ஹிஜாப், உடை அல்ல; அது எங்கள் உரிமை! கடமை!

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட கர்நாடக நீதிமன்றத்தின் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பு முஸ்லிம்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்திருந்தது. முஸ்லிம்கள் எந்தப் பதட்டமும் இல்லாமல் இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்தனர்.

இதற்குக் காரணம், பாபரி மஸ்ஜித் தொடர்பான பகல் கொள்ளை தீர்ப்பைவிட வேறு ஒரு பாதிப்பை அளிக்கும் தீர்ப்பை இனி வரலாற்றில் முஸ்லிம்கள் சந்திக்கப் போவதில்லை. பாபரி மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பை ஆளும் பாசிச பாஜக எழுதிக் கொடுத்தது. உச்சநீதிமன்றம் அதை உச்ச ஸ்தாயியில் படித்தது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதுபோல்தான் அமையும் என்று சமுதாயம் முன்னரே முடிவு செய்து கொண்டது.

ஆம்! உள்துறை அமைச்சர் அமீத்ஷா முன்னுரை எழுதினார். கர்நாடக நீதிமன்றம் முடிவுரை எழுதியிருக்கின்றது. அவ்வளவு தான். அதே சமயம் இந்த அநியாயங்களை எல்லாம் சமுதாயம் ஜீரணித்துக் கொள்ள பழகிக் கொண்டது என்பது அதன் பொருள் அல்ல. தனக்குரிய நீதி கிடைப்பதற்கு இறை அருளை வேண்டிக் காத்திருக்கின்றது என்பது அதன் பொருளாகும்.

இப்போது தீர்ப்பின் வடிவில் வெளிவந்த அந்த முடிவுரையின் விமர்சனத்திற்குள் செல்லும் முன்பு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின்னணியையும் இவ்வழக்கில் ஆஜராகி வழக்கறிஞர்கள் வைத்த முக்கியமான வாதங்களையும் முதலில் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம்.

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியிலுள்ள பி.யூ மகளிர் கல்லூரியில் வழக்கமாக தலைமுக்காடு அணிந்து வந்த ஆறு மாணவிகள் திடீரென்று வகுப்பில் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால், அவர்கள் வகுப்புக்குள் வராமல் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியே அமர வைக்கப்படுகின்றனர்.
இதற்கு நிவாரணம் தேடி சில மாணவியர், “ஹிஜாப் அணிவது தங்களது கட்டாயமான மார்க்கக் கடமையாகும்; அது தங்களது அடிப்படை உரிமை என்று அரசமைப்புச் சட்டம் 25, 14ன் படி அறிவிக்க வேண்டும்” என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இந்நிலையில் பாஜகவின் மாணவரணியான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு முஸ்லிம் மாணவியரின் முக்காடு விஷயத்தில் மூக்கை நுழைக்கின்றது. இந்த மாணவியர் முக்காடு அணிந்து வந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என்று வீம்புக்கு அறிவிக்கின்றது. இதனால் இது மற்ற கல்லூரிகளுக்கும் பரவுகின்றது. மாணவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக காவித் துண்டுகளை அணிந்து கல்லூரிகளுக்கு வரவே இவ்விவகாரம் கர்நாடகாவையும் தாண்டி தேசியப் பிரச்சனையாக உருவெடுக்கின்றது.

இது தங்கள் கல்வியைப் பாதித்து விடக் கூடாது என்பதற்காக வேண்டி, ஓர் இடைக்கால உத்தரவை அளிக்குமாறு பிப்ரவரி 8ஆம் தேதி அதே நீதிமன்றத்தில் மாணவியர் கோரிக்கை வைத்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் இடைக்கால உத்தரவை அளிக்க மறுத்ததுடன் இவ்வழக்கை, தான் உட்பட தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி காஜி ஜெய்னுப்புன்னிஸா முஹ்யித்தீன் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுவதற்குப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.
இம்மூவர் அமர்வில் வந்த இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் அபாரமாகத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அவை வருமாறு:

1. அம்னா பின்த் பஷீர் எதிர் சிபிஎஸ்இ வழக்கு: கேரளாவில், CBSE (AIPMT) All-India Pre-Medical Entrance Test தேர்வில் மாணவிகள் தலைமுக்காடு அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டனர். இது தொடர்பாக 2016ஆம் ஆண்டு வழக்கில், கேரள உயர்நீதிமன்றம்,

“நம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! தமது அலங்காரத்தில் வெளியில் தெரிவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளை தமது மேற்சட்டைகளின் மீதும் போட்டுக் கொள்ளட்டும்” (24:31)

நபியே! தமது தலை முக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்றது. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். (33:59)

ஆகிய இரு திருக்குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டி, தலைமுக்காடு முஸ்லிம் பெண்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையாகும் என்று தீர்ப்பளித்தது.

