காங்கிரஸ் தலைவர்களின் அடையாளங்களை பாஜக மாற்றி வருகிறதே?

பிறரது அடையாளங்களை அழித்து அதில் தங்களது அடையாளங்களை உள்புகுத்துவதில் பாஜகவை யாரும் விஞ்சிட முடியாது.
2016ல் ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அதில் நேரு உள்ளிட்ட காங்கிரஸை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்களது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன.
2018ல் கோவா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாற்று பாடப்புத்தகத்தில் நேருவின் புகைப்படம் இருந்ததை கோவாவை ஆளும் பாஜக அரசு நீக்கியது. அதில் ஆர்.எஸ்.எஸ்.இன் சித்தாந்த குருவான சாவர்க்கரின் படத்தை இடம் பெறச் செய்தனர்.
அண்மையில் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதாக கருதப்படுகிற ராஜீவ் காந்தி கேல்ரத்னா எனும் பெயரில் வழங்கப்பட்டு வந்த விருதை மேஜர் தியான் சந்த் என்று பெயர் மாற்றம் செய்தது. விளையாட்டிற்கும் நேருவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பி தங்களது செயலுக்கு நியாயம் கற்பிக்க முனைந்தனர்.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் விளையாட்டு மைதானத்திற்கு மோடி விளையாட்டு அரங்கம் என்று புதிய பெயர் சூட்டப்பட்டதே? மோடி மட்டும் விளையாட்டு வீரரா என்ன? என்று மக்கள் கேள்வி எழுப்பினர். வழக்கம் போல கள்ள மவ்னத்துடன் கடந்து சென்று விட்டது பாஜக.
சில தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் ராஜீவ் காந்தி பெயரை அடையாளமாக கொண்ட தேசிய பூங்கா ஒன்றிற்கு அதன் பெயரை மாற்றி ஓரங்க் தேசிய பூங்கா என பெயர் மாற்றம் செய்தது.
கர்நாடகாவிலும் ராஜீவ் காந்தியின் பெயரைக் கொண்ட பூங்காவின் பெயரை கே.எம். கரியப்பா பூங்கா என பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
உ.பியிலும் முஸ்லிம்களின் பல்வேறு அடையாளங்களை அழித்து வருகின்றனர்.
ராமர்கோவில் அமைந்த பைஸாபாத் நகரை – அயோத்யா என்று பெயர் மாற்றி விட்டனர். அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் உன்னாவ் மியான்கன்ச் எனும் பெயர் கொண்ட பகுதியை மாயாகன்ச் என்றும் மாற்றியுள்ளனர்.
இதுவன்றி அலிகரை – ஹரிகர் பெரோஸாபாத்தை- – சந்த்ரா நகர் என்றும், சஹாரன்பூரிலுள்ள புகழ்பெற்ற தியோபந்த் பகுதியை – தேவ்ரந்த் என்றும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி தங்களுக்கு வேண்டாதவர் களின் அடையாளங்களை அழிப்பது பாஜகவின் அருவருக்கத்தக்க செயலாகும்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, வேலைவாய்ப்பு இன்மை, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு என எதைப்பற்றியும் இவர்களுக்கு அக்கரையில்லை. தங்கள் அடையாளங்களையும் சித்தாந்தங்களையும் நிறுவுவது ஒன்றே அவர்களின் இலக்கு.
அதை நோக்கி அவர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள். வரலாற்றுத் திரிபு வேலையில் ஈடுபடும் பாஜகவின் இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.