பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனும் அரசின் அறிவிப்பு சரியா?

மார்க்கெட், ஹோட்டல் உள்ளிட்ட பொது இடத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்று அந்தந்த இடத்தின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு தமிழக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் அதிகமாக இருந்த கால கட்டங்களில் கூட இப்படி அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்து, படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் இந்த அறிவிப்பானது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?
ஒன்றிய அரசு 100 கோடி தடுப்பூசி என்று வெற்றுப் பெருமை பேசித்திரிவதைப் போல 100 சதவிகிதம் தடுப்பூசி போட்ட மாநிலம் எனும் பெயர் வரவேண்டி தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.
தடுப்பூசி போடுமாறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம். மக்களை ஆர்வமூட்டலாம். அதில் தவறேதுமில்லை. ஆனால் இதைப் போட்டால் தான் கடை வீதிக்கு வரமுடியும் என்று தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது எப்படி சரியாகும்?
இப்போது தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை போல முன்பு மேகலாயா அரசு அந்த மாநிலத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அங்குள்ள மாவட்டங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகள் என அனைவரும் தடுப்பூசி போடாமல் பணி செய்ய முடியாது என்று அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் அம்மாநில உயர்நீதிமன்றம் சென்ற போது தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்க முடியாது. இது அவரவர் உரிமை என்றும் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமை மீறல் என்றும் மேகலாயா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக எதுவொன்றையும் திணிக்க முடியாது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
மருத்துவம் என்று வருகின்ற போது சிலர் அலோபதி மருத்துவத்தை நாடுவார்கள். வேறு சிலர் மரபுவழி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ முறைகளையும் விரும்புவார்கள். இது அவரவர்களது தனிப்பட்ட விருப்பம்.
இதில் ஒன்றை மட்டும் கட்டாயப்படுத்துவது எவ்விதத்தில் சரியாகும்?
ஒரு வாதத்திற்கு தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்துவதாக இருந்தால் அரசு அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசியினால் சில பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்பதில்லை. பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காத போது தடுப்பூசியை போடுவதை மட்டும் எப்படி கட்டாயப்படுத்த முடியும்?
ஏதோவொரு காரணத்திற்காக தடுப்பூசி போட மறுக்கிறார்கள் எனில் அவர்களது அச்சத்தைப் போக்க அரசு முன்வர வேண்டும். உரிய விளக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதை விடுத்து தடுப்பூசி போடாதவர்கள் பொதுவெளியில் நடமாடக் கூடாது என்பது தனிமனித உரிமையை பறிப்பதாகவே உள்ளது.
அரசு சொல்லும் எந்த விதியும் தேர்தல் கால அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தையும் அக்கட்சிகளை சா£¢ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்றவற்றையும் பாதிப்பதில்லை. சாமானிய பொதுமக்களை மட்டுமே பாதிக்கும்படி இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.