ரேஷன் கடைகளில் மோடியின் புகைப்படம் வைக்க நிர்மலா சீதாராமன் சண்டை போட்டுள்ளாரே?

ரேஷன் கடைகள் என்றாலே சண்டை சச்சரவு இயல்பானது.
வரிசையில் நிற்கும் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் பொருள் விநியோகிப்பவரிடம் மக்கள் கேள்வி எழுப்பி கூச்சல் போடுவதும் அவ்வப்போது நடக்க கூடிய ஒன்றே.
ஆனால் ரேஷன் கடையில் ஒரு நிதியமைச்சர் சண்டை போடுவது உலகிலேயே இதுதான் முதல்முறையாகும்.
தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா அவர்கள்.
அப்போது கமாரெட்டி எனும் மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்துள்ளார். அங்கே பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்பதை அறிந்து கொண்டு கோபம் கொண்ட நிர்மலா அவர்கள் மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவதில் மத்திய அரசின் பங்கு அளப்பரியது.
அப்படிப்பட்ட மத்திய அரசின் பிரதமரின் புகைப்படத்தை ஏன் நீங்கள் வைக்கவில்லை என்று கமாரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் சச்சரவு செய்துள்ளார்.
மோடியின் புகைப்படம் வைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வது ஒரு நிதியமைச்சருக்கு அழகல்ல.
இது பாஜக அரசின் விளம்பர மோகத்தையே வெளிப்படுத்துகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் மோடியின் புகைப்படத்தை அச்சிட்டு வழங்கினார்கள்.
தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் அவசியம் தானா என்று கேள்வி எழுப்பியதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக அச்சிட்டோம் என்று மழுப்பலாக பதிலளித்தனர்.
சமீபத்தில் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அதற்கான விளம்பர பேனர்கள் தமிழகமெங்கும் வைக்கப்பட்டன. அதில் சிலவற்றில் மோடியின் புகைப்படம் இல்லை என்பதற்காக தமிழக பாஜகவினரை சார்ந்தவர்கள் ஒவ்வொரு பேனராக தேடிப்போய் மோடியின் புகைப்படத்தை மட்டும் தனியாக அப்பேனரில் ஒட்டினார்கள்.
பாஜகவின் விளம்பர மோகத்திற்கு இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
இந்த வரிசையில் நிர்மலா சீதாராமனின் இச்செயல் உச்சமானதாகும்.
தெலுங்கானா மாநிலத்தின் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியரிடம் அவர் இப்படி நடந்து கொண்டதைக் கண்டித்து அப்போதே அம்மாநிலத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பின.
ஒரு மாவட்ட ஆட்சியரை இவ்வாறு கேள்வி எழுப்ப நிதியமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநில நிதியமைச்சரும் கூட நிர்மலா அவர்களின் இச்செயலுக்கு கண்டனத்தை தெரிவித்தார்.
டிஆர்எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி) கட்சியை சார்ந்தவர்கள் எல்ஜிபி சிலிண்டர்களில் மோடியின் புகைப்படத்தை ஒட்டி அதிலேயே ஒரு சிலிண்டரின் விலை 1105 என்று அச்சிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு 500 க்குள் இருந்த கேஸ் விலை இன்று 1100 ஐ தாண்டி விட்டது. கேஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும் முதலில் தேசத்திற்காக விட்டுக் கொடுக்க சொன்னார்கள். தற்போது மானியம் யாருக்கும் வழங்கப்படுவதில்லை.
அத்தியாவசிய பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக கூறிய மோடி அரசு, சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.
இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது பஜ்ஜி வியாபாரம் செய்து பிழைக்கலாம் என்றார்கள் திமிராக!
அதற்கும் வழியில்லாத வகையில் வெங்காயம் விலை ஏறிவிட்டதே என்று கூறப்பட்ட போது ஏன் வெங்காயம் சாப்பிடுகிறீர்கள் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று எகத்தாளத்துடன் இதே நிதியமைச்சர் பதிலளித்தார்.
இப்படி பல பிரச்சனைகளில் அவதியுறும் மக்களுக்காக நிதியமைச்சர் கோபம் கொண்டதில்லை.
மோடியின் புகைப்படம் இல்லை என்பதற்காக ரேஷன் கடையில் மலிவாக சண்டை போடுவதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைக்காக கோபம் கொண்டு மக்களவையில் குரல் கொடுக்கட்டும்.
அதுவே நிதியமைச்சருக்கு அழகு.