பாராளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாகதனிநபர் மசோதா கொண்டு வரப்படுகிறதே?

தேர்தலை மையப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான பல அஸ்திரங்களை பாஜக இதுவரை பயன்படுத்தி வந்துள்ளது. பாபர் மசூதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம், முத்தலாக் தடை சட்டம், சிஏஏ எனும் குடியுரிமை திருத்த கருப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹிஜாப் உரிமைபறிப்பு என்ற வரிசையின் இறுதி கட்டமாக தான் பொது சிவில் சட்டம் உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் பாஜக எம்பி கிரோடி லால் மீனா ராஜ்ய சபாவில் பொது சிவில் சட்டத்திற்கான தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
பல கருப்புச் சட்டங்களை இயற்றி இந்தியாவை உருத் தெரியாமல் அழித்து வரும் ஒன்றிய அரசு தற்போது பொது சிவில் சட்டம் எனும் புதியதொரு கருப்புச் சட்டத்தை கொண்டு வர துடிக்கின்றது.
பூமிப் பந்தில் இந்தியா என்பது பன்முக மக்களைக் கொண்ட நாடு. பல மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் கொண்ட நாடாயினும் இதன் குடிமக்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகின்றனர் . இவ்வாறாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் நம் இந்திய தேசம்.
அழகிய ஒன்றாக உலக அரங்கில் அறியப்பட்ட தேசத்தின் ஜனநாயகம் சமீப நாட்களாக அழுகிய ஜனநாயகமாக மாறி வருகின்றது . இந்தியாவின் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், தேச ஒருமைப்பாடும் நாளுக்கு நாள் மங்கி வருகின்றது. இதற்கு முதன்மைக் காரணம் ஒன்றிய அரசும், தேச விரோத இந்துத்துவ சக்திகளுமே ஆகும்.
கட்டுக் கோப்பான இத்தேசத்தில் மதவாதம், வகுப்பு வாதம் போன்ற வன்மங்களை விதைத்து நாட்டை பற்றி எறிய வைத்து அதன் கதகதப்பில் குளிர்காய வேண்டும் என்ற ஈனச் சிந்தனையுடன் இவர்கள் செயலாற்றுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த முதல் தினத்திலிருந்தே இப்போக்கை ஒன்றிய அரசு கையிலெடுத்து செயலாற்றி வருகின்றது. காஷ்மீர் சிறப்புப் பிரிவை நீக்கியது, குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், முத்தலாக் போன்ற கருப்புச் சட்டங்களை இயற்றியதன் மூலம் தேச ஒருமைப் பாட்டை சேதப் படுத்தி வந்த ஒன்றிய அரசு தற்போது பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை துவங்கி இருப்பதன் மூலம் இந்திய ஒருமைப் பாட்டின் மீது மற்றோரு ஈட்டியைப் பாய்ச்சியுள்ளது.
நம் நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ஆனால் திருமணம் , விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, ஈமக் காரியங்கள் போன்ற உரிமை சார்ந்த விவகாரங்களில் மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது மதச் சட்டங்களின் படி நடந்து கொள்ள நம் நாட்டுச் சட்டம் வகை செய்கின்றது.
பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் இதுவே ஏற்றமான சட்டமும் சமத்துவத்திற்கான வழிமுறையுமாகும்.
ஆனால் தற்போது ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்கள் அவசியம் என்றும் அது தேசத்திற்கு நன்மை என்றும் பசப்பு மொழி பகர்ந்து வருகின்றது.
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பல மாநில தேர்தல் வாக்குறுதிகளில் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியிருப்பதை நினைவூட்டி தற்போது அதை நிறைவேற்ற இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி எனவும் பாஜக தம்பட்டம் அடிக்கின்றது.
கருப்புப் பணம் ஒழிக்கப்படும், வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும், என்பன போன்ற தேச நலன் சார்ந்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் சிறுபான்மையினரை பாதிக்கின்ற ,நாட்டை பாழ்படுத்துகின்ற தன்மை கொண்ட வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றுவது ஏற்புடைய செயலா?
வீழ்ந்து வரும் விவசாயத்தையும், தாழ்ந்து வரும் பொருளாதாரத்தையும், சூழ்ந்து வரும் வன்முறைக் கலாச்சாரத்தையும், பற்றி கவலைப் படாத ஒன்றிய அரசு பிறமதத்தினரின் விவகாரங்களிலும் அவர்களின் தனியார் மற்றும் உரிமை சார்ந்த விசயங்களிலும் மூக்கை நுழைப்பதன் மூலம் மக்களை மடை மாற்றம் செய்யும்
மாநிலங்களவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன் திமுக எம்பி திருச்சி சிவா மற்றும் வைகோ உள்ளிட்ட பலர் இதற்கு எதிரான தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இன்னும் சமூக அக்கறை கொண்ட பல அரசியல் தலைவர்களும், முன்னாள் நீதிபதிகளும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் பெரும்பான்மை மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். இதை அறியாமையில் உள்ள மக்கள் விளங்கி பாஜகவை விரட்டி அடிக்கும் நாட்கள் தூரத்தில் இல்லை என்பது மட்டும் தான் இதில் நமக்கு புலப்படுகிறது.