அத்தியாயம் : 11
வசனங்களின் எண்ணிக்கை: 123
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், ரா. (இது) வேதம். நன்கறிந்த நுண்ணறிவாளனால் இதன் வசனங்கள் உறுதி செய்யப்பட்டு, பின்னர் தெளிவாக்கப்பட்டுள்ளது.
2. “அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. நான் அவனிடமிருந்து உங்களுக்கு எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கிறேன்” (என்று நபியே கூறுவீராக!)
3. “உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அழகிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான். நற்செயல்களை உடைய ஒவ்வொருவருக்கும் தனது அருளை வழங்குவான். நீங்கள் புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறுவீராக!)
4. நீங்கள் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றலுடையவன்.
5. அறிந்து கொள்ளுங்கள்! அவனிடமிருந்து மறைப்பதற்காக அவர்கள் தமது நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் தமது ஆடைகளால் போர்த்திக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் அவன் அறிகிறான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன்.250
6. உணவளிப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. அதன் தங்குமிடத்தையும், அது ஒப்படைக்கப்படும் இடத்தையும் அவன் அறிகிறான். அனைத்தும் தெளிவான ஏட்டில் உள்ளன.
7. அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின்மீது இருந்தது. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்.) “நீங்கள் மரணத்திற்குப் பின் உயிர்ப்பித்து எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் “இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.251
8. அவர்களுக்கான தண்டனையை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பிற்படுத்தினால் “அதைத் தடுத்து நிறுத்தியது எது?” என்று கேட்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் திருப்பப்படாது. அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும்.
9. நமது அருளை மனிதனுக்குச் சுவைக்கச் செய்து, பின்னர் அவனிடமிருந்து அதை நாம் பறித்து விட்டால் அவன் விரக்தியடைந்து, நன்றி கெட்டவனாகி விடுகிறான்.
10. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், அருளை நாம் சுவைக்கச் செய்தால் “என்னை விட்டும் துன்பங்கள் நீங்கி விட்டன” என்று கூறுகிறான். அவன் மகிழ்ச்சியடைந்து ஆணவம் கொள்கிறான்.
11. பொறுமையை மேற்கொண்டு, நற்செயல்கள் செய்வோரைத் தவிர! அவர்களுக்கே மன்னிப்பும், பெரும் கூலியும் உண்டு.
12. “இவருக்கு ஒரு கருவூலம் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வந்திருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதால் (நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதில் சிலவற்றை நீர் விட்டுவிடுவீர் போலும். அதனால் உமது உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகலாம். நீர் எச்சரிப்பவர் மட்டுமே! ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன்.
13. “இவர் இதைப் புனைந்து சொல்கிறார்” என அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் புனையப்பட்ட பத்து அத்தியாயங்களை இதேபோன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களை (உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
14. அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்காவிட்டால், ‘இது அல்லாஹ்வின் ஞானத்தால் அருளப்பட்டது; அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! எனவே நீங்கள் கட்டுப்படுகிறீர்களா? (என்று கேட்பீராக!)
15. யார் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் விரும்புகிறார்களோ அவர்களின் செயல்களுக்கு இங்கே முழுமையாகக் கூலி கொடுப்போம். அவர்கள் அதில் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
16. மறுமையில் அவர்களுக்கு நரக நெருப்பைத் தவிர எதுவுமில்லை. அவர்கள் உருவாக்கியவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாகக் கூடியவையாகும்.
