இப்ராஹீம் – இறைத் தூதர்களில் ஒருவர்

அத்தியாயம் : 14

வசனங்களின் எண்ணிக்கை: 52

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. அலிஃப், லாம், ரா. (இது) வேதம். மனிதர்களை, அவர்களுடைய இறைவனின் ஆணைப்படி, இருள்களிலிருந்து ஒளியின் பக்கமும், புகழுக்குரிய மிகைத்தவனான அல்லாஹ்வின் பாதைக்கும் நீர் கொண்டு வருவதற்காக இதனை உமக்கு அருளினோம். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கடும் வேதனையால் இறைமறுப்பாளர்களுக்குக் கேடுதான்.
3. மறுமையைவிட இவ்வுலக வாழ்வையே அவர்கள் நேசிக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அதைக் கோணலாக்க முனைகின்றனர். அவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.
4. எந்தத் தூதராயினும் அவர் தமது சமுதாயத்திற்குத் தெளிவாக விளக்குவதற்காக அவர்களின் மொழியிலேயே அனுப்பினோம். அல்லாஹ், தான் நாடியோரை வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
5. மூஸாவை நமது சான்றுகளுடன் அனுப்பினோம். “உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து ஒளியை நோக்கிக் கொண்டு செல்வீராக! அல்லாஹ்வின் (அருட்கொடையின்) நாட்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக!” (என்று மூஸாவிடம் கூறினோம்.) பொறுமையை மேற்கொண்டு, நன்றி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் இதில் சான்றுகள் உள்ளன.267
6 “கடும் வேதனையால் உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியபோது அவன் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். உங்கள் ஆண் குழந்தைகளை அவர்கள் அறுத்துக் கொன்று, பெண்களை உயிருடன் வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரும் சோதனை இருந்தது” என்று மூஸா தமது சமூகத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
7. “நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு (என் அருளை) அதிகப்படுத்துவேன். நீங்கள் மறுத்தால் எனது தண்டனை கடுமையானது” என உங்கள் இறைவன் அறிவித்ததை நினைவூட்டுவீராக!
8. “நீங்களும், உலகிலுள்ள அனைவரும் மறுத்தாலும் அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்” என்று மூஸா கூறினார்.
9. “உங்களுக்கு முன்பிருந்த நூஹுடைய சமுதாயம், ஆது, ஸமூது சமுதாயத்தினர் மற்றும் அவர்களுக்குப் பின்பு வந்தவர்களின் செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வையன்றி யாரும் அறிய மாட்டார்கள். அவர்களின் தூதர்கள், அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அப்போது அச்சமுதாயத்தினர் தமது கைகளை அவர்களின் வாய்களின் பக்கம் திருப்பி, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுத்துவிட்டோம். எதனை நோக்கி எங்களை அழைக்கிறீர்களோ அதுபற்றிக் கடுமையான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினர்.
10. “வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பதற்காகவும், குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அவகாசம் அளிப்பதற்காகவும் அவன் உங்களை அழைக்கிறான்” என அவர்களின் தூதர்கள் கூறினர். அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. எங்கள் முன்னோர் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதனை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே, எங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினர்.
11. (அதற்கு) அவர்களின் தூதர்கள், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களைத் தவிர வேறில்லை. எனினும், தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். அல்லாஹ்வின் ஆணையின்றி எந்தச் சான்றையும் உங்களிடம் நாங்கள் கொண்டு வர முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்” என அவர்களிடம் கூறினர்.
12. “எங்களுக்கான வழிகளை எங்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ள நிலையில் அவன்மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வோம். நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்!” (என்றும் கூறினர்.)
13, 14. “எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என்று இறைமறுப்பாளர்கள் தமது தூதர்களிடம் கூறினர். “அநியாயக்காரர்களை நாம் அழிப்போம். அவர்களுக்குப் பின்பு அவ்வூரில் உங்களைக் குடியேறச் செய்வோம். என் முன்னால் நிற்பதை அஞ்சுவோருக்கும், எனது எச்சரிக்கைக்கு அஞ்சுவோருக்கும் இது உரியது” என அவர்களின் இறைவன், அவர்களுக்கு அறிவித்தான்.
