மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்தது கல்லூரி நிர்வாகம், அதை வேடிக்கை பார்ப்பது கர்நாடக மாநில அரசு.
இவர்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவது தான் சரியானது.
கல்லூரியில் ஹிஜாப் அணிய தடைவிதித்ததற்கும் குறிப்பிட்ட எந்தச் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட சாராரைக் கண்டித்துப் போராட்டம் நடத்தும் தேவை எங்கிருந்து ஏற்பட்டது?
அதுமட்டுமின்றி தமிழகத்தை பொருத்தவரை ஹிஜாப் பிரச்சனையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே பிறமத மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹிஜாப் அணிவதை அரசியல் சாசனம் தடுக்காத போது கல்லூரி நிர்வாகம் எப்படி தடுக்கலாம் என்று நியாயம் கேட்கின்றனர்.
முஸ்லிமாக இல்லாத போதும் தங்கள் மகள்களுக்கு ஹிஜாப் போட்டும் பெண்களாக இருப்போர் தாங்கள் ஹிஜாப் அணிந்தும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்படி சாதி மதங்களை கடந்து ஹிஜாப் விஷயத்தில் நீதியை நிலைநாட்டும் சமூகத்திற்கு மத்தியிலே தேவையற்ற வெறுப்புணர்வை உண்டாக்கும் அறிவீன செயல் தான் பூணூல் அறுப்பு போராட்டம் என்பது.
பூணூல் அணிந்த சமூகத்தினரே ஹிஜாபுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர்.
ஹிஜாப் வழக்கில் மாணவிகளின் சார்பில் வாதடிய வழக்கறிஞர் ஒருவர் கூட பிராமண சமூகத்தை சார்ந்தவர்தான்.
எனது மகன் நெற்றியில் நாமம் போட்டு தான் கல்லூரிக்கு செல்வான்? அதையும் தடுப்பீர்களா என்று நியாய உணர்வுடன் கேள்வி எழுப்பி தனது குரலை பதிவு செய்தார்.
எனவே ஹிஜாப் விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக்குரலை, குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான குரலாக கட்டமைத்து விடக்கூடாது.
பூணூல் அறுப்பு போராட்டம் என்பது அப்படியொரு தவறான கருத்தாக்கத்தையே கட்டமைக்கின்றது. இந்தப் போராட்டத்தை இஸ்லாமிய சமூகம் ஆதரிக்கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் இதற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹிஜாப் விஷயத்தில் போராட வேண்டும் என்றால் கர்நாடக அரசை கண்டித்துப் போராடலாம். கல்லூரி நிர்வாகத்தை கண்டித்துப் போராடலாம். இதை மதப்பிரச்சனையாக்க முயலும் சங்பரிவாரக் கும்பலை கண்டித்தும் போராடலாம்.
இப்படி ஆரோக்கியமான பல வழிமுறைகள் இருக்கும் போது ஹிஜாப் தடையில் சம்பந்தமில்லாத ஒரு சமூகத்திற்கு எதிராக போராடுவேன் என்று ஓலமிடுவது நியாயம் கேட்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலானது அல்ல. இதற்கு வேறு நோக்கம் இருப்பதாகவே மக்கள் புரிந்து கொள்வர்.
அரசை நோக்கி கேள்வி எழுப்புவது வேறு. குறிப்பிட்ட சமூகத்துடன் மோதல் போக்கை கடைபிடிப்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.
பொட்டு, திருநீறு அணிந்து கல்லூரிக்கு வரலாம், தலைப்பாகை அணிந்து சீக்கிய மாணவர்கள் வரலாம், பூணூல் அணிந்து பிராமண சமூக மாணவர்கள் வரலாம். ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு வரக்கூடாதா? இது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்புவது அரசையும் அரசின் இதர அமைப்புகளையும் நோக்கி கேள்வி எழுப்பும் செயலாகும்.
இதை குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரானதாக யாரும் புரிய மாட்டார்கள்.
ஆனால் ஹிஜாபுக்கு தடை விதிக்கும் போது பூணூலை அறுப்பேன் என்று சொல்வது அரசை எதிர்க்கும் செயல் அல்ல. குறிப்பிட்ட சமூகத்துடனான மோதல் போக்கை கடைபிடிக்கும் அறிவற்ற வேலை.
தவ்ஹீத் ஜமாஅத்தோ பிற அமைப்புகளோ பொட்டு அழிக்கும் போராட்டம் நடத்தி ஹிஜாப் விஷயத்தில் நியாயம் கேட்கவில்லை. சீக்கிய மாணவர்களின் தலைப்பாகையை கழட்டும் போராட்டம் என்று அறிவிப்பு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் அது அறிவார்ந்த செயலாக இருந்திருக்காது.
ஆனால் பூணூல் அறுப்பு போராட்டம் என்பது வெகுஜன மக்களிடையே நியாய உணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வையே உண்டாக்கும்.
ஹிஜாப் சர்ச்சையில் சங்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் ஏட்டிக்கு போட்டியாக கழுத்தில் காவித்துண்டு போட்டு வருவதாக சொன்ன போது அவர்களின் இழிச்செயலை மக்கள் எப்படி பார்த்தார்களோ அப்படித்தான் இதுவும் பார்க்கப்படும்.
மக்களை நல்வழிநடத்த விரும்பும் எவரும் இவ்வழியை நாடமாட்டார்கள்.