17. தம் இறைவனின் தெளிவான சான்றில் இருப்ப(வர் இவ்வுலக வாழ்வை விரும்புபவரைப் போன்ற)வரா? இதற்குமுன்பு மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும், அருளாகவும் இருக்கும் நிலையில் அவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் அதனை எடுத்துரைக்கிறார். அவர்கள் அதனை நம்புகின்றனர். அக்கூட்டத்தாரில் யார் இதை மறுக்கிறாரோ அவருக்கு நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும். எனவே, இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்! இது உமது இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை. எனினும் அதிகமான மக்கள் (இதன்மீது) நம்பிக்கை கொள்வதில்லை.252
18. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட மிக அநியாயக்காரன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்பு நிறுத்தப்படுவார்கள். “தமது இறைவன்மீது பொய்யுரைத்தவர்கள் இவர்கள்தான்!” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள்மீது உள்ளது.253
19. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அதைக் கோணலாக்க முனைகின்றனர். அவர்கள்தான் மறுமையை மறுப்பவர்கள்.
20. அவர்கள் பூமியில் தப்பிப்போராக இல்லை. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலர்கள் இல்லை. அவர்களுக்கு வேதனை இரு மடங்காக்கப்படும். அவர்கள் செவியேற்கச் சக்தி பெற்றோராக இருக்கவில்லை; பார்ப்போராகவும் இருக்கவில்லை.
21. அவர்கள்தான் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் பொய்யாக உருவாக்கிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.
22. உண்மையாகவே அவர்கள்தான் மறுமையில் மிகவும் நஷ்டமடைந்தவர்கள்.
23. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தமது இறைவனுக்குப் பணிந்து நடக்கிறார்களோ அவர்களே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
24. இந்த இரு பிரிவினரின் எடுத்துக்காட்டு, குருடு மற்றும் செவிட்டுத் தன்மை கொண்டவனையும், பார்வை மற்றும் செவிப்புலன் கொண்டவனையும் போன்றதாகும். இவ்விரு பிரிவினரும் தன்மையால் சமமானவர்களா? சிந்திக்க மாட்டீர்களா?
25, 26. நூஹை, அவரது சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பினோம். “அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிப்பவன். உங்கள்மீது துன்புறுத்தும் நாளின் வேதனை (ஏற்படுவது) குறித்து நான் பயப்படுகிறேன்” (என்று அவர் கூறினார்.)
27. “நீர் எங்களைப் போன்ற மனிதர் என்றே நாங்கள் கருதுகிறோம். எங்களில் பார்த்தவுடனே தெரிகின்ற இழிந்தவர்களே உம்மைப் பின்பற்றக் காண்கிறோம். எங்களைவிட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக, உங்களைப் பொய்யர்கள் என்றே எண்ணுகிறோம்” என்று அவரது சமுதாயத்திலுள்ள இறைமறுப்பாளர்களாகிய பிரமுகர்கள் கூறினர்.
28. “என் சமுதாயத்தினரே! எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் நான் இருந்து, அவன் தனது அருளை எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டால், நீங்கள் அதை வெறுப்போராக இருக்கும் நிலையில் அதை உங்களுக்கு நாங்கள் வற்புறுத்த முடியுமா? என்பதைச் சிந்தித்தீர்களா?” என்று அவர் கேட்டார்.
29. “என் சமுதாயத்தினரே! இதற்காக உங்களிடம் நான் எந்தப் பொருளாதாரத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. இறைநம்பிக்கை கொண்டோரை நான் விரட்ட மாட்டேன். அவர்கள் தமது இறைவனைச் சந்திக்கக் கூடியவர்கள். மாறாக, உங்களை அறிவற்ற சமூகமாகவே காண்கிறேன்”
30. “என் சமுதாயத்தினரே! அவர்களை நான் விரட்டி விட்டால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? சிந்திக்க மாட்டீர்களா?”
31. “அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் இருப்பதாக உங்களிடம் கூற மாட்டேன். நான் மறைவானதை அறியவும் மாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கின்றனவோ, அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ்வே நன்கறிந்தவனாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் வழங்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அவ்வாறு கூறினால் நான் அநியாயக்கார்களில் ஒருவனாகி விடுவேன்” (என்று நூஹ் கூறினார்)
32. “நூஹே! எங்களிடம் நீர் வாதம் செய்து விட்டீர். அதிகமாகவே எங்களிடம் வாதம் செய்துவிட்டீர். நீர் உண்மையாளர்களில் இருந்தால், நீர் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.
