மோடியை வரவேற்ப்பதில் திமுகவின் நிலைபாடு சரியா?

புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க எதிர்வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கோ பேக் மோடி எனும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவது வழக்கம். இம்முறையும் அது போலவே ட்விட்டரில் கோ பேக் மோடி ட்ரண்டானது.
அதையும் தாண்டி மோடி வரும் நாளில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று ஒரு சிலர் கூறிவந்தனர்.
இந்நிலையில் திமுகவை சார்ந்த ஆர்.எஸ்.பாரதி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது மோடி தமிழ்நாட்டின் விருந்தினர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
திமுகவின் எம்.பி கனிமொழியோ அரசு என்பது வேறு. கருத்தியல் வேறு. மோடியின் கருத்தியலில் நாம் ஒன்றுபடவில்லை. ஆனால் ஒரு அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறோம் என்று கூறி அவரும் மோடியின் வருகையை எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது அதை எதிர்க்க வேண்டியதில்லை எனும் திமுகவின் தற்போதைய நிலைப்பாடு, இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதனிடம் இருக்கவில்லை.
அதிமுக ஆட்சியின் போது பிரதமர் மோடி அரசு முறை பயணமாக தமிழகம் வந்த போதெல்லாம் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கோ பேக் மோடி என்று ட்விட்டர் தளத்தையே அதிர வைத்தது. கோ பேக் மோடி வாசகங்களை உள்ளடக்கிய கருப்பு பலூன்களை பறக்க விட்டு தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
திமுக மட்டுமின்றி அதன் கூட்டணிக்கட்சிகளும் கோ பேக் மோடி எனும் மோடி எதிர்ப்பில் இணைந்து கொண்டன.
மாமல்லபுரத்தில் இராணுவ தளவாடங்களை திறந்து வைக்க பிரதமர் மோடி வந்த போதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இத்தகைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தின.
அப்போது திமுக சொன்ன காரணம் மோடி எனும் தனிநபரை நாங்கள் எதிர்க்கவில்லை. அவரின் சித்தாந்தங்களையும் தமிழகத்திற்கு எதிரான அவரின் திட்டங்களையுமே எதிர்க்கிறோம் என்றனர்.
இப்போது அதே திமுக ஆளுங்கட்சியாக ஆகிவிட்ட பிறகு திமுகவின் அழைப்பின் பேரில் மோடி வருகையளிப்பதை ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு வேறு. கருத்தியல் வேறு என்று வெங்காய விளக்கம் கொடுப்பதை எவர் ஏற்றுக் கொள்வார்?
மோடியை எதிர்ப்பதில் திமுகவிற்கு ஒரு நியாயம். மற்ற கட்சிகளுக்கு வேறு நியாயமா?
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மோடியை எதிர்த்தால் அது கருத்தியல் போராட்டம்.
அதுவே திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது இதரக் கட்சிகள் மோடியின் வருகையை எதிர்த்தால் அது தனி மனித வெறுப்பாகவும் அநாகரீகமாவும் ஆகிவிடும் அதிசயம் என்ன?
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது மோடியின் வருகையை எதிர்ப்பதில் திமுகவிற்கு இருந்த ஜனநாயக உரிமை இதரக் கட்சிகளுக்கும் உண்டு.
கடந்த முறை மோடியின் வருகையை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகியோரிடம் இப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து விட்டு பதில் சொல்கிறோம் என்று நழுவியுள்ளனர்.
இதர கட்சிகள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முனைப்புடன் உள்ளனர்.
எதிர்ப்பு தெரிவிப்பதும் தெரிவிக்கா மலிருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பத்தை சார்ந்தது.
இப்போது மோடியின் வருகையை எதிர்ப்பவர்களும் மோடியின் இந்துத்துவ சிந்தனையையும் தமிழக மக்களுக்கு எதிரான மோடியின் சிந்தனையையும் தான் எதிர்க்கின்றார்கள்.
அதை விடுத்து மோடி நம் விருந்தாளி, அவருக்கு எதிர்ப்பு காட்டுவது அநாகரீகம் என்றெல்லாம் பேசுவது மக்களை முகம் சுளிக்க வைக்கும்.
இதை திமுக புரிந்து கொள்ள வேண்டும்.