2. அரசமைப்புச் சட்டம் விதி எண் 19 (1) கருத்துச் சுதந்தர வெளிப்பாட்டைத் தெரிவிக்கின்றது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இந்த விதியின் கீழ் அமைந்ததாகும். ஆனால் கர்நாடக அரசு விதி எண் 19 (2)ஐ காட்டி அந்த உரிமையைப் பறிக்க முயல்கின்றது.

அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்பாடு போன்ற பாதக அம்சங்கள் ஏற்பட்டால் மட்டுமே 19 (1) அளிக்கும் உரிமையை 19 (2)ன் படி பறிக்க முடியும். ஆனால் தலைமுக்காடு அணிவது இந்த பாதக அம்சங்களுக்கு கீழ் ஒருபோதும் வராது. அதனால் 19 (2) இதற்கு அறவே பொருந்தாது.

3. ஹிஜாப் பிரச்சனைக்குப் பிறகு மாணவ, மாணவியர் ஒரே விதமான சீருடை அணிய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதற்கு, கர்நாடக கல்விச் சட்டங்கள் அடிப்படையில் அதிகாரமில்லை.

4. 2006ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அஜ்மல் கான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தலைமுக்காடு கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய கடமை தான் என்று தீர்ப்பளித்தது.

5. புட்டசாமி தொடர்பான வழக்கில் உடை அணிவது தனிநபர் உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6. மாணவிகளை வகுப்புக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, தனித்து அமர வைத்திருப்பது மதரீதியிலான தீண்டாமையாகும்.

இவை அனைத்தும் ஹிஜாபுக்கு ஆதரவாக வழக்கறிஞர் வைத்த காமத் வைத்த அடுக்கடுக்கான ஆதாரங்களாகும்.

ஆனால் இவ்வாதங்களுக்கு எதிராக இரண்டு எதிர்வாதங்கள் வைக்கப்படுகின்றன.

1. ஃபாத்திமா தஸ்னீம் எதிர் கேரள அரசு வழக்கு: மேற்கண்ட CBSE தேர்வில் மாணவிகள் தலைமுக்காடு அணிவதை அனுமதித்த அதே நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு ஃபாத்திமா தஸ்னீம் வழக்கில் தடை செய்து விட்டது.

2. ஹுசைன் சயீத் எதிர் பாரத் எஜுகேஷன் சொஸைட்டி வழக்கு: இவ்வழக்கில் தலைமுக்காடு அணிய மும்பை உயர்நீதிமன்றம் தடை செய்து விட்டது. கர்நாடக அரசு தனக்குச் சாதகமாக, இந்தத் தீர்ப்பை ஆதாரமாகக் காட்டுகின்றது.

இவ்விரண்டுக்கும் காமத் விளக்கமளிக்கையில், ஃபாத்திமா தஸ்னீம் வழக்கு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த கல்வி நிறுவனம் தொடர்பானது. அரசமைப்புச் சட்டம் விதி எண். 30 சிறுபான்மை நிறுவனத்திற்குச் சில தனி உரிமைகளை அளிக்கின்றது. அந்த வகையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசு நிறுவனங்களை விட்டும் வேறுபடுகின்றன. எனவே அந்த வழக்கை இந்த வழக்குடன் பொருத்திப் பார்க்க முடியாது.

இரண்டாவது வழக்கான ஹுசைன் சயீத் வழக்கு மகளிர் பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட வழக்காகும். அதனால் “பெண்கள் மட்டும் படிக்கின்ற பள்ளிக்கூடத்தில் தலைமுக்காடு கட்டாயமில்லை” என்று அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று விளக்கமளித்தார்.

