விநாயகர் சதுர்த்தியை முன்வைத்து பாஜக செய்யும் அரசியல் தொடர்கிறதே?

மதம், கடவுள், பாகிஸ்தான் இவைதான் பாஜகவின் அரசியல் ஆயுதங்கள். பன்னெடுங்காலமாக இவைகளை வைத்து தான் சாமானிய மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்கள் பல தெய்வக் கோட்பாட்டினை பின்பற்றி வருகிறார்கள். அவர்களுக்கு விநாயகர் மட்டுமே கடவுள் அல்ல. அவர் அல்லாத நூற்றுக்கணக்கான கடவுளர்கள் உள்ளதாக நம்புகின்றனர்.
அவர்கள் கடவுளாக கருதுபவற்றை வணங்கி வழிபாடு செய்கின்றனர்.அவற்றின் மூலமாகவெல்லாம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையோ கலவரமோ ஏற்படுவதில்லை.
விநாயகர் சதுர்த்தி என்றால் மட்டும் தமிழகத்தில் பரபரப்பும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்றால் அதற்கு வழிபாட்டை அரசியலாக்கும் பாஜகவின் கேவலப்புத்தி தான் காரணம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழகத்தில் எந்தவொரு பண்டிகைக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
முன்னர் அதிமுகவின் ஆட்சியிலும் சரி இப்போது திமுகவின் ஆட்சியிலும் சரி கொரோனா ஊரடங்கு விதியை கவனத்தில் கொண்டு அதைப் பேணியே வந்தனர்.
முஸ்லிம்கள் வழமைபோல் பெருநாள் கொண்டாட்டத்தில் இந்த இரு ஆண்டுகளில் ஈடுபடவில்லை. முஸ்லிம்கள் என்றில்லாமல் இது தான் அனைவரது நிலையுமாக இருந்தது.
ஆனால் பாஜக என்ன செய்கிறது? மற்றவர் பண்டிகைக்கு மட்டும் அனுமதி, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் அனுமதியில்லை என்று பச்சை பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம் மதவெறுப்பைத் தூண்டி மக்களைப் பிரித்தாள முயற்சிக்கின்றது.
வெகுஜன இந்து மக்களின் எத்தனையோ பண்டிகைகள் இதற்கிடைப்பட்ட நாள்களில் வந்தும் கூட அதற்கெல்லாம் குரல் எழுப்பாத பாஜக, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் குரல் எழுப்புவதன் பின்னணி என்ன?
மற்ற பண்டிகைகளைக் கூறி கலவரத்தையோ பரபரப்பையோ உண்டாக்க இயலாது. விநாயகர் சதுர்த்திதான் கலவரமூட்டுவதற்கான கடவுளாக அவர்கள் கற்பித்து வைத்துள்ளார்கள்.
இத்தனைக்கும் ஒன்றிய பாஜக அரசு தான் அனைத்துப் பண்டிகை கால கட்டத்திலும் கொரோனா விதிகள் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஆனால் மாநில பாஜகவினர் திட்டமிட்டே அதை மறைத்து மாநில அரசுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கும் அரசை கண்டித்து அறிக்கை விடுகின்றனர்.
தமிழகத்திலும் மஹராஷ்ட்ராவிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் மிகத் தெளிவாக ஒன்றிய பாஜக அரசு தான் பண்டிகை காலக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என்று கறாராக வலியுறுத்தி உள்ளது என்று கூறிய போதும் அதைச் சட்டை செய்யாமல் அரசியல் செய்தனர் மாநில பாஜகவினர்.
அம்பு எய்தவனை விட்டு அம்பை நோவானேன்? ஒன்றிய அரசை விட்டு விட்டு மாநில அரசைக் கண்டித்து அறிக்கை ஏன்?
உ.பியில் முதல் நிலை கடவுள் பக்தராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் யோகி ஆதித்யநாத்தின் அரசே விநாயகர் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.
உ.பியில் உள்ள பாஜகவினர் உ.பி அரசை கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை.
பாஜகவிற்கு உண்மையிலேயே தாங்கள் நம்பும் கடவுளின் மீது பக்தி இருக்கும் என்றால் ஊரடங்கு விதிகளை தளர்த்தக் கூடாது என்று சொன்ன ஒன்றிய அரசைக் கண்டித்து அறிக்கை விடட்டும். அதை விடுத்து மக்களைத் தூண்டி விடும் மட்டமான செயலில் ஈடுபடுவது ஏன்?
பாஜகவின் கேவலமான அரசியல்களில் இதுவும் ஒன்று என்று கடந்துப் போவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.