நமது இந்திய தேசத்தில் ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் அடித்தளம் அமைத்துத் தருவது நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற பெரிதும் மதிக்கின்ற இந்திய அரசியல் சாசன சட்டம்தான். அனைத்து மக்களுக்குமான நீதி, சம உரிமை, கல்வி வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதற்கான வழி வகைகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது.
மதச்சார்பற்ற இந்திய நாட்டை இந்து நாடாக, இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றைச் செயல்திட்டத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் சங்பரிவார அமைப்புகள் அரசுத் துறைகளிலும் தங்களது சித்தாந்தவாதிகளை உட்புகுத்தி சனாதன சித்தாந்தங்களைப் பரப்பி வருகின்றன. இதில் நீதித்துறையும் விதிவிலக்கல்ல.
புதியக் கல்விக்கொள்கை, குடியுரிமை திருத்தச்சட்டம், விவசாய சீர்திருத்தச் சட்டம், நீட் தேர்வு என்று புதுப்புது சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும், தங்களுக்கிருக்கும் அதிகார பலத்தினால் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள். இந்திய அரசியல் சாசனத்திற்கும் மக்களுக்கும் எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடியவர்களை சட்டத்தை மதிக்காதவர்களாக, தேசப்பற்று அற்றவர்களாக மக்கள் மத்தியில் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறார்கள் இந்த ஃபாசிசவாதிகள்.
சாமியார்கள், துறவிகள் என்ற போர்வையில் வன்முறைப் பேச்சுக்கள் மூலம் அவ்வப்போது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டுவதும், அதனைத்தொடர்ந்து இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் பேரணியின் பேரில் கலவரம் செய்வதும் வாடிக்கையான செயல்கள்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தேசியக்கொடியை காவிக்கொடியாகும் காலம் வெகு விரைவில் இல்லை என கர்நாடக பா.ஜ.க அமைச்சர் பேசுகிறார், இந்தியா என்பது இந்து நாடு என ஒரு பா.ஜ.க. தலைவர் பேசுகிறார், முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என ஒருவர் பேசுகிறார், யதி நரசிங்கானந்த் என்ற பயங்கர வாதத்துறவி முஸ்லிம்களை கொன்று அழிப்பதற்கு அழைப்பு விடுக்கிறார், முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என உ.பி.யில் ஒரு பாலியல் சாமியார் பேசுகிறார். இப்படி நாளுக்கு நாள் இந்திய நாட்டின் மாண்பை சீர்குலைத்து, சனாதனத்தை நிறுவுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். சின் செயல் திட்டமான வர்ணாசிரமக் கொள்கையிலான ஆட்சி முறையை அமுல்படுத்துவதற்கு பெரும் தடையாக இருப்பது, நமது இந்திய அரசியல் சாசனச் சட்டம். மக்களுக்கான பாதுகாப்பையும் மதச்சார்பின்மையையும் உறுதிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனச்சட்டம் சங்கிகளின் சனாதனத்தை காலூன்றவிடாமல் ஒருமைப்பாட்டின் அரணாக அமைந்து அனைத்து மக்களையும் காத்து நிற்கிறது.
