அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளதே?


அண்மையில் நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்களை வெளியேற்றி விட்டு அவசரம் அவசரமாகப் பல மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
அவற்றில் அச்சகங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பான மசோதாவும் ஒன்று.
அமளியில் ஈடுபடுவதாகக் கூறி 146 எம்பிக்களை இடைநீக்கம் செய்து நாடாளுமன்ற அவையை காலியாக்கிய பின்னர் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
அச்சகங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பான மசோதாவின் படி மத்திய அரசால் நியமிக்கப்படும் பத்திரிகை தலைமைப் பதிவாளர் முன்பு எல்லாப் பத்திரிகைகளும் பதிவு பெற வேண்டும் என்பதுடன் கட்டற்ற அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் மாநில அரசுக்குக் கட்டுப்படத் தேவையில்லை
எந்தவொரு ஊடக நிலையத்தையும் எப்போதும் ஆய்வு செய்யலாம்
ஊடகத்தைத் தடை செய்யலாம். அல்லது அபராதம் விதிக்கலாம்.
அச்சு ஊடகங்களாக இல்லாமல் டிஜிட்டல் ஊடகங்களும் இவரிடம் பதிவு பெறுதல் அவசியம்.
உபா பிரிவில் தண்டிக்கப்பட்டவர்கள் அச்சு ஊடகமோ டிஜிட்டல் ஊடகமோ நடத்தத் தடை
பத்திரிகை தலைமைப் பதிவாளர் முடிவே இறுதியானது
இப்படிப் பல பாதகமான அம்சங்களை இந்த மசோதா கொண்டுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தை முற்றிலும் நசுக்கவும் அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்கவுமே இந்தப் புதிய மசோதா பயன்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஏற்கனவே பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கின்றது. பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் பல ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். அரசை விமர்சித்த காரணத்தாலேயே அவர்களின் மீது வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆல்ட் நியூஸ் ஊடக நிறுவனர் ஜூபைர் மத்திய அரசின் அவலங்களைத் தோலுரித்தக் காரணத்தால் அவரின் பழைய ட்விட்டர் பதிவுகளைக் காரணம் காட்டி கைது செய்தது.
உலகளாவிய அளவில் அவரின் கைதுக்கு எதிரான கருத்துகள் வரத் துவங்கியதும் இறுதியில் ஜூபைரை விடுவித்தது.
குஜராத் இனப்படுகொலையையும் அதில் சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்பட்ட அவலங்களையும் அம்பலப்படுத்திய தீஸ்தா செதல்வாட் எனும் சமூக செயற்பாட்டாளரை வழக்கு, சிறை என அலைக்கழித்தது.
குஜராத் ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதன் மூலம் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் எவ்வளவு நெருக்கடியில் உள்ளது என்பதை உலகத்திற்கே பறைசாற்றியது.
காஷ்மீரில் நடந்த அரசின் அத்துமீறலைப் பட்டியலிட்டு மக்களுக்குக் கவனப்படுத்திய காஷ்மீர்வாலா எனும் டிஜிட்டல் ஊடகத்தை பாஜக அரசு தடை செய்தது. அதன் இணையதள முகவரி, சமூக வலைத்தளம், ட்விட்டர் தளம் என அனைத்துக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதன்  நிறுவனர்  பஹத்ஷா என்பவரைப்  பயங்கரவாத குற்றச்சாட்டில் சிறையில் தள்ளியது. அதன் பின் காஷ்மீரின் ஊடகங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அரசுக்கு எதிரான அதன் குரல்வளைகள் அறுத்து எறியப்பட்டதால் மௌனமாயின. 
டெல்லியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது டெல்லி காவல்துறை அராஜகத்தை ஏவியதைப் பதிவு செய்து செய்தி வெளியிட்ட மீடியாஒன் தொலைக்காட்சி மீது இரண்டு நாள் ஒளிபரப்பு செய்ய மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது.
உ.பியின் ஹத்ராஸில் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட நிகழ்வினால் நாடே அதிர்ந்தது. அதன் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற மலையாளப் பத்திரிகையாளர் சித்திக் கப்பான் ஐ உபா சட்டத்தில் கைது செய்து வருடக்கணக்கில் சிறையில் தள்ளியது. ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்தால் மற்றொரு வழக்கைச் சுமத்துவது என பாஜக அரசு தன் அதிகாரப் பிடியைப் பத்திரிகையாளர்கள் மீது எப்படியெல்லாம் பரவச் செய்தது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
இப்போது இந்தப் புதிய மசோதாவின் மூலம் ஊடக சுதந்திரத்தை இல்லாமலாக்க முயற்சிக்கின்றது. ஊடகங்கள் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட வேண்டும். இல்லையேல் இழுத்து மூட வேண்டும். அதை விட்டு அரசுக்கு எதிராக அதன் மூச்சுக்காற்றைக் கூட வெளியிடக் கூடாது என்பது தான் இந்தப் புதிய மசோதாவின் நோக்கம்.
அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் மக்கள் விரோதச் சட்டத்தையும் உள்ளது உள்ளபடி மக்களுக்குத் தருவதில் புகழ்பெற்ற பத்திரிகை, ஊடகங்களை விடச் சமூக வலைத்தளங்களும் டிஜிட்டல் மீடியாக்களுமே முதலிடம் வகிக்கின்றன. எனவே தான் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என இந்த மசோதாவில் கொண்டு வந்துள்ளனர்.
இந்த வகையில் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், சுதந்திரமாகக் கருத்துகளை வழங்கி வந்த ஊடகங்களை இந்தப் புதிய சட்டத்தின் மூலம் அடிபணிய வைப்பதே மத்திய அரசின் இலக்கு. 
இந்தப் புதிய மசோதாவின்படி சமூக வலைத்தளங்கள், யுடியூப் சேனல்கள் இனி விரும்பிய படி அரசியல் செய்திகளைப் பேசி வெளியிட முடியாது. இதுவரை அவற்றைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்டமும் இல்லாமல் இருந்தது. இப்போது ஒரு பத்திரிகைக்கு என்ன சட்டமோ அதே சட்டம் இவைகளுக்கும் உண்டு என்றாகும். 
எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா என்பது பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் மிக முக்கியமான அமைப்பாகும். 
மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு எதிரான அநியாயங்கள் அரங்கேறிய போது உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை அம்பலப்படுத்திய அமைப்பாகும்.
தற்போது எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா எனும் இந்த அமைப்பு புதிய மசோதா குறித்து தமது கவலையைப் பதிவு செய்துள்ளது. செய்திகளைச் சுதந்திரமாக வெளியிடுவதில் அரசுத் தலையீட்டை இந்த மசோதா அதிகரிக்கின்றது என்று தெரிவித்து இந்த மசோதாவிற்குத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஜனநாயக விழிப்புணர்வை ஊட்டும் பத்திரிகை சுதந்திரத்திற்கு பாஜக அரசு சாவுமணி அடித்து விட்டது. 
2024 தேர்தலில் பாஜக வென்றுவிட்டால் அதன் பிறகு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அவர்கள் தருவதைப் போடுவது தவிரப் பெரிதாக வேலை எதுவும் இருக்காது. 
இந்தியாவின் நான்காவது தூண் இந்த மசோதாவின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.