கர்மா அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளாரே?

சட்டத்தின் படி தீர்ப்பளிப்பதற்கு பதிலாக கர்மவினையைக் கூறி தீர்ப்பளித்த வினோதம் நமது நாட்டில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு மிகுந்த வேதனையே ஏற்படுகிறது.
மதுரையில் காவலராக பணிபுரியும் ஒருவர் முறையாக அனுமதி பெறாமல் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக பல முறை மெமோ வழங்கப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணிசெய்ய இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காவலர் வழக்கு தொடுக்கவே வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, கர்மா குறித்து பாடம் எடுத்துள்ளார்.
சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா என இரு வகை கர்மா உள்ளது. இதில் பிராரப்த கர்மா அடிப்படையில் பல முறை காவலர் முருகன் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார். எனவே அவருக்குப் பணியிட மாற்றம் எனும் தண்டனை தேவையில்லை என்று கூறி தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளார்.
அரசு தரப்பில் மேல்முறையீடு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு வந்த போது கர்மாவை காரணம் காட்டி அரசு ஊழியரின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று தீர்க்கமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது மனநிறைவை அளித்தாலும் கர்மா அடிப்படையில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாகவே உள்ளது.
இவர்கள் சட்டம் படித்து நீதித்துறைக்கு வந்தார்களா? அல்லது நீதிமன்றத்தையும் நீதிபதி எனும் உயரிய பொறுப்பையும் கேலிப்பொருளாக கருதுகிறார்களா என்று தெரியவில்லை.
நீதிபதி எனும் உயரிய பொறுப்பை அலங்கரிக்கும் போது தனது தனிப்பட்ட நம்பிக்கைகள், விருப்பு, வெறுப்புகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சட்டத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். சட்டத்தின் படியே தீர்ப்பளிக்க வேண்டும்.
இவரோ கர்மவிதியின் படி காவலர் தனது தண்டனையை அனுபவித்து விட்டார் என்று கூறுவது நகைப்புக்குரியதல்லவா? சட்டத்தின் படி தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நீதிபதி எப்படி இவ்வாறு கூறமுடிகிறது?
கர்மவினை என்று நம்பிக்கையின் படி தீர்ப்பளிப்பதாக இருந்தால் கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் தண்டிக்க முடியுமா?
அவன் சாக வேண்டும் என்பது அவனுக்குரிய கர்மவினை என்று கொலைகாரன் கூற மாட்டானா? இப்படியே குற்றவாளிகள் அனைவரும் கர்மவினையைக் காரணம் கூற ஆரம்பித்தால் எந்தக் குற்றவாளியும் சட்டத்தின் பிடியில் அகப்படமாட்டார்கள்.
குற்றவாளிகள் எல்லோரும் சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரியும் பேரவலம் ஏற்படுவதற்கே இது வழிவகுக்கும்.
சட்டத்தையும் நீதிமன்றத்தின் மாண்பையும் நகைப்புக்குரியதாக்கும் இது போன்ற தீர்ப்புகள் ரத்து செய்யப்பட்டால் மட்டும் போதாது.
சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை தீர்ப்பெனும் பெயரில் கூறுவதைத் தடுக்கும் வகையில் நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும்.
குஜராத்தில் நடைபெற்ற சம்பவமும் இது போலத்தான்.
தசரா பண்டிகையில் சிலர் கல்லெறிந்து பிரச்சனை செய்தார்கள் என்று கூறி இரு இளைஞர்களை கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் காவல்துறையினர் அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
இதில் அடிவாங்கிய இளைஞர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பது ஒரு புறமிருக்க அவர்கள் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்வது நீதிமன்றம் அல்லவா?
காவல்துறையே சட்டத்தை கையிலெடுத்து அவர்களுக்கான தண்டனையைப் பொதுவெளியில் வைத்து எப்படி வழங்கினார்கள்?
குற்றம் சாட்டப்பட்டோர் முஸ்லிம்களாக இருந்து விட்டால் விசாரணை வேண்டாமா? நீதிமன்றம் தேவையில்லையா? தெருமுனையில் கம்பத்தில் கட்டி வைத்து காவல்துறையே தண்டனையை வழங்கி விடும் என்றால் இது என்ன காட்டுமிராண்டித்தனம்?
இது குஜராத்தில் தானே நடந்தது என்று அலட்சியமாக இருக்கவியலாது. சட்டம் கேலிக்கூத்தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்தால் அது வைரஸ் போல நாடெங்கிலும் பரவி விடும்.
சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையினரும் நீதித்துறையினருமே சட்டத்தை கேலிக் கூத்தாக்குவார்கள் எனில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்த்துவதற்கு இதை விட வேறென்ன குறியீடு வேண்டும்?