15. (தூதர்கள்) உதவி தேடினார்கள். ஒவ்வொரு பிடிவாதக்கார அடக்குமுறையாளனும் நஷ்டமடைந்தான்.
16. அவனுக்கு முன்னால் நரகம்தான் இருக்கின்றது. அவனுக்குச் சீழ்நீர் புகட்டப்படும்.
17. அதைச் சிறிது சிறிதாக அவன் விழுங்குவான். அதை அவனால் எளிதில் விழுங்க முடியாது. மரணம் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அவனிடம் வரும். ஆனால் அவன் மரணிப்பவன் அல்ல! இதற்குப் பின் கொடிய வேதனையும் இருக்கிறது.
18. தமது இறைவனை மறுப்போரின் செயல்களுக்கு எடுத்துக்காட்டு சாம்பலைப் போன்றது. புயல் காலத்தில் அதன்மீது காற்று கடுமையாக வீசியது. தாம் சம்பாதித்தவற்றில் எதன்மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். இதுவே தூரமான வழிகேடு!
19, 20. வானங்களையும் பூமியையும் நியாயமான காரணத்துடனே அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு, ஒரு புதிய படைப்பைக் கொண்டு வருவான். இது அல்லாஹ்வுக்குச் சிரமமானதல்ல!
21. அல்லாஹ்வின் முன் அவர்கள் அனைவரும் வெளிப்படுவார்கள். அப்போது பலவீனர்கள், கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, “நாங்கள் உங்களைத்தான் பின்பற்றுவோராக இருந்தோம். எங்களைச் சிறிதேனும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உங்களால் காப்பாற்ற முடியுமா?” என்று கேட்பார்கள். அதற்கவர்கள், “எங்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியிருந்தால் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியிருப்போமே! நாம் பதறினாலும் அல்லது பொறுத்துக் கொண்டாலும் நமக்குச் சமமே! நமக்கு எந்தப் புகலிடமும் இல்லை” என்று கூறுவார்கள்.
22. “அல்லாஹ் உண்மையான வாக்குறுதியையே உங்களுக்கு அளித்தான். நானும் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால் உங்களுக்கு மாறு செய்து விட்டேன். ‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் எனக்குப் பதிலளித்தீர்கள்’ என்பதைத் தவிர எனக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைக் குறை கூறாதீர்கள்! உங்களையே குறை கூறிக் கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு உதவுபவன் அல்ல! நீங்களும் எனக்கு உதவுவோர் அல்ல! இதற்கு முன்பு நீங்கள் என்னை இணையாக்கியதை நான் மறுத்து விட்டேன். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது” என்று தீர்ப்பளிக்கப்படும்போது ஷைத்தான் கூறுவான்.
23. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தோர் சொர்க்கங்களில் நுழைவிக்கப்படுவார்கள். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். தமது இறைவனின் அனுமதியுடன் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அங்கு அவர்களின் வாழ்த்து ‘ஸலாம்’ என்பதாகும்.
24. தூய (ஏகத்துவக்) கொள்கைக்கு அல்லாஹ் எவ்வாறு எடுத்துக்காட்டு கூறுகிறான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றது. அதன் வேர் உறுதியானது; அதன் கிளையோ வானளவில் உள்ளது.
25. அது, தன் இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு காலத்திலும் தனது கனியைத் தருகிறது. மனிதர்கள் சிந்திப்பதற்காக அவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறான்.
26. கெட்ட (இறைமறுப்புக்) கொள்கைக்கு எடுத்துக்காட்டு கெட்ட மரத்தைப் போன்றது. அது பூமியின் மேற்புறத்திலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த உறுதியும் இல்லை.
27. உறுதியான (ஏகத்துவக்) கொள்கையைக் கொண்டு இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான்.268
28, 29. அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றித், தமது சமுதாயத்தை அழிவு வீடான நரகத்தில் தள்ளி விட்டோரை நீர் பார்க்கவில்லையா? அதில் அவர்கள் கருகுவார்கள். தங்குமிடங்களில் அது மிகக் கெட்டது.269
30. அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடம்புரளச் செய்வதற்காக அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றனர். “சுகம் அனுபவியுங்கள்! உங்களது சேருமிடம் நரகமே!” என்று கூறுவீராக!
