கடந்த 30.10.2021 அன்று இந்தியாவின் 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 30 இடங்களில் அந்தந்த மாநில சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. 3 மக்களவை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை 02.11.21 அன்று நடந்தது.
30 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.
குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் பின்னடைவை பாஜக சந்தித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பாஜக பலத்த தோல்வியை தழுவியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் தன் வசம் வைத்திருந்த மண்டி மக்களவை தொகுதியையும் பாஜக இழந்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலம் கர்நாடகா. அங்கு இரண்டு தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ஹனகல் எனும் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இது அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த ஊர் தொகுதியாகும்.
பாஜக ஆளும் மாநில முதல்வரின் சொந்த ஊர் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்திருப்பது கட்சிக்கு பெரும் பலவீனமே.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இரு இடைத்தேர்தல் தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
இந்த மாநிலத்தில் தான் கொல்லைப்புற வழியாக தொடர்ந்து ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்த நிலையில் இந்தத் தோல்வி குறிப்பிடத்தக்கது.
அடுத்து மேற்கு வங்கம். இங்கு நடைபெற்ற 4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பாஜகவுக்கு தோல்விமுகம் தான்.
குறிப்பாக 3 தொகுதிகளில் தலா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை அடைந்துள்ளது.
இம்மாநிலங்கள் ஏற்பட்ட தோல்விகள் மூலம் பாஜக தேசிய தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் பெட்ரோலின் விலையை சற்றே குறைத்ததும் தேர்தலில் மக்கள் கொடுத்த தோல்விகளின் வெளிப்பாடு தான்.
இது போன்று நடைபெறும் அத்தனை தேர்தல்களிலும் மக்கள் பாஜகவுக்கு தக்கப் பாடம் புகட்டினால் தான் பாஜக பாடமும் படிப்பினையும் பெறும்.
மக்கள் விரோத சட்டங்கள் அகற்றப்பட வழி பிறக்கும்.