பாசிச குற்றவாளிகள் மீது என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளதா?

அண்மையில் ஊடகங்களில் இரு முக்கிய செய்திகளை வாசிக்க நேர்ந்தது. அந்தச் செய்திகளைப் பத்திரிகைகள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கவில்லை. எனினும் சமூகவலைத்தளங்களில் அதனை முதன்மைப்படுத்தியிருந்தனர்.
ஒன்று மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அன்னூர் எனும் பகுதியில் பேக்கரி கடையில் வேலை பார்க்கும் விஸ்வநாதன் பற்றியது.
அவர் பாஜகவின் உறுப்பினர். மாவட்ட கட்சி மேலிடத்தில் தனக்கு உரிய பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் தனக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் தனது கட்சியின் முன்னோர்கள் வழிமரபை பின்பற்றிப் பெட்ரோல் குண்டு வீச்சை கையில் எடுத்துள்ளார்.
தன் மீது தானே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு வேறு யாரோ விஷமிகள் செய்து விட்டதாக நாடகமாடியுள்ளார். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். (என்ன ஒரு தைரியம்?).
ஆனால் காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட விஸ்வநாதன் தன் மீது தானே பெட்ரோல் குண்டை வீசியுள்ளது அம்பலமானது.
கட்சியில் தனக்கு பொறுப்பு வழங்காதவர்களைக் கொலை வழக்கில் சிக்க வைக்கும் நோக்கில் இந்நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்றது கடந்த மார்ச் 26.
அதேபோலக் கடந்த மார்ச் 29 அன்று பத்திரிக்கைகளில் வெளியான மற்றுமொரு செய்தியையும் பாருங்கள்.
கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு முக்கிய ரவுடிகளைக் கைது செய்யும் படலத்தைக் காவல்துறை துவங்கியது.
அதையடுத்து கோவை புலியகுளம் பகுதியைச் சார்ந்த அயோத்தி ரவி எனும் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட நிர்வாகியிடம் பல துப்பாக்கிகள் இருப்பதாகத் தகவல் கிடைக்கின்றது.
அதனடிப்படையில் அயோத்தி ரவியின் வீட்டைச் சோதனையிட்டபோது 2 கைத்துப்பாக்கிகளும் 5 தோட்டாக்களும் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
ஒரு துப்பாக்கியில் பத்து தோட்டாக்கள் என்ற கணக்கீட்டின் படி 20 தோட்டாக்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் 5 தான் கிடைத்துள்ளது.
மீதமுள்ள 15 தோட்டாக்கள் எங்கே என்றே விசாரணையையும் காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
இவை ஒரு வாரக் காலத்தில் உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்த இரு முக்கிய நிகழ்வுகளாகும்.
பாஜக எனும் கட்சியில் சேர்பவர்களின் தரத்தையும் அவர்களது நோக்கத்தையும் தெளிவாக இச்சம்பவங்கள் போட்டுடைத்து விடுகின்றன.
இவற்றை விட இதில் கவனிக்கத் தக்க ஒரு அம்சம் உள்ளது.
என்.ஐ.ஏ எனும் புலனாய்வு அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது தான் இங்கே சாமானியனின் கேள்வியாக உள்ளது.
எடுத்ததற்கு எல்லாம் என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் அவர் இவர் என்று பரபரப்பு செய்தி வெளியிடும் நிலையில் இவர்கள் அதே வளையத்தில் வருவார்களா?
வெளிநாட்டிலிருந்து தாடி வைத்த நிலையில் வருவோர் கையில் பென்டிரைவ் வைத்திருந்தாலே அவனை வீடு வரை சென்று விசாரித்துத் தனது கடமையை ஆற்றும் என்.ஐ.ஏ அயோத்தி ரவியை அப்படியே விட்டு விட்டது ஏன்?
இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்துள்ளார். ஐந்து தோட்டாக்கள் வைத்திருக்கின்றார். இவரை என்.ஐ.ஏ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர இது போதாதா?
இது போன்று எத்தனைத் துப்பாக்கிகளை வைத்திருக்கிறாய்?
மீதமுள்ள 15 தோட்டாக்களை என்ன செய்தாய்? அவை எப்படி மாயமானது? என்று அடுக்கடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்க வேண்டாமா?
ஆனால் பாருங்கள் அயோத்தி ரவியின் முகவரி என்.ஐ.ஏ முகமைக்குத் தெரியவில்லை.
இந்து முன்னணியின் மாவட்ட நிர்வாகியாக இருந்தும் அவனது கட்சி அலுவலகத்தில் எந்த வித சோதனையும் நடத்தவில்லை.
அயோத்தி ரவியின் செல்போனை பறித்து அவனது வாட்ஸப் ஸ்டேட்டஸ், தொடர்பு எதுவும் புலனாய்வு செய்யவில்லை.
அண்மையில் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு நடைபெற்ற போது அதை என்.ஐ.ஏ தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டதை நினைவு கூர்கிறோம்.
அது போன்று அயோத்தி ரவி சம்பவத்தை என்.ஐ.ஏ தானாக முன்வந்து தனது விசாரணை வளையத்தை இறுக்கியிருக்க வேண்டாமா?
கோவை அயோத்தி ரவி சம்பவமும் மேட்டுப்பாளையம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் சமூகத்தில் எவ்வித அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. சிறு சலனத்தைக் கூட எழுப்பவில்லை.
இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான்.
ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் அல்லவே.!