முஸ்லிம்கள் மீது சங்பரிவாரங்கள் தாக்குதல் நடத்துவது கடந்த காலங்களை விட மத்தியில் பாஜக அரசு அமைந்த பின் அதிகரித்து இருக்கிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா இது வரை கண்டிராத பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது, இதை மறைக்கவே இது போன்ற கலவரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் இது குறித்து சிந்திக்காமல் இருக்கவும் கலவரங்கள் செய்து கவனத்தை திசை திருப்புகிறார்கள். இது சங்பரிவாரங்கள் பின்பற்றும் ஹிட்லர் பாணியாகும்.
இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் 2016 முதல் 2020 வரை 3399 மதக் கலவரங்கள் நடந்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் நாடாளு மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
வெள்ளையர்கள் காலத்தில் கூட முஸ்லிம்கள் இந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட வில்லை, மோடி ஆட்சியில் சங்பரிவாரங்களால் முஸ்லிம்கள் எல்லை கடந்து அச்சுறுத்தப்படுகிறார்கள்.
இந்தத் தலைமுறை அனுபவிக்கும் சுதந்திரத்தை அடுத்த தலைமுறை அனுபவிக்குமா என்பது இன்று கேள்வி குறியாக்கப்பட்டு விட்டது.
இந்து நாடாக அறிவித்து மனு சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல் படுவதே சங்பரிவாரங்களின் இலக்கு. மக்களின் முன்னேற்றம் குறித்து எந்த திட்டமும் இவர்களிடம் இல்லை.
சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்புகள் இருப்பதை முதல் பிரதமராக இருந்த நேரு முதல் மன்மோகன் சிங் வரை உணர்ந்து செயல்பட்டார்கள்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டன..
முன்னாள் பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறைகளை மோடி அரசு தனியாரிடம் விற்பனை செய்து வருகிறது. புதிதாக பொதுறைகளை உருவாக்க வில்லை அதனால் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அனுவலகத்தில் பதிந்து விட்டு கோடிக்கணக்கான மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் தனியார் நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து, பாதிக்கப்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக் கணக்கானோர் வேலை இழந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் தொட்ட போது ஆக்சிஜன் தட்டுப்பாடு, சொட்டு மருந்து தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் பல மாநிலங்களில் எங்குத் திரும்பினாலும் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருந்தன.
குஜராத் மாடல் என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜகவின் கோசம் வெற்று விளம்பரமானது.
கடந்த 67 வருடத்தில் 1947 முதல் 2014 வரை இந்தியாவின் கடன் 53 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 8 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் கடன் 152.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்,
கடந்த பத்தாண்டுகளில் அம்பானி சொத்து மதிப்பு 1830 மடங்கு உயர்ந்ததே தவிர சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வில்லை.
இவற்றை எல்லாம் மறைக்கவே பள்ளிவாசல் முன்பு ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடத் துவங்கி இருக்கின்றனர். சங்பரிவார கும்பல் மூலம் மாட்டிறைச்சிக்காக படுகொலைகள், ஹிஜாப் தடை, ஹலால் உணவுக்கு எதிர்ப்பு, இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு கோசம் எழுப்பப்படுகிறது.
அப்பாவி மக்களிடம் இஸ்லாமிய மத வெறுப்பை விதைந்து அதன் பலனால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதே சங்பரிவாரங்களின் இலக்கு. இதில் வெற்றி கண்டதாக நினைக்கிறர்கள், ஆனால் அது நிலையான வெற்றி அல்ல மதவெறுப்புப் பேச்சால் வாழ்க்கைத் தரம் உயர வில்லை என்ற உண்மையை விளங்கி மக்கள் வீதிக்கு வரும் போது அதற்கான விடிவு பிறக்கும்.