33, 34. “அல்லாஹ் நாடினால் அதை உங்களிடம் அவன்தான் கொண்டு வருவான். நீங்கள் தப்பிப்போர் அல்ல! நான் உங்களுக்கு அறிவுரை கூற விரும்பினாலும், உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடி விட்டால் எனது அறிவுரை உங்களுக்குப் பயனளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்” என்று அவர் கூறினார்.
35. “இதை இவர் புனைந்து கூறி விட்டார்” என்று அவர்கள் சொல்கிறார்களா? “நான் இதைப் புனைந்து கூறியிருந்தால் எனது குற்றம் என்மீதே சாரும். ஆனால், நீங்கள் செய்யும் குற்றங்களை விட்டும் நான் விலகியவன்” என்று (நபியே!) கூறுவீராக!
36, 37. “உமது சமுதாயத்தில் (இதுவரை) இறைநம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி யாரும் இறைநம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றிக் கவலைப்படாதீர்! நமது கண்களுக்கு முன்பாகவும், நமது அறிவிப்பின்படியும் கப்பலைக் கட்டுவீராக! அநியாயக்காரர்கள் தொடர்பாக என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்!” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.
38, 39. அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவரது சமுதாயப் பிரமுகர்கள் அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால், (இப்போது) நீங்கள் கேலி செய்வதைப் போன்று (விரைவில்) நாங்களும் உங்களைக் கேலி செய்வோம். இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான தண்டனை யார்மீது இறங்கும் என்பதையும் அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று அவர் கூறினார்.
40. முடிவில் நமது கட்டளை வந்து, நீரூற்று பொங்கியபோது, “ஒவ்வொன்றிலும் உள்ள ஆண், பெண் கொண்ட ஜோடியையும், யார்மீது வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர உமது குடும்பத்தினரையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இறைநம்பிக்கை கொள்ளவில்லை.
41. “இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயரால்தான். எனது இறைவன் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று அவர் கூறினார்.
42. அக்கப்பல் மலைகளைப் போன்ற அலைகளில் அவர்களைக் கொண்டு சென்றது. ஒதுங்கிய இடத்திலிருந்த தனது மகனை நூஹ் அழைத்து, “என் அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! இறைமறுப்பாளர்களுடன் நீ ஆகிவிடாதே!” என்றார்.
43. “இந்தத் தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஒரு மலையில் ஒதுங்கிக் கொள்வேன்” என அவன் கூறினான். “இன்றைய தினம் அவனது கட்டளையிலிருந்து காப்பாற்றுபவர் யாருமில்லை. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்தானோ அவரைத் தவிர!” என்று அவர் கூறினார். அவ்விருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டது. அப்போது அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.
44. “பூமியே! உனது தண்ணீரை விழுங்கிக் கொள்! வானமே! நீயும் நிறுத்திக் கொள்!” என்று கூறப்பட்டது. தண்ணீர் வடிந்தது. காரியம் முடிக்கப்பட்டது. அக்கப்பல் ஜூதி மலைமீது நிலை கொண்டது. “அநியாயக்காரக் கூட்டத்தாருக்கு அழிவுதான்!” என்று கூறப்பட்டது.
45. நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார்.
46. “நூஹே! அவன் உமது குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல! இ(வ்வாறு பிரார்த்திப்ப)து சிறந்த செயலும் அல்ல! எதுபற்றி உமக்கு அறிவு இல்லையோ அதை நீர் என்னிடம் கேட்க வேண்டாம். நீர் அறியாதவர்களில் ஒருவராகிவிட வேண்டாம் என உமக்கு நான் அறிவுறுத்துகிறேன்” என்று (இறைவன்) கூறினான்.254
47. “என் இறைவனே! எனக்கு எதுபற்றி அறிவு இல்லையோ அதை உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியாவிட்டால் நான் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.
