ஃபுஸ்ஸிலத் – விவரிக்கப்பட்டது

1. ஹா, மீம்.
2. அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளனிடமிருந்து (இவ்வேதம்) அருளப்பட்டுள்ளது.
3, 4. (இது) வேதம். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்காக இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (இது) அரபு மொழியில் அமைந்த குர்ஆனாகவும், நற்செய்தி கூறுவதாகவும், எச்சரிக்கை செய்வதாகவும் உள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் புறக்கணித்து விட்டனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
5. “நீர் எதன்பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன. எங்கள் காதுகளில் செவிட்டுத்தன்மை உள்ளது. எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு தடுப்புள்ளது. எனவே (உமது வழியில்) நீர் செயல்படுவீராக! நாங்களும் செயல்படுகிறோம்” என அவர்கள் கூறுகின்றனர்.
6. “நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்களது கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு இறைச்செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவன்பக்கமே நீங்கள் உறுதியாக நின்று, அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்! இணை வைப்போருக்குக் கேடுதான்.
7. அவர்கள் ஸகாத்தைக் கொடுக்க மாட்டார்கள். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.
8. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு முடிவுறாத கூலி உள்ளது.
9. “பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனை மறுத்து, அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறீர்களா? அவன்தான் அகிலங்களின் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக!
10. (பூமியைப் படைத்து) அதன்மேல் உறுதியான மலைகளை எழுப்பி, அதில் அருள்வளம் புரிந்து, தேவையுடையோருக்காக அதன் உணவுகளையும் அதில் நிர்ணயித்தான். முழுமையான நான்கு நாட்களில் (இவற்றைச் செய்தான்.)
11. பின்னர் வானத்தை, அது புகையாக இருந்த நிலையில் (படைக்க) நாடினான். அதனிடமும், பூமியிடமும் “நீங்கள் கட்டுப்பட்டோ அல்லது விரும்பாமலோ வாருங்கள்!” எனக் கூறினான். “கட்டுப்பட்டவர்களாகவே வந்து விட்டோம்” என அவையிரண்டும் கூறின.
12. இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக உருவாக்கினான். ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய இயக்கத்தை அறிவித்தான். அருகிலுள்ள வானத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம். (அதைப்) பாதுகாக்கப்பட்டதாக ஆக்கினோம். இது மிகைத்தவனாகிய நன்கறிந்தவன் நிர்ணயித்ததாகும்.
13. அவர்கள் புறக்கணித்துவிட்டால், “ஆது, ஸமூதுக்கு ஏற்பட்ட இடி முழக்கத்தைப் போன்ற ஓர் இடி முழக்கத்தை உங்களுக்கு எச்சரிக்கிறேன்”என்று கூறுவீராக!
14. “அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்” என்று (கூறுவதற்காக) அவர்களுக்கு முன்பும், பின்பும் அவர்களிடம் தூதர்கள் வந்தபோது, “எங்கள் இறைவன் நாடியிருந்தால் வானவர்களை இறக்கியிருப்பான். நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுக்கக் கூடியவர்கள்” என்று அவர்கள் கூறினர்.
15. ஆது சமுதாயத்தினர், நியாயமின்றிப் பூமியில் கர்வம் கொண்டனர். “வலிமையில் எங்களைவிட மிகைத்தவர் யார்?” என்று கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ்வே அவர்களைவிட வலிமையில் மிகைத்தவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.
16. அவர்களை இவ்வுலக வாழ்வில் இழிவான வேதனையைச் சுவைக்கச் செய்வதற்காகத் துயரமான நாட்களில் கடும் புயல் காற்றை அவர்கள்மீது அனுப்பினோம். மறுமை வேதனையோ மிக இழிவானது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.453
17. ஸமூது சமுதாயத்தினருக்கு நேர்வழி காட்டினோம். ஆனால் அவர்களோ நேர்வழியைவிட குருட்டுத்தனத்தையே நேசித்தனர். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக இழிவான வேதனைக்குரிய இடிமுழக்கம் அவர்களைப் பிடித்தது.
18. இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் இருந்தவர்களைக் காப்பாற்றினோம்.
19. அல்லாஹ்வின் எதிரிகள் நரகத்தை நோக்கி ஒன்றுதிரட்டப்படும் நாளில் அவர்கள் அணிகளாக்கப்படுவார்கள்.