போலியான தேச பக்தியின் பேரில் வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மோடி வெளியிட்ட அறிவிப்பு அப்பட்டமான அரசியல் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேசியக்கொடிக்கென்று தனிச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் திருத்தி தேச பக்தியை சந்தைப்பொருளாக்கிய மோடியின் வகையறாக்கள் அன்றைய தினமே இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் எனச்சொல்லி இந்து ராஷ்டிரத்திற்கான அரசியலமைப்பு வரைவை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த மாபாதகச் செயல் குறித்து இதுவரை எந்த ஒரு பெரும் ஊடகங்களும் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றன. ஆளுநரைச் சந்தித்த ஒரு கூத்தாடியின் செய்தியை நொடிக்கு ஒரு முறை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்திய ஊடகங்கள் இந்திய இறையாண்மைக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து வாய்திறக்காமல் இருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கும், எதிர்கால இந்தியாவிற்கும் பேராபத்தை ஏற்படுத்தப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் உ.பி.யில் நடைபெற்ற தர்ம சன்சாத் கூட்டத்தில் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசியலமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டு 2023 அதே இடத்தில் மஹா மேளாவின் தர்ம சன்சாத் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதற்கான இந்துராஷ்டிர வரைவு அறிக்கையை சங்கராச்சாரியா பரிசத் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப், இந்து ராஷ்டிர நிர்மான் சமிதி தலைவர் கமலேஷ்வர் உபாத்யாய்; மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.என்.ரெட்டி, பாதுகாப்பு துறை நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்ம அறிஞர் சந்திரமணி மிஸ்ரா, உலக இந்து கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 700 பக்கங்களைக் கொண்ட சட்ட வரைவு தாயாரிக்கப்பட உள்ளதாகவும் அதில் 300 பக்கங்களை 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 32 பக்க இந்துராஷ்டிரா அரசியலமைப்பு வரைவின் படி முஸ்லிம்க ளுக்கும்,கிருத்தவர்களுக்கும் வாக்குரிமை பறிக்கப்படும், இந்தியாவின் தலை நகராக வாரணாசி அறிவிக்கப்படும், காசியில் மதங்களின் பாராளுமன்றம் நிர்மானிக்கப்படும். இதில் 543 உறுப்பினர்கள் செயல்படுவார்கள். ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வர்ணாசிரம அடிப்படையிலான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வேதகாலத்தில் இருந்த மரபுகளின் அடிப்படையிலேயே மக்கள் நடத்தப்படுவார்கள். பிறப்பால் மக்கள் பாகுபடுத்தப்பட்டு தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் அபாயமும் உள்ளது. கல்வி என்பது ஏழைகளுக்கும் சாமானியர்களுக்கும் எட்டாக்கனியாகி உயர்ந்த வகுப்பினராக கருதப்படும் பார்பனர்களுக்கு மட்டுமானதாக ஆவதும், தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் அடிமையாக்கப்படுவார்கள். நீதி என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் பழைய நிலைக்கு தள்ளப்படுவார்கள்,
சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அனுபவித்த துன்பங்களைவிட மிகப் பெரும் கொடுமைகளை அனுபவிக்கும் நிலையை இந்த வர்ணாசிரமச் சட்டம் ஏற்படுத்தும்.
இவர்களின் நரித்தந்திரத்தை உணாராத ஒரு சில அப்பாவி இந்து மக்கள் இந்து ராஷ்டிரத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர். உங்களது விரல்களைக் கொண்டே உங்களது கண்களை குத்துவதற்கான தந்திரத்தைதான் இந்தச் சனாதனக் கும்பல் செய்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்வதுதான் உங்களுக்கான பாதுகாப்பு .
சுருக்கமாகச் சொன்னால் இந்து ராஷ்டிரம் என்பது வர்ணாசிரமம் .வர்ணாசிரமம் என்பது பார்ப்பனர்கள் அல்லாத மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தும். தீண்டாமையின் பெயரில் கடந்த காலங்களில் நடந்த கொடுமைகள் அரங்கேறும். அடிமைகளாயிருந்த மக்களை மீட்டு கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான உரிமைகள் என அனைத்தையும் பெற்றுத்தர எத்தனையோ தலைவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள். மீட்டெடுத்த உரிமைகளை காக்கும் அரணாக இருக்கும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்குமானது. இதை உணர்ந்து செயலாற்றும் கடமை அனைவருக்கும் உள்ளது.
பாசிசவாதிகளின் சதிகளை முறியடிக்கத் தவறினால் ஒட்டு மொத்த இந்திய மக்களின் உரிமைக்கும், அமைதிக்கும் , ஆபத்து வருவதற்கான காலம் வெகு தூரம் இல்லை.