48. “நூஹே! உமக்கும், உம்முடன் உள்ள சமுதாயங்களுக்கும் நமது அமைதியும், அருள்வளங்களும் உள்ள நிலையில் நீர் இறங்குவீராக!” என்று கூறப்பட்டது. இன்னும் சில சமுதாயங்களுக்கு வசதி வாய்ப்புகளை வழங்குவோம். பின்னர் நம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனை அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
49. இவை மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கிறோம். நீரும் உமது சமூகத்தினரும் இதற்கு முன் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! இறையச்சமுடையோருக்கே (நல்ல) முடிவு உள்ளது.
50. ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை” என்று அவர் கூறினார்.
51. “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி, என்னைப் படைத்தவனிடமே உள்ளது. சிந்திக்க மாட்டீர்களா?”
52. “என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்கள்மீது தொடர்மழையைப் பொழியச் செய்வான். உங்கள் வலிமையை மென்மேலும் அதிகரிப்பான். நீங்கள் குற்றமிழைத்தோராகப் புறக்கணித்து விடாதீர்கள்” (என்று அவர் கூறினார்.)
53. “ஹூதே! நீர் எந்த ஒரு தெளிவான சான்றையும் எங்களிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடப் போவதில்லை. நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என அவர்கள் கூறினர்.
54, 55. “எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குத் தீங்கை ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்கிறோம்” (என்றும் கூறினர்.) “நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன். அவனை விட்டுவிட்டு, நீங்கள் (அவனுக்கு) எதனை இணையாக்குகின்றீர்களோ அதனைவிட்டும் நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாக இருங்கள்! நீங்கள் அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (அதன்) பின்னர் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.
56. “என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் முன்நெற்றியை அவனே பிடித்து வைத்துள்ளான். என் இறைவன் நேரான வழியில் உள்ளான்”
57. “நீங்கள் புறக்கணித்தால், எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். என் இறைவன் உங்களுக்கு மாற்றாக வேறு சமுதாயத்தைக் கொண்டு வருவான். நீங்கள் அவனுக்குச் சிறிதும் தீங்கிழைக்க முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்” (என்றும் கூறினார்.)
58. நமது உத்தரவு வந்தபோது, நம் அருளால் ஹூதையும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். அவர்களைக் கடும் வேதனையிலிருந்தும் காப்பாற்றினோம்.
59. இவர்களே ஆது சமுதாயத்தினர்! அவர்கள் தமது இறைவனின் சான்றுகளை மறுத்து, அவனது தூதர்களுக்கு மாறுசெய்தனர்; ஒவ்வொரு பிடிவாதக்கார அடக்குமுறையாளனின் கட்டளையையும் பின்பற்றினர்.
60. இவ்வுலகிலும் மறுமை நாளிலும் அவர்கள் சாபம் தொடருமாறு செய்யப்பட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தார்கள். அறிந்து கொள்ளுங்கள்! ஹூதுடைய கூட்டத்தினராகிய ஆது சமுதாயத்திற்கு அழிவுதான்!
61. ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்து, அதில் உங்களை வாழ வைத்தான். எனவே, அவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனிடமே திரும்புங்கள்! எனது இறைவன் அருகிலிருப்பவன்; பதிலளிப்பவன்” என்று கூறினார்.
62. “ஸாலிஹே! இதற்கு முன் நீர் எங்களில் நம்பத் தகுந்தவராக இருந்தீர். எங்கள் முன்னோர் வணங்கியதை, நாங்கள் வணங்குவதைவிட்டும் எங்களைத் தடுக்கிறீரா? நீர் எதனை நோக்கி எங்களை அழைக்கிறீரோ அதுபற்றி நாங்கள் கடுமையான சந்தேகத்தில் இருக்கிறோம்” என அவர்கள் கூறினர்.