20. இறுதியில் அவர்கள் அதனையடைந்ததும், அவர்களின் செவிகளும், கண்களும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறும்.
21. அவர்கள் தமது தோல்களிடம், “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறுகிறீர்கள்?” என்று கேட்பார்கள். “ஒவ்வொரு பொருளையும் பேச வைத்த அல்லாஹ்வே எங்களையும் பேச வைத்தான். அவனே தொடக்கத்தில் உங்களைப் படைத்தான். அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என அவை பதிலளிக்கும்.
22. உங்களுக்கு எதிராக உங்கள் செவிகளும், கண்களும், தோல்களும் சாட்சி கூறாமல் இருக்க, (உங்கள் செயல்களை அவற்றிடமிருந்து) நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை. எனினும் உங்களின் அதிகமான செயல்களை அல்லாஹ் அறிய மாட்டான் என்றே எண்ணியிருந்தீர்கள்.454
23. உங்கள் இறைவனைப் பற்றி எண்ணியிருந்த உங்களின் இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது. எனவே நீங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள்.455
24. அவர்கள் பொறுத்துக் கொண்டாலும் நரகமே அவர்களின் இருப்பிடமாகும். அவர்கள் (இறைவனின்) பொருத்தத்தைத் தேடினாலும் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார்கள்.
25. இவர்களுக்கு(த் தீய) நண்பர்களைக் சாட்டியுள்ளோம். இவர்களுக்கு முன்னுள்ளதையும், பின்னுள்ளதையும் அவர்கள் அலங்கரித்துக் காட்டினர். இவர்களுக்கு முன்சென்ற ஜின்கள், மனிதர்களின் சமுதாயத்தினருடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் (தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டது. அவர்கள் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.
26. “இந்தக் குர்ஆனைச் செவியேற்காதீர்கள்! அதில் கூச்சலிடுங்கள்! நீங்கள் மிகைத்துவிடலாம்” என்று இறைமறுப்பாளர்கள் கூறினர்.
27. எனவே, இறைமறுப்பாளர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த மோசமானவற்றையே அவர்களுக்குக் கூலியாக வழங்குவோம்.
28. இதுவே அல்லாஹ்வின் எதிரிகளுக்குரிய கூலியான நரகம். நமது சான்றுகளை அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக, அவர்களுக்கு அதில் நிரந்தர இருப்பிடம் உள்ளது.
29. “எங்கள் இறைவனே! ஜின்கள், மனிதர்கள் ஆகியோரில் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவர்கள் இழிந்தோர் ஆவதற்காக, அவர்களை எங்கள் காலடியில் போடுகிறோம்” என்று இறைமறுப்பாளர்கள் கூறுவார்கள்.
30. “எங்கள் இறைவன் அல்லாஹ்” என்று கூறி, பின்னர் உறுதியாக நிலைத்து இருந்தோரிடம் “பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று (கூறி) வானவர்கள் இறங்குவார்கள்.456
31, 32. “நாங்கள் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உங்களின் உதவியாளர்கள். நீங்கள் விரும்பியவை அனைத்தும் அங்கே உங்களுக்கு உண்டு. நீங்கள் கேட்கக் கூடியவையும் அங்கே உள்ளன. (இது) மன்னிப்புமிக்கவனான நிகரிலா அன்பாளனின் விருந்தாகும்” (என்றும் கூறுவார்கள்.)
33. அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, நற்செயல் செய்து, “நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொன்னவரைவிட இனியவை கூறலுக்குரியவர் யார்?
34. நன்மையும், தீமையும் சமமாகாது. மிக அழகானதைக் கொண்டு (தீமையைத்) தடுப்பீராக! அவ்வாறு செய்தால் உமக்கும், எவருக்குமிடையே பகைமை இருக்கிறதோ அவர் நெருங்கிய நண்பரைப் போல் ஆகிவிடுவார்.
35. பொறுமையாளர்களைத் தவிர வேறெவருக்கும் இது கொடுக்கப்பட மாட்டாது. பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர வேறெவருக்கும் இது கொடுக்கப்பட மாட்டாது.
