21 வயதில் தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் எனும் அரசு சட்டம் எத்தகையது?

ஒன்றிய அரசு பெண்களின் நன்மை எனும் பெயரில் இச்சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் உண்மை இல்லை.
திருமணம் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவளது குடும்பத்தையும் சார்ந்த விஷயம்.
ஒரு பெண் எப்போது திருமணத்திற்கு தயாராகிறாளோ அப்போது தனது குடும்பத்தின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்வாள்.
இதில் அரசு தலையிடுவது தேவையில்லாததாகும்.
திருமணத்திற்கு தயாராகும் வயது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழும் நாடு, ஊர், புறச்சூழல் ஆகியவற்றை பொறுத்து அது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும்.
சில பெண்களுக்கு அது 18 ஆக இருக்கும். சில பெண்களுக்கு 20 ஆகவும் மற்றும் சிலருக்கு 17, வேறு சிலருக்கு 22 ஆகவும் இருக்கலாம்.
இங்கே வயது ஒரு நிலையான அளவு கோலாக இல்லை.
எந்த வயதில் ஒரு பெண் உடலாலும் மனதாலும் திருமணத்திற்கு தயாராகிறாளோ அப்போது அவள் திருமணம் செய்து கொள்வாள்.
திருமண விஷயத்தில் அவளது தனிப்பட்ட முடிவிற்கு அரசு தடையாக இருக்க கூடாது.
ஆனால் 21 தான் பெண்களுக்கான திருமண வயது வரம்பு என்று நிர்ணயிப்பது பெண்ணின் தனிப்பட்ட, சுதந்திரமான வாழ்வை பறிப்பதாக அமைகிறது.
அடுத்து ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
21 வயதில்தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று அரசு சொல்லும் போது ஒரு பெண் 18 வயதிலேயோ அல்லது இருபது வயதிலேயோ திருமணத்திற்கு முழு அளவில் எல்லா வகையிலும் தயாராகி விட்டாள் என்றால் இப்போது இந்தப் பெண் தனது இயற்கையான உடல் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வாள்?
எல்லா வகையிலும் திருமணத்திற்கு தயாராகி நின்ற அவளை திருமணம் செய்யக் கூடாது என்று சட்டம் போட்டு தடுப்பது நியாயமாகுமா?
அவ்வாறு தடுப்பது பாலியல் ரீதியான ஒழுக்கக்கேடுகளில் பெண்களை தள்ளவே வழிவகுக்கும்.
இச்சட்டத்தின் மூலம் ஏற்கனவே ஒழுக்கத்தில் சீரழிந்து போயுள்ள சமூகம் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.
கள்ளக்காதல் தவறில்லை என்றும் ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்றும் ஆடையுடன் சிறு பெண்ணின் மறை உறுப்பை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது என்றும் பல்வேறு விதங்களில் சீர்கேட்டின் வாசல்களை திறந்து விட்டுள்ள ஒரு அரசு இப்போது முறைப்படியான ஒரு பெண்ணின் திருமண திருமணத்திற்கு பல்வேறு முட்டுக்கட்டை போடுவது ஆச்சரியமாக உள்ளது.
குறிப்பிட்ட வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் எனும் இச்சட்டத்தை ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று ஒன்றிய அரசிடம் கேட்டால் பெண்கள் பாதிக்கப் படக்கூடாது அதனாலேயே இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்கின்றனர்.
உண்மையில் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்று ஒன்றிய அரசு கருதுமேயானால் குடிபோதையில் தங்களது கணவன்களையும் தந்தைகளையும் இழந்து நடுத்தெருவில் தவிக்கும் பெண்களை கருத்தில் கொண்டு பூரண மதுவிலக்கை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும்.
கற்பழிப்பு போன்ற கொடுமையிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்பட கற்பழிப்புக்கு எதிரான கடும் சட்டம் அமுலுக்கு வர வேண்டும்.
இப்படி ஆக்கபூர்வமான சட்டங்களை இயற்றுவது விட்டு விட்டு திருமண வயதை உயர்த்துவது என்பது நல்லரசின் அடையாளம் அல்ல.
எப்படி பார்த்தாலும் அரசின் இச்சட்டம் ஏற்புடையதாக இல்லை.
இந்தச் சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.