63. “என் சமுதாயத்தினரே! நான் எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் இருந்து, அவன் தனது அருளை எனக்கு வழங்கியிருந்தும் அவனுக்கு நான் மாறு செய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார் என்பதைச் சிந்தித்தீர்களா? நீங்களோ எனக்கு இழப்பையே அதிகப்படுத்துவீர்கள்” என்று அவர் கூறினார்.
64. “என் சமுதாயத்தினரே! இது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அதை விட்டு விடுங்கள். அது அல்லாஹ்வின் பூமியில் மேயட்டும். அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள்! அவ்வாறு செய்தால் அருகிலுள்ள வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்றும் கூறினார்.)
65. ஆனால் அவர்கள் அதை அறுத்து விட்டனர். “(வேதனைக்கு முன்) மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகமனுபவியுங்கள்! இது பொய்ப்பிக்க முடியாத வாக்காகும்” என்று அவர் கூறினார்.
66. நமது கட்டளை வந்தபோது, நமது அருளால் ஸாலிஹையும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். மேலும் அந்நாளின் இழிவிலிருந்தும் (அவர்களைக் காப்பாற்றினோம்.) உமது இறைவன் வலிமைமிக்கவன்; மிகைத்தவன்.
67, 68. அநியாயம் செய்தோரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்கள் அங்கு வாழ்ந்ததேயில்லை என்பதைப் போன்று, தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தார்கள். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது சமுதாயத்திற்கு அழிவுதான்.
69. இப்ராஹீமிடம் நமது தூதர்கள் நற்செய்தியைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஸலாம் கூறினர். அவரும் ஸலாம் கூறினார். அவர் சற்றும் தாமதிக்காமல், பொறித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
70. அதனை நோக்கி அவர்களின் கைகள் செல்லாததைக் கண்டதும் அவர்களை வினோதமானவர்களாகக் கண்டு, அவர்களைப் பற்றி மனதிற்குள் பயந்தார். “அஞ்சாதீர்! நாங்கள் லூத்தின் சமுதாயத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.
71. அவருடைய மனைவியும் நின்றிருந்தார். அவர் சிரித்தார். அப்போது அவருக்கு இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்கிற்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.
72. “என் கைச்சேதமே! நான் கிழவியாகவும், என் கணவராகிய இவர் வயோதிகராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? இது மிகவும் ஆச்சரியமான விஷயமே!” என்று அவர் கூறினார்.
73. “அல்லாஹ்வின் கட்டளையில் நீர் ஆச்சரியப்படுகிறீரா? (இப்ராஹீமின்) குடும்பத்தாரே! அல்லாஹ்வின் கருணையும், அவனது அருள்வளங்களும் உங்கள்மீது உண்டாகட்டும்! அவன் புகழுக்குரியவன்; மகிமை மிக்கவன்” (என வானவர்கள் கூறினர்.)
74. இப்ராஹீமிடமிருந்து பயம் நீங்கி, அவரிடம் நற்செய்தி வந்தபோது, லூத்தின் சமுதாயத்தைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
75. இப்ராஹீம் சகிப்புத் தன்மை கொண்டவர்; இரக்கமுடையவர்; (அல்லாஹ்வை நோக்கித்) திரும்பக் கூடியவர்.
76. “இப்ராஹீமே! இ(வ்வாறு வாதிப்ப)தைத் தவிர்ப்பீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தடுக்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்” (என்று கூறப்பட்டது.)
77. லூத்திடம் நமது தூதர்கள் வந்தபோது, அவர்களைப் பற்றி அவர் கவலைக்குள்ளானார். அவர்களுக்காக மன வேதனையடைந்து, “இது மிகவும் கடுமையான நாள்” என்று கூறினார்.