36. உமக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
37. இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனது சான்றாதாரங்களில் உள்ளவையாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸஜ்தா செய்யாதீர்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்யுங்கள்!457
38. அவர்கள் (அவனை மறுத்து) ஆணவம் கொள்வார்களாயின், உமது இறைவனிடம் இருப்பவர்கள் இரவிலும், பகலிலும் அவனையே போற்றுகின்றனர். அவர்கள் களைப்படைய மாட்டார்கள்.
39. பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன்மீது நாம் மழையைப் பொழிவிக்கும்போது செழித்து வளர்கிறது. இது அவனது சான்றாதாரங்களில் உள்ளதாகும். அதை யார் உயிர்ப்பித்தானோ அவன் இறந்தோரையும் உயிர்ப்பிக்கக் கூடியவன். அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன்.
40. நமது வசனங்களைத் திரிப்போர் நம்மிடமிருந்து மறைந்துவிட முடியாது. நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமை நாளில் அச்சமற்றவராக வருபவ(ர் சிறந்தவ)ரா? நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்! உங்கள் செயல்களை அவன் பார்ப்பவன்.
41. இந்த அறிவுரை தம்மிடம் வந்தபோது அதை மறுத்தவர்கள் (நரகவாதிகள்). இதுவோ கண்ணியமிக்க வேதமாகும்.
42. இதற்கு முன்னாலிருந்தோ, பின்னாலிருந்தோ அசத்தியம் வராது. (இது) புகழுக்குரிய நுண்ணறிவாளனிடமிருந்து அருளப்பட்டதாகும்.
43. (நபியே!) உமக்கு முன்னர் தூதர்களுக்குக் கூறப்பட்டதுதான் உமக்கும் கூறப்பட்டுள்ளது. உமது இறைவன் மன்னிப்புடையவன், துன்புறுத்தும் தண்டனையளிப்பவன்.
44. அரபு மொழி அல்லாத (பிறிதொரு மொழிக்) குர்ஆனாக இதை நாம் ஆக்கியிருந்தால், “இதன் வசனங்கள் (அரபு மொழியில்) தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டாமா? (வேதம்) அரபு அல்லாத மொழியும், (இந்நபி) அரபியருமா?” எனக் கேட்டிருப்பார்கள். “இறைநம்பிக்கை கொண்டோருக்கு இது நேர்வழியாகவும், நிவாரணமாகவும் உள்ளது” என்று கூறுவீராக! இறைநம்பிக்கை கொள்ளாதவர்களின் காதுகளில் செவிட்டுத்தன்மையுள்ளது. இதில் அவர்கள் குருட்டுத்தனமாக உள்ளனர். அவர்கள் தொலைதூரத்திலிருந்து அழைக்கப்படு(வதைப் போன்று இருக்)கின்றனர்.
45. மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனின் வாக்கு முந்தியிருக்காவிட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இதைப் பற்றி அவர்கள் கடும் சந்தேகத்தில் உள்ளனர்.
46. யார் நற்செயல் செய்கிறோரோ அது அவருக்கே (நன்மையாகும்). யார் தீமை செய்கிறோரோ (அது) அவருக்கே எதிரானது. அடியார்களுக்கு உமது இறைவன் சிறிதும் அநியாயம் செய்பவனல்ல!
47. உலக அழிவு நேரத்தைப் பற்றிய அறிவு அவனிடமே திருப்பப்படும். கனிகள், பாளைகளிலிருந்து வெளிப்படுவதும், எந்தப் பெண்ணும் கருவுறுவதும், பிரசவிப்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களை அவன் அழைக்கும் நாளில் “எங்களில் சாட்சியளிப்பவர் யாருமில்லை என்பதை உன்னிடம் அறிவித்து விடுகிறோம்” என்று கூறுவார்கள்.
48. இதற்கு முன்னர் அவர்கள் அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும். தங்களுக்குப் புகலிடம் எதுவுமில்லை என்பதை அறிந்து கொள்வார்கள்.
49. செல்வத்தை(க் கேட்டு) இறைஞ்சுவதில் மனிதன் களைப்படைவதில்லை. அவனுக்குத் துன்பம் ஏற்பட்டாலோ நம்பிக்கையிழந்து, விரக்தியடைந்து விடுகிறான்.
50. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நமது அருளைச் சுவைக்கச் செய்தால் “இது எனக்குரியது. உலகம் அழியும் நேரம் ஏற்படும் என்று நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டாலும் அவனிடம் எனக்கு நன்மையே உண்டு!” எனக