வழக்கறிஞர் காமத் அவர்களைப் போன்று இவ்வழக்கில் 4 மாணவியருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே அவர்கள், பிஜோ எம்மானுவேல் எதிர் கேரளா வழக்கு 1986ஐ மேற்கோள் காட்டி வாதிட்டார். யகோவாவின் சாட்சிகள் என்ற மதப்பிரிவைச் சார்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதை ரத்துச் செய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு கேரள அரசுக்கும், பள்ளிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்று பொருத்தமாகத் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

இப்படி அடுக்கடுக்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் அள்ளி வைத்த பிறகும் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை அளிக்க முன்வரும் அதே வேளையில், இறுதித் தீர்ப்பு வரும் வரை முஸ்லிம் மாணவியர் முக்காடு அணியக் கூடாது; மாணவர்கள் காவித் துண்டையும் அணியக் கூடாது என்று இரண்டையும் சம அளவில் நிறுத்தியது. அப்போதே இந்த தீர்ப்பின் போங்கு எப்படியிருக்கும் என்று யூகிக்க அல்ல! உறுதி செய்யவே முடிந்தது. நாம் முடிவு செய்தது போன்று தான் தீர்ப்பு அமைந்தது.

வழக்கறிஞர்களின் அசத்தலான வாதங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் அளிக்கின்ற மத சுதந்தரத்திற்கான அடிப்படை உரிமைகள், உச்ச நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம் அளித்த முன்னுதாரண தீர்ப்புகள், திருக்குர்ஆனிலிருந்து வழக்கறிஞர் காமத் சமர்ப்பித்த வசன ஆதாரங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அலசுக்குள் செல்வோம்.

ஹிஜாப் வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூவர் அமர்வு இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் தீர்ப்பளிக்கவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டப்படியும் தீர்ப்பளிக்கவில்லை. இந்தியாவின் உயிர் மூச்சுக் கொள்கையான மதச்சார்பின்மையை ஓரங்கட்டி விட்டு, மனசாட்சியையும் ஓய்த்து விட்டு, பெரும்பான்மையின வாதத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பளித்திருக்கின்றது.

இந்தத் தீர்ப்பு மூன்று கேள்விகளுக்கு விடையளிக்க முனைகின்றது. வழக்கறிஞர்கள் வைத்த வாதங்கள் 3 விதமாக அமைந்திருக்கின்றன.

1. ஹிஜாப் இஸ்லாமிய மார்க்கத்தில் அத்தியாவசியமான கடமையாகும்.

2. ஹிஜாப் என்ற ஆடை தங்களது விருப்பத்திற்குரிய அதே சமயம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஓர் ஆடையாகும். விரும்பிய உடைகளை அணிவது கருத்துச் சுதந்தரத்தில் அடிப்படையில் அமைந்த உரிமையாகும். ஆனால் இதற்கு எதிராக,ஒரே மாதிரியான ஆடைகளைத் (யூனிஃபார்ம்) தான் மாணவிகள் அணிய வேண்டும் என்ற பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் போடும் உத்தரவு, அரசமைப்புச் சட்டம் 25, 14 வழங்குகின்ற அந்த உரிமையைப் பறிக்கின்றது.

3. மாணவ, மாணவியர் சீருடை அணிய வேண்டும் என்று கர்நாடகாவின் கல்விச் சட்டத்தில் இல்லை. அவ்வாறு ஒரு சட்டம் இல்லாத போது சீருடை அணிய வேண்டும் கர்நாடக அரசு போட்ட உத்தரவு செல்லத்தக்கதல்ல!

இந்த மூன்று விஷயங்களுக்குத் தான் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

1. ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாத ஒன்றல்ல; அது அத்தியாவசியமானது கிடையாது என்று இந்த தீர்ப்பு கூறுகின்றது. அத்துடன் ஹிஜாப் இஸ்லாத்தில் தங்களுக்கு இன்றியமையாத கடமை என்று மாணவிகள் நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்றும் மூவர் அமர்வு கூறுகின்றது.

மூவர் அடங்கிய இந்த அமர்வின் முழு அறியாமையும் இங்கு தான் வெட்ட வெளிச்சத்திற்கு வருகின்றது.