78. அவரது சமுதாயத்தினர் விரைந்து அவரிடம் வந்தனர். இதற்கு முன்பும் அவர்கள் கெட்ட செயல்களைச் செய்வோராக இருந்தனர். “என் சமுதாயத்தினரே! இவர்கள் எனது புதல்வியர். இவர்கள் உங்களுக்கு (மணமுடிக்கத்) தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனது விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள். உங்களில் ஒரு நல்ல மனிதர் கூட இல்லையா?” என்று கேட்டார்.
79. “எங்களுக்கு உம்முடைய புதல்வியரிடம் எந்தத் தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர். நாங்கள் எதை விரும்புகிறோம் என்பதையும் நீர் அறிந்தே இருக்கிறீர்!” என அவர்கள் கூறினர்.
80. “உங்கள் விஷயத்தில் எனக்கு வலிமை இருந்திருக்க வேண்டுமே! அல்லது வலிமையான ஆதரவை நான் பெற்றிருக்க வேண்டுமே!” என்று அவர் கூறினார்.255
81. “லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்! அவர்கள் உம்மை நோக்கி வந்துசேர முடியாது. இரவின் ஒரு பகுதியில் உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தினருடன் புறப்படுவீராக! உங்களில் யாரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படப் போகும் துன்பம் (உமது மனைவியாகிய) அவளுக்கும் ஏற்படும். அவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை நேரம் அருகில் இல்லையா?
82, 83. நமது கட்டளை வந்தபோது, அவ்வூரின் மேற்புறத்தைக் கீழ்ப்புறமாக ஆக்கினோம். உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்ட, அடுக்கடுக்கான, சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது பொழிந்தோம். அது இந்த அநியாயக்காரர்களுக்குத் தூரத்தில் இல்லை.
84. மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷூஐபை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அளவிலும் நிறுவையிலும் குறைவை ஏற்படுத்தாதீர்கள்! உங்களை நல்ல நிலையிலேயே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் ஒரு நாளின் தண்டனையை உங்கள் விஷயத்தில் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.
85. “என் சமுதாயத்தினரே! அளவையும், நிறுவையையும் நீதியாக முழுமைப்படுத்துங்கள்! மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள்!”
86. “நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், (உங்கள் வியாபாரத்தில்) அல்லாஹ் மீதமாக்கித் தருவதே உங்களுக்குச் சிறந்தது. நான் உங்கள்மீது கண்காணிப்பவனாக இல்லை” (என்றும் கூறினார்)
87. “ஷுஐபே! எங்கள் முன்னோர் வணங்கியவற்றையும், எங்கள் செல்வங்களை நாங்கள் விரும்பிவாறு பயன்படுத்திக் கொள்வதையும் விட்டுவிட வேண்டுமென உமது தொழுகைதான் உமக்கு ஏவுகிறதா? நீரே சகிப்புத்தன்மை மிக்கவர்; நேர்மையாளர்” என்று அவர்கள் (கிண்டலாகக்) கூறினர்.
88. “என் சமுதாயத்தினரே! எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் நான் இருப்பதையும், அவன் தனது அழகிய வாழ்வாதாரத்தை எனக்கு வழங்கியிருப்பதையும் சிந்தித்தீர்களா? எதை விட்டும் உங்களைத் தடுக்கிறேனோ அதில் உங்களிடம் மாற்றமாக நடப்பதற்கு நான் விரும்பவில்லை. என்னால் இயன்றவரை சீர்திருத்தத்தைத் தவிர வேறெதையும் நான் நாடவில்லை. எனக்குரிய உதவி அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். அவனிடமே திரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
89. “என் சமுதாயத்தினரே! நூஹுடைய சமுதாயத்திற்கோ, ஹூதுடைய சமுதாயத்திற்கோ, ஸாலிஹுடைய சமுதாயத்திற்கோ துன்பம் ஏற்பட்டதைப் போன்று உங்களுக்கும் ஏற்படுமளவுக்கு என்மீதுள்ள பகை உங்களைத் தூண்ட வேண்டாம். லூத்தின் சமுதாயமும் உங்களுக்குத் தூரத்தில் இல்லை”
90. “உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனிடமே திரும்புங்கள்! எனது இறைவன் நிகரிலா அன்பாளன், பேரன்பு கொண்டவன்” (என்றும் கூறினார்.)
