அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இது பாஜகவினர் தங்களுக்கு தோதாக மக்கள் மனநிலையை மாற்ற பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்றாகும்.
உ.பியில் வென்றது கூட முறைகேடுகளில்லாமல் சாத்தியமே இல்லாத ஒன்று.
உ.பியில் கடந்த ஐந்தாண்டு கால மோசமான ஆட்சி நிர்வாகம், கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க தவறியது, விவசாயிகளின் மீதான அடக்குமுறை என்று ஆளும் அரசுக்கு எதிராகவே மக்கள் மனநிலை இருந்தது.
இந்துத்துவ ஓட்டுக்கள் மற்றும் பாஜகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பும் ஏதுமறியா சாமானிய மக்களின் ஓட்டுக்கள் ஆகியவை பாஜக வசம் இருந்தாலும் அவற்றை மிஞ்சும் வகையில் மக்கள் எதிர்ப்பு இருந்ததை மொத்த நாடே அறியும்.
அத்தனையையும் தாண்டி அங்கே பாஜக வெல்கிறது என்றால் மோசடி நடைபெறாமல் இது சாத்தியமில்லை.
இந்திய நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உன்னாவ் கற்பழிப்பு சம்பவம் நடந்த உன்னாவ் தொகுதியில் பாஜக வெல்கிறது. அந்த கற்பழிப்பில் ஈடுபட்டது பாஜக பிரமுகர் தான்.
வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி பாஜகவினர் கொன்றனர்.
அந்த லக்கிம்பூர் தொகுதியிலும் பாஜக வெல்கிறது.
இந்த நிலையில் உ.பியில் பாஜக பெற்ற வெற்றியை எப்படி மக்கள் அளித்த வெற்றியாக கருத முடியும். அப்படி கருதுவோமேயானால் உ.பி மாநில மக்களை இதை விட வேறு விதமாக கேவலப்படுத்த முடியாது.
எனவே தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு தான் இந்த வெற்றியை பாஜக பறித்திருக்கிறது.
இப்போது பொய்யான அந்த வெற்றியின் மீது இன்னொரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறது.
உ.பியில் வென்ற கட்சிதான் மத்தியில் ஆட்சியமைக்கும். இது தான் இப்போது பாஜக மக்கள் மனதில் திணிக்க முற்படும் அபத்தமான கருத்தாக்கமாகும்.
உ.பியில் ஐந்தாறு முறை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மாயாவதியின் பிஎஸ்பி (பகுஜன் சமாஜ் பார்ட்டி) மத்தியில் ஆட்சி அமைத்ததா?
உ.பியில் பல முறை ஆட்சியமைத்த கட்சிக்கு இன்றைக்கு உ.பியிலேயே ஒரு சீட் தான் கிடைத்துள்ளது.
இதிலிருந்தே பாஜக ஈடுபடும் கருத்தாக்கம் எப்படிப்பட்டது என்பதை புரியலாம்.
ஒரு வாதத்திற்கு உ.பியில் பாஜகவிற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அது மக்களவைத் தேர்தலில் ஒரு போதும் பிரதிபலிக்காது.
உ.பி என்றில்லை. இந்தியாவில் உள்ள எந்த மாநில தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட முடியாது. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு அந்த மாநிலத்திற்கு மட்டும் தான் பொருந்தும்.
சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட கட்சி என்ன செய்தது என்று பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள்.
ஆனால் மக்களவை தேர்தலில் ஒட்டு மொத்தமாக இந்திய அளவில் குறிப்பிட்ட கட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்று பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள்.
பாஜகவை பொறுத்தவரை இந்திய அளவில் மக்கள் மனதில் வெறுப்பை தான் சம்பாதித்துள்ளது. எனவே ஒரு மாநிலத்தில் பாஜக வெல்வதை வைத்துக் கொண்டு நாடெங்கிலும் பாஜக வெல்லும் என்ற ஒரு போதும் கருத முடியாது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.
உ.பியில் மக்கள் விரோத ஆட்சியை செய்து விட்டு தற்போது முறைகேடுகளில் ஈடுபட்டு எப்படி வெற்றியை பறித்ததோ, அதை மக்கள் அளித்த வெற்றியாக ஊடகங்களின் துணையுடன் எப்படி சித்தரிக்கின்றதோ அது போலவே எதிர்வரும் மக்களவை தேர்தலிலும் முறைகேடுகளில் ஈடுபட்டால் பாஜகவின் வெற்றி சாத்தியமே.
அதற்குள் எதிர்க்கட்சிகள் இது குறித்து விழிப்படைந்து தக்க எதிர்வினையாற்ற தயாராக வேண்டும். அதுவே மக்களாட்சி தத்துவம் நீர்த்துப் போகாமல் இருப்பதை பறை சாற்றுவதாக அமையும்.