத்தை அறிந்து அறிக்கை தர மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது.
மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை மட்டும் குறிவைத்து அவற்றை நீதிமன்றத்தின் மூலம் இழுத்து மூட பாஜக முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது.
ரேஷன் பொருள்களையும் குழந்தைகளின் உணவுகளையும் குறிவைக்கும் அவர்கள் ஏன் தனியார் நிறுவனங்களுக்கு வாரி இறைக்கப்படும் இலவசங்களை கண்டு கொள்ளவில்லை.
அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படுவதில்லையா?
எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லையா?
கடந்த ஆறேழு வருடங்களில் மட்டும் பத்து லட்சம் கோடி அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் மத்திய பாஜக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதைப்பற்றி எல்லாம் மோடி அவர்கள் ஏன் எதிர்த்துப் பேசுவதில்லை. இதற்குச் செலவிட இனிக்கின்றது.
சொகுசு விமானம், ஆடம்பர விளம்பரங்கள், பகட்டான ஆடைகள் என இவற்றிற்கு எல்லாம் கோடிக்கணக்கில் செலவு பண்ண இனிக்கின்றது!
ஆனால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களுக்காக செலவிட மட்டும் கசக்கின்றதோ?
இதிலிருந்தே பாஜக அரசு யாருக்கானது என்பதை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.