91. “ஷுஜபே! நீர் கூறுவதில் பெரும்பாலானவை எங்களுக்கு விளங்கவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மைக் காண்கிறோம். உமது குடும்பத்தினர் இல்லையென்றால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களில் மதிப்பிற்குரியவராகவும் இல்லை” என அவர்கள் கூறினர்.
92. “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வைவிட என் குடும்பத்தினர் உங்களுக்கு மிகுந்த மதிப்புடையவர்களா? அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் ஆக்கி விட்டீர்களே! நீங்கள் செய்பவற்றை என் இறைவன் சூழ்ந்தறிபவன்” என்று கூறினார்.
93. “எனது சமுதாயத்தினரே! உங்கள் நிலைப்பாட்டின்படி நீங்கள் செயல்படுங்கள்! நானும் செயல்படுகிறேன். இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், யார் பொய்யர் என்பதையும் அறிந்து கொள்வீர்கள். நீங்களும் எதிர்பாருங்கள்! உங்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்” (என்றும் கூறினார்.)
94, 95. நமது உத்தரவு வந்தபோது, நம் அருளால் ஷுஐபையும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். அநியாயம் செய்தோரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்கள் அங்கு வாழ்ந்ததேயில்லை என்பதைப் போன்று, தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது சமுதாயம் அழிந்தது போன்றே மத்யன்வாசிகளுக்கும் அழிவுதான்!
96, 97. ஃபிர்அவ்ன் மற்றும் அவனது சமுதாயப் பிரமுகர்களிடம் மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம். அவர்கள் ஃபிர்அவ்னுடைய கட்டளையைப் பின்பற்றினார்கள். ஃபிர்அவ்னுடைய கட்டளை நேரானதாக இல்லை.
98. மறுமை நாளில் அவன் தனது கூட்டத்தாருக்கு முன்னால் சென்று, அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வான். அழைத்துச் செல்லப்படும் அந்த இடம் மிகக் கெட்டது.
99. இவ்வுலகிலும் மறுமை நாளிலும் அவர்கள் சாபம் தொடருமாறு செய்யப்பட்டனர். (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட இந்தப் பரிசு மிகக் கெட்டது.
100. இவை ஊர்களைப் பற்றிய சில செய்திகளாகும். அவற்றை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். அவற்றில் நிலைத்திருப்பவையும், அழிந்தவையும் உள்ளன.
101. நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை; மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர். எனவே, உம் இறைவனின் கட்டளை வந்தபோது, அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தார்களோ அந்தக் கடவுள்கள் அவர்களைச் சிறிதும் காப்பாற்றவில்லை. அவர்களுக்கு இழப்பைத் தவிர வேறெதையும் அவை அதிகப்படுத்தவில்லை.
102. அநியாயம் செய்யும் ஊராரை உமது இறைவன் பிடித்தால் அவனது பிடி இவ்வாறுதான் இருக்கும். அவனுடைய பிடி துன்புறுத்தக் கூடியது; மிகக் கடுமையானது.256
103. மறுமை வேதனையை அஞ்சுவோருக்கு இதில் சான்று உள்ளது. அது ஒரு நாள்! அதில்தான் மக்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அது சாட்சி சொல்லப்படும் நாள்!
104. நிர்ணயிக்கப்பட்ட தவணைக்காகவே தவிர அதை நாம் பிற்படுத்தவில்லை.
105. அது வரும் நாளில் அவனது அனுமதியின்றி எவரும் பேச முடியாது. அவர்களில் பாக்கியமிழந்தவனும், பாக்கியமுடையவனும் இருப்பார்கள்.257
106. பாக்கியமிழந்தோர் நரகத்தில் இருப்பார்கள். அதில் அவர்களுக்குக் கதறலும், தேம்பலும் இருக்கும்.