அம்னா பின்த் பஷீர் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் திருக்குர்ஆனின் 24:31, 33:59 ஆகிய இரு வசனங்களை ஆதாரமாகக் காட்டியே தலைமுக்காடு முஸ்லிம் மாணவிகளுக்கு மிகவும் அவசியமானவை என்று தீர்ப்பளித்தது என்று தமது வாதத்தின்போது வழக்கறிஞர் தேவ்தத் காமத் எடுத்து வைத்தார். இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக முக்காடு அவசியம் என்று எடுத்துரைக்கின்றன.

முக்காடு அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத கூறில்லை என்று கூறுகெட்டத் தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளும் இவ்விரு வசனங்களையும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றனர் என்று தான் நாம் விளங்க முடிகின்றது. அதனால் நாம் அவ்விருவசனங்களையும் இங்கு விரிவாகப் பார்ப்பது அவசியம். அந்த அடிப்படையில் முதலில் நாம் 24:31 வசனத்தைப் பார்ப்போம்:

“நம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! தமது அலங்காரத்தில் வெளியில் தெரிவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளை தமது மேற்சட்டைகளின் மீதும் போட்டுக் கொள்ளட்டும்” (24:31 )

இந்த வசனத்தில் முக்காடுகள் என்பதற்கு خمر குமுர் என்ற அரபிச் சொல் இடம்பெறுகின்றது. இது பன்மைச் சொல்லாகும் இதன் ஒருமை خمار கிமார் என்பதாகும்.

وتَخَمَّرَتْ بالخِمار واخْتَمَرَتْ لَبِسَتْه وخَمَّرَتْ به رأْسَها غَطَّتْه

“தகம்மரத் பில் கிமார்” “இக்தமரத்” என்ற சொற்றொடர்களின் பொருள் “கிமார் அணிந்தாள்” என்பதாகும். “கம்மரத் பிஹி ரஃசஹா” என்பதின் பொருள் “கிமாரைக் கொண்டு தலையை மூடினாள்” என்பதாகும்.
இவ்வாறு லிஸானுல் அரப் என்ற அகராதியில் பாகம் 4, பக்கம் 254 இடம்பெற்றுள்ளது.

குர்ஆனில் இடம்பெறும் வார்த்தைகளுக்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் விளக்கமே முதன்மை விளக்கமாகும். அந்த அடிப்படையில் கீழ்க்காணும் நபி மொழிகள் கிமார் என்ற வார்த்தைக்கு தலை முக்காடு என்றே குறிப்பிடுகின்றன.

“மாதவிடாய் (ஏற்படுகின்ற, அதாவது பருவமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 546,திர்மிதீ (344)

“எனது சகோதரி காலணி அணியாமலும், கிமார் (தலைத்துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள், “உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத்துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள் என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நூல்: அபூதாவூத் (2865)

கிமார் என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் தலை முக்காடு என்று விளக்கமளிக்கின்றன. எனவே நபிமொழிகளின் அடிப்படையில் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கண்டிப்பாக அணிய வேண்டிய ஆடை என்றே தெளிவாக சந்தேகமில்லாமல் குறிப்பிடுகின்றன.

இரண்டாவதாக திருக்குர்ஆனின் 33:59 வசனத்தை விரிவாகப் பார்ப்போம்:

நபியே! தமது தலை முக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்றது. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். (33:59)

இந்த வசனத்தில் இடம் பெறும் ஜில்பாப் என்பது சட்டையாகும்.

ஜில்பாப் என்பது “கிமார்” என்பதை விட விசாலமானதும், மேல்துண்டை விட சிறியதும் ஆகும். அதனைக் கொண்டு ஒரு பெண் தனது தலையையும், நெஞ்சையும் மறைத்துக் கொள்வாள்.

லிஸானுல் அரப் என்ற அரபி அகராதி நூலில் முதல் பாகம் 272வது பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.

இஸ்லாத்தில் அடிப்படைகள் இரண்டாகும். ஒன்று திருக்குர்ஆன் மற்றொன்று நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தைக் குறிக்கின்ற ஹதீஸ் என்ற அடிப்படையாகும். இஸ்லாத்தின் முதல் அடிப்படையான திருக்குர்ஆன், இரண்டாவது அடிப்படையான ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளுமே தலைமுக்காடு இஸ்லாத்தின் இன்றியமையாத கடமை, கண்டிப்பாக அணிய வேண்டிய ஆடை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.

