பாடப் புத்தகங்களில் முகாலாயர்களின் வரலாற்றை என்.சி.இ.ஆர்.டி நீக்கம் செய்துள்ளதே ?

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் என்சிஇஆர்டி எனும் அமைப்பு பாடப்புத்தகங்களை திருத்துகிறோம் எனும் பெயரில் பாஜக அரசின் கைப்பாவையாக மாறி வரலாற்றை மாற்றி எழுதும் வேலையைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் சில பகுதிகளை நீக்கம் செய்துள்ளது.
காந்தியின் இந்து – முஸ்லிம் ஒற்றுமை இந்து தீவிரவாதிகளை துண்டியது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டிருந்தது.
ஆகிய பகுதிகளை நீக்கம் செய்துள்ளது.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 11 ம் வகுப்புக்கான சமூகவியல் பாடப்புத்தகத்தில் குஜராத் கலவரம்பற்றிய குறிப்புகள் முழுவதையும் நீக்கியுள்ளது.
முகலாய சாம்ராஜ்யம் தொடர்பாக முகலாய தர்பார் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகள், இந்திய வரலாறு பகுதி 2 உள்ளிட்ட பகுதிகளும் வரலாற்று புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கோவிட் காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாகவே இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டன என்று என்சிஇஆர்டி காரணம் சொன்னாலும் அது பொய்க்காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியும்.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வரலாற்றை மாற்றியமைக்கும் வேலையில் அது கவனம் செலுத்தி வருகிறது என்பதை நிகழ்வுகளை உற்று நோக்கும் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
இந்தியாவெங்கும் உள்ள முஸ்லிம்களின் அடையாளத்தை அழிப்பது.
ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் நிறுவனர்களைப் பற்றிய நல்லெண்ணத்தை உண்டாக்குவது ஆகிய இந்த இருவேலைகளில் தொடர்ந்து பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
உபி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ஊர்களின் பெயர்களை மாற்றிவருவது அந்த நடவடிக்கையில் ஒரு பகுதி தான்.
அது போலவே பாடப்புத்தகங்களில் முகலாயர்கள் பற்றிய பகுதிகளை நீக்குவதும் அந்த அடிப்படையிலேயாகும்.
ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டிருந்தது வரலாற்று உண்மையாகும். அந்த உண்மை மாணவர்களுக்குப் போதிக்கப்படும்போது ஆர்எஸ்எஸ்ஸின் யோக்கியதையை அறிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் பாஜக அரசால் அந்த உண்மையை ஒப்புக் கொள்ள முடிவதில்லை. ஆகவே தான் அந்தப் பகுதியை நீக்கியுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற இனஅழிப்பு என்பதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிந்து வைக்க வேண்டும். அதிலிருந்து நாட்டைத் துண்டாட நினைப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குஜராத் இனஅழிப்பு பற்றிய பகுதிகளை இவர்கள் ஏன் நீக்கம் செய்ய வேண்டும்?
தாங்கள் அணிந்திருக்கும் தூய்மை முகமூடியை இது அறுத்துத் தொங்க விடுகிறது. குஜராத்தில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த கயவர்களின் உண்மை முகத்தை மாணவர்களுக்குத் தோலுரித்துக் காட்டுகின்றது. அதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இது வரலாற்றைக் காவிமயமாக்கும் வேலை என்றும் ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு அரசியலைப் பாடப்புத்தகங்களில் திணிக்கும் முயற்சி என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்தாலும் உண்மையான வரலாற்றை அழிக்க முடியாது என்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
காந்தியின் பேரன் துஷார் காந்தியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்களில் அவர்கள் மேற்கொண்டுள்ள நீக்கம் எந்த ஆச்சரியத்தையும் எனக்கு ஏற்படுத்த வில்லை. ஏனெனில் அவர்கள் நாட்டையே மாற்றி வருகிறார்கள். காந்தியை உள்ளபடி இருந்ததைப் போலக் காட்ட என்றைக்கும் அவர்கள் விரும்பியதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது போன்ற திருத்தங்களை ஜனநாயகவாதிகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சகித்துக் கொண்டு கடந்து விடக் கூடாது.
இன்றைக்கு ஆர்எஸ்எஸ் பற்றிய குறிப்புகளையும் குஜராத் கலவரங்களையும் நீக்குபவர்கள் நாளைக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
காந்தியை நான் ஏன் கொன்றேன் எனும் சங்கப்பரிவாரத்தின் புத்தகத்தைக் குழந்தைகளின் பாடப்புத்தகமாக்கி விடுவார்கள்.
அந்த நிலையை நோக்கித் தான் இவர்கள் நாட்டை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதற்குக் கடுமையான கண்டனத்தை அனைவரும் தெரிவிக்க வேண்டும்.