107. உமது இறைவன் நாடியதைத் தவிர, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
108. பாக்கியம் செய்யப்பட்டோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர, வானங்கள், பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) முடிவுறாத அருட்கொடை!
109. அவர்கள் எதை வணங்குகிறார்களோ அதுபற்றி நீர் சந்தேகத்தில் இருக்காதீர்! இதற்குமுன்பு அவர்களின் முன்னோர் வணங்கியதைப் போன்றே அவர்களும் வணங்குகின்றனர். அவர்களுக்குரிய (தண்டனையின்) பங்கை அவர்களுக்குக் குறைவின்றி முழுமையாக வழங்குவோம்.
110. மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அதில் கருத்துவேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனின் வாக்கு முந்தியிருக்கா விட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இதைப் பற்றி அவர்கள் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.
111. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்(களின் பலன்)களை உமது இறைவன் முழுமையாகக் கொடுப்பான். அவர்கள் செய்வதை அவன் நன்கறிந்தவன்.
112. (நபியே!) உமக்கு ஏவப்பட்டவாறு நீரும், திருந்தி உம்முடன் இருப்போரும் உறுதியாக இருங்கள். வரம்பு மீறி விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன்.
113. அநியாயம் செய்வோரை நோக்கிச் சாய்ந்து விடாதீர்கள்! அவ்வாறாயின், உங்களை நரக நெருப்புத் தீண்டி விடும். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலர்கள் யாருமில்லை. நீங்கள் உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.258
114. பகலின் இரு விளிம்புகளிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நற்செயல்கள் தீமைகளை நீக்கி விடும். நினைவுகூர்வோருக்கு இது அறிவுரையாகும்.259
115. பொறுமையை மேற்கொள்வீராக! நற்செயல் செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.
116. உங்களுக்கு முன்னிருந்த தலைமுறையினரில், பூமியில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கும் சான்றோர் இருந்திருக்க வேண்டாமா? அவர்களில் (அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்த) சிலரைத் தவிர! அவர்களை நாம் காப்பாற்றினோம். அநியாயக்காரர்கள் எதில் சுகபோகம் அளிக்கப்பட்டார்களோ அதையே பின்தொடர்ந்தனர். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.
117. எந்த ஊரையும், அதிலுள்ளவர்கள் சீர்திருத்தம் செய்வோராக இருக்கும் நிலையில் உமது இறைவன் அநியாயமாக அழிக்க மாட்டான்.
118, 119. உம் இறைவன் நாடியிருந்தால் மக்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (எனினும்) உமது இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர மற்றவர்கள் கருத்துவேறுபாட்டிலேயே நீடிப்பார்கள். இ(வ்வாறு சோதிப்ப)தற்காகவே அவர்களைப் படைத்துள்ளான். (இதன்மூலம்) “ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையடைந்துவிட்டது.
120. தூதர்களின் செய்திகளில் எதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவோமோ அத்தகைய ஒவ்வொன்றையும் உமக்கு நாம் எடுத்துரைக்கிறோம். இதில் உண்மையும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும், நினைவூட்டலும் உம்மிடம் வந்துவிட்டது.
121, 122. “உங்கள் நிலைப்பாட்டின்படி நீங்கள் செயல்படுங்கள்! நாங்களும் செயல்படுகிறோம். நீங்கள் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்று இறைநம்பிக்கை கொள்ளாதவர்களிடம் கூறுவீராக!
123. வானங்களிலும், பூமியிலும் மறைவானது (பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துக் காரியங்களும் அவனிடமே கொண்டு செல்லப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவன்மீதே நம்பிக்கை வைப்பீராக! நீங்கள் செய்வதைப் பற்றி உமது இறைவன் கவனமற்றவனாக இல்லை.