முஸ்லிம்கள் என்றால் கிள்ளுக்கீரையா? ஆளுக்கொரு நீதி என்பது தான் சமநீதியா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். அவருடன் பலரும் பலியாகினர். மொத்த நாட்டையும் உலுக்கிய இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 நபர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் 1998ல் மரண தண்டனை விதித்த்து.
இவ்வழக்கு மேல்முறையீடாக உச்சநீதிமன்றத்தில் வந்த போது பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
ராபர்ட், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மீதமுள்ள நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பிறகு 2014 ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கும் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் சிறையில் இருந்து வந்த நிலையில் இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசும் முனைப்பு காட்டியது.
அதிமுக – திமுக இருவரது ஆட்சிக்காலத்திலும் சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம், விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திற்கு பரிந்துரை என்று எழுவரையும் விடுதலை செய்ய ஆர்வம் காட்டினர்.
இறுதியாக கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். தற்போது மீதமுள்ள நளினி, சாந்தன், முருகன், ராபர்ட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை ஆகியுள்ளனர்.
அரசியல் சாசனம் பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரைத்ததன் பேரில் உச்சநீதிமன்றம் இவர்களை விடுதலை செய்துள்ளது.
சுமார் 30 வருட காலம் சிறையில் கழித்தது, சிறையில் நன்னடத்தை, மாநில அரசின் பரிந்துரை உள்ளிட்ட காரணங்களை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை தொடர்ந்து வீரப்பனின் கூட்டாளிகள் சில தினங்களுக்கு முன்பு விடுதலை ஆகியுள்ளனர்.
1987 இல் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளான பெருமாள், ஆண்டியப்பன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளனர் என்று கூறி அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவர்கள் விடுதலையாகி உள்ளனர்.
நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளனர் என்று கூறி பலரும் விடுதலையாகி வரும் நிலையில் இதே தகுதி உடைய முஸ்லிம்கள் மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இதர வழக்குகளிலும் முஸ்லிம் சிறைவாசிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
குற்றச்செயலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் நீண்ட காலமாக சிறையில் இருந்தோரை அரசும் நீதிமன்றமும் முன்விடுதலை செய்யும் போது அது ஏன் முஸ்லிம்களுக்கு மட்டும் எட்டாக்கனியாகின்றது.
ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் என்ன வித்தியாசம்?
இரு தரப்பும் மனித உயிர்களை கொன்றவர்கள் தாம்.
இரு தரப்பும் வெடி மருந்துகளை பயன்படுத்தியுள்ளனர்.
இரு நிகழ்விலும் பல மனித உயிர்கள் பலியானது.
இரு தரப்பும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினர்.
இரு தரப்பும் நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளனர்.
இரு தரப்பிலும் வழக்கிற்கு சம்பந்தப்படாதவர்களும் கைதாகி உள்ளனர்.
ஆனால் ராஜீவ்காந்தி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்திற்கு பரிந்துரையும் அனுப்பியது. அதன்படியே இப்போது விடுதலையும் சாத்தியமாகி உள்ளது.
அது ஏன் ராஜீவ்காந்தி குற்றவாளிகளுக்கு மட்டும் இந்த சலுகை?
நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் இந்த சலுகை கிடைத்தது என்றால் அதே மனிதாபிமானம் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை.
அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா?
நீண்ட காலம் சிறையில் இருந்ததை காட்டி வீரப்பன் கூட்டாளிகள் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுகின்றனர். இதிலும் முஸ்லிம் சிறைவாசிகள் இடம்பெறவில்லை.
முஸ்லிம்கள் என்பதால் மட்டுமே பாரபட்சம் காட்டப்படுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
ஆளுக்கொரு நீதி என்பது தான் சமநீதியா?
எனவே இனியும் தாமதிக்காது முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.