ஒரு வழியாக ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது.
இந்திய வரலாற்றிலேயே ஒரு வழிபாட்டுத்தல திறப்பு நிகழ்ச்சிக்கு இத்தனை கொண்டாட்டங்கள் இதுவரை நடந்ததில்லை.
மத்திய அரசு அலுவலகம் விடுமுறை
பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள் அரைநாள் விடுமுறை.!
தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச் சந்தை அன்றைய தினம் வர்த்தகத்தில் ஈடுபடாது எனும் அறிவிப்பு!
உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பொது விடுமுறை.!
சத்தீஷ்கர் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் அன்றைய தினம் செயல்படாது.!
இவர்களின் கொண்டாட்டத்தில் மருத்துவமனைகளும் தப்பவில்லை.
ஜிப்மர் மருத்துவமனையில் எந்த அறுவை சிகிச்சையும் நடைபெறாது என்று அறிவித்து விட்டு, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில் சில மாற்றங்கள் செய்துள்ளது.
மதச்சார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்பதை ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு நடைபெறும் இத்தகைய கொண்டாட்டங்களும் இதையொட்டிய பாஜக அரசின் முன்னெடுப்புகளும் மிகத் தெளிவாக காண்பித்து விட்டன.
மதச்சார்பற்று செயல்பட வேண்டிய அரசுக்குக் குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலத்தைத் திறப்பதில் என்ன வேலை?
இந்தியா சுதந்திரம் பெறும் வேளையில் சோமநாதர் கோவிலைப் புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அரசாங்கம் அதற்குப் பணம் தரக்கூடாது. அதற்குத் தேவையான பணம் மக்களிடமிருந்தே திரட்ட வேண்டும் என்றார் காந்தி.
மதச்சார்பற்ற அரசு குறிப்பிட்ட மத விவகாரங்களில் மைய நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே காந்தி காட்டிய வழியாக இருந்தது.
அந்த காந்தியை கொன்ற கோட்சேவை இன்று பெரும் தியாகி போன்று சித்தரிப்பவர்களிடம் காந்திய வழிமுறையை எதிர்பார்க்கலாமா?
பாஜகவைப் பொருத்தவரை ராமர் – கோவில் என்பதெல்லாம் வழிபாட்டுக்குரியவை அல்ல. வாக்குகளை அறுவடை செய்யப் பயன்படுத்தும் அரசியல் உத்தி. இத்தனை காலமும் அப்படித்தான் ராமரை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மற்றபடி அதில் சாமானிய மக்களுக்கு இருப்பதைப் போன்ற உள்ளார்ந்த பக்தி ஏதும் அவர்களுக்குக் கிஞ்சிற்றும் கிடையாது.
நெருங்கி வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்திற் கொண்டே குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டுக்குரிய ராமரையும் கோவிலையும் பாஜக அரசியலாக்குகிறது.
தங்களுக்கு இருக்கும் அதிகார பலம் அனைத்தையும் முடுக்கி விட்டு ஒட்டு மொத்த இந்திய மக்களின் கவனத்தையும் ராமர் கோவில் திறப்பை நோக்கி ஈர்க்கிறது.
இது மிக மோசமான, அருவருப்பான அரசியல்.
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தை இடித்து அவர்களிடமிருந்து நிலத்தைப் பறித்து அதில் கோவிலையும் கட்டிக் கொஞ்சம் கூட கூச்சநாச்சமின்றி இவ்வளவு கொண்டாட்டத்துடன் திறக்கிறார்கள் எனில் சிறுபான்மை மக்களை இவர்கள் புழு பூச்சியாகக் கூட மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இவர்கள் ஆட்சி செய்யும் இந்தியாவில் சிறுபான்மை மக்களின் நிலை என்ன என்பதை உணர்த்திட இதை விட வேறு சான்று தேவையில்லை.
இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வில் பங்கெடுப்பது எங்களின் வாழ்நாள் பாக்கியம் என்று கூறுகிறார்கள். வடமாநிலத்தவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கு பாபர் மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்களின் வலி புரியவில்லை எனலாம்.
தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்குமா இது தெரியவில்லை.
500 ஆண்டுக்காலப் பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறார் ரஜினி.
உங்கள் அரசியல் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் தலை சுற்றுகிறது எனச் சொன்னவருக்கு பாபர் மஸ்ஜித் பிரச்சனை மட்டும் தெளிவாகப் புரிந்து விட்டதா?
பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளுக்கே பள்ளிவாசல் நிலத்தை உச்சநீதிமன்றம் பிடுங்கிக் கொடுத்ததால் அது நீதி என்றாகி விடுமா?
அதிகார வெறியில் தலைகால் புரியாது ஆட்டம் போடுகிறார்கள்.
இவர்களின் அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் ஒட்டு மொத்த இந்தியர்களையும் பங்காளிகளாக்க முயல்கிறார்கள்.
பள்ளிவாசலை இடித்து நிலத்தைப் பறித்து அதிகாரத்தின் மூலம் அபகரித்த நிலத்தில் கட்டப்பட்ட ஆலயத்தைத் திறப்பதற்கு இத்தனை கொண்டாட்டங்கள் தேவை தானா? என்று மனசாட்சி உள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
ராமர் கோவிலை வைத்து இவர்கள் செய்யும் கேடு கெட்ட அரசியலை பாஜகவின் அடிவருடிகள் ரசிக்கலாம். தவறான வழியில் தாங்கள் ஈன்ற பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளச் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்களும் பாஜகவுக்கு மகுடி ஊதலாம்.
ஆனால் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஜனநாயகவாதிகள் இதற்கு ஒரு போதும் துணை போகக் கூடாது.
இவர்களிடம் இந்த நாடு மீண்டும் சென்றால் இந்திய ஜனநாயகத்தை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.
ராமர் கோவிலைத் திறந்து விட்டால் அடுத்த தேர்தலில் அதைச் சொல்லியே வென்று விடலாம் என்று மனப்பால் குடிக்கின்றார்கள்.
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றார்கள். என்னவானது? அவர்களின் கணக்கு தவிடு பொடியானது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டை அரசியலாக்க முயன்றதில் இவர்கள் மண்ணைக்கவ்வியதை உலக மக்கள் அனைவரும் பார்த்தனர்.
அது போல பத்தாண்டுக்கால இவர்களின் பிரிவினைவாத மத அரசியலால் மனம் வெறுத்துப் போன ஜனநாயகவாதிகள் எதிர்வரும் தேர்தலில் இவர்களுக்குத் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.
ராமர் கோவில் திறப்பு இத்தனை ஆண்டுகாலம் தாமதமானதற்கு ராமர் தன்னை மன்னிக்க வேண்டும் என்றாராம் மோடி.
ராமரின் பெயரால் இவர்கள் குடித்த மனித உயிர்கள் கொஞ்சநஞ்சமா? அத்வானியின் ரதயாத்திரை பதம் பார்த்த மனித உயிர்கள் சொல்லிமாளாது.
ஒன்று மட்டும் நிச்சயம்.
ராமர் பெயரைச் சொல்லி இவர்கள் புரியும் அட்டூழியத்தைக் கடவுளாக அல்ல மனிதநேயமுள்ள மனிதராக இருக்கிற எவரும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.