31. கொடுக்கல் – வாங்கலோ, நட்போ இல்லாத ஒருநாள் வருவதற்கு முன்பே தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவிட வேண்டும் எனவும் இறைநம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக!
32. வானங்களையும், பூமியையும் அல்லாஹ்தான் படைத்தான். அவனே வானிலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் உங்களுக்கு உணவாக விளைச்சல்களை வெளிப்படுத்தினான். அவனே தனது கட்டளையால் கப்பலை, அது கடலில் செல்வதற்காக உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான். மேலும் உங்களுக்காக ஆறுகளையும் வசப்படுத்தியுள்ளான்.
33. அவன், உங்களுக்காக இடைவிடாது இயங்குபவையாக சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். மேலும், உங்களுக்காக இரவையும், பகலையும் வசப்படுத்தியுள்ளான்.
34. அவனிடம் நீங்கள் கேட்ட அனைத்தையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் கணக்கிட முடியாது. மனிதன் அநியாயக்காரன்; மிகவும் நன்றி கெட்டவன்.
35. “என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
36. என் இறைவனே! இவை மக்களில் அதிகமானவர்களை வழிகெடுத்து விட்டன. எனவே, யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவரே என்னைச் சார்ந்தவர். யாரேனும் எனக்கு மாறு செய்தால், அப்போது நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.270
37. எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!
38. எங்கள் இறைவனே! நாங்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் நீயே அறிவாய். பூமியிலோ, வானத்திலோ எந்த ஒன்றுமே அல்லாஹ்வை விட்டும் மறையாது.
39. வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எனது இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன்.
40. என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
41. எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)
42. அநியாயக்காரர்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கிறான் என நினைக்காதீர்! பார்வைகள் எந்த நாளில் நிலைகுத்தி நிற்குமோ அந்த நாளுக்காகவே அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான்.
43. (அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியவர்களாக விரைந்தோடுவார்கள். அவர்களின் பார்வைகள் அவர்களிடம் மீளாது. அவர்களின் உள்ளங்கள் வெறுமையடைந்திருக்கும்.
44. மனிதர்களிடம் வேதனை வரும் நாளைப்பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அப்போது, “எங்கள் இறைவனே! சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உன் அழைப்பை ஏற்றுத் தூதர்களையும் பின்பற்றுவோம்” என்று அநியாயக்காரர்கள் கூறுவார்கள். “உங்களுக்கு அழிவே இல்லை என்பதாக இதற்கு முன்பு நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?”
45. “தங்களுக்கே அநியாயம் செய்து கொண்டோரின் வசிப்பிடங்களில் நீங்களும் வாழ்ந்தீர்கள். அவர்களிடம் நாம் எப்படி (வேதனை) செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளது. அந்த எடுத்துக்காட்டுகளையும் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்” (என்று இறைவன் கூறுவான்.)271
46. அவர்கள் கடுமையாகத் தமது சூழ்ச்சிகளைச் செய்தனர். மலைகள் பெயர்ந்து விடும் அளவுக்கு அவர்களின் சூழ்ச்சி இருந்தாலும், அவர்களின் சூழ்ச்சி(யின் முடிவு) அல்லாஹ்விடமே இருக்கிறது.
47. அல்லாஹ், தன் தூதர்களிடம் அளித்த வாக்குறுதிக்கு மாறு செய்பவன் என நினைக்காதீர்! அல்லாஹ் மிகைத்தவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
48. அந்நாளில் இப்பூமி வேறு பூமியாகவும், வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும். அவர்கள், அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளிப்படுவார்கள்.272
49. அன்றைய தினம், சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை நீர் காண்பீர்.
50. அவர்களின் சட்டைகள் மரப் பிசினால் ஆனவை. அவர்களின் முகங்களை நெருப்பு சூழ்ந்து கொள்ளும்.
51. ஒவ்வொருவருக்கும் அவர் செய்ததற்கான கூலியை அல்லாஹ் வழங்குவதே இதற்குக் காரணம். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
52. இது மக்களுக்கான பிரகடனமாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், அவன் மட்டுமே ஏக இறைவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது.)