ஆனால் இம்மாபெரிய ஆதாரங்களை மாணவியரின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த பின்னரும் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமான கடமை இல்லை என்றும், ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமான கடமைதான் என்று மாணவிகள் நிரூபிக்க தவறி விட்டனர் என்று நீதிமன்றம் சொல்வது கடைந்தெடுத்த அபத்தமாகும். இதனால் தான் இவர்கள் அளித்த தீர்ப்பு இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களுக்கு நேர்மாற்றமான தீர்ப்பு என்று கூறுகின்றோம்.

அத்தியாவசியமா என்ற கேள்வி அவசியமானதா?

மதச்சார்பின்மையை அரசியலமைப்புச் சட்டமாகக் கொண்ட ஒரு நாட்டில் உள்ள நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தில் அவசியமானதுதானா? அல்லது பொட்டு வைப்பது இந்து மதத்தில் அவசியமானதுதானா? என்று மயிர் பிளக்கும் சர்ச்சைக்குள் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்றத்தின் வேலையுமில்லை. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த வேலையைச் செய்கின்றது. அதற்கு அது கூறுகின்ற காரணம் என்ன தெரியுமா?

மனச்சான்றின் அடிப்படையிலான உரிமையை மையப்படுத்தி வரக்கூடிய வழக்குகள் அத்தனையும் மதச் சுதந்தரம் சம்பந்தப்பட்டவையாக உள்ளன. அதனால் (ஹிஜாப் போன்ற) மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு மதத்தில் அத்தியாவசிமானவை தானா என்று பார்க்கும் அவசியம் ஏற்படுகின்றது என்று கூறுகின்றது.

இங்கு நீதிபதிகளின் பார்வை நமக்குப் பளிச்சென்று தெரிகின்றது.

மாணவியரே! ஹிஜாப் அணிவது எங்களுடைய மார்க்கத்தின் அத்தியாவசிய கடமைகளில் உள்ளது. அதனால் எங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று நீங்கள் உரிமை கோரி வருகின்றீர்கள்! அப்படி ஒரு வாசல் திறந்திருப்பதால் தானே அந்த வாசல் வழியாக வருகின்றீர்கள். அந்த வாசலை அடைத்து விட்டால் எப்படி வருகின்றீர்கள் என்று பார்ப்போம் என்று அடைத்தது போல் தான் நீதிபதிகள் அணுகுமுறை உள்ளது.

எப்படியாவது அந்த உரிமையை மறுத்தாக வேண்டும் என்பதைத் தான் நீதிபதிகள் தங்கள் கவனத்தில் கொண்டிருப்பதையே இது நமக்கு உணர்த்துகின்றது.
குறிப்பாக, மாணவிகள் அரசமைப்புச் சட்டம் 25ஐ தங்கள் மனுவில் ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். அந்தப் பிரிவு, அனைவருக்கும் ஒரு மதத்தை ஏற்க, அதன்படி செயல்பட, அதைப் பிரச்சாரம் செய்திட உரிய சம உரிமையை வழங்குவதுடன் மட்டுமல்லாது மனச்சான்றின் அடிப்படையில் நடப்பதற்குரிய உரிமையையும் வழங்குகின்றது. அதனால் உயர் நீதிமன்றம் அந்த வாசலை அடைப்பதற்கு இந்தப் பாய்ச்சல் பாய்கின்றது.

உண்மையில், சீருடை அணிய வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவே தனி மனித சுதந்தரத்தைப் பறிக்கும் உத்தரவாகும்.

மொத்தத்தில், இந்திய அரசியலமைப்பு சாசனம் சிறுபான்மை சமுதாயத்திற்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவே கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கின்றது.

இந்தியச் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை, பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒரு கும்பல் முடிவு செய்கின்றது. உயர் நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் அவற்றை ஆமோதிக்கின்றன.

அப்படித்தான் முத்தலாக், பாபரி மஸ்ஜித் தீர்ப்புகள் அமைந்தன. அதே வழியில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைந்திருக்கின்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தங்கள் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

காரணம் ஹிஜாப் என்பது வெறும் உடையல்ல; அது உரிமையாகும். அது முஸ்லிம் பெண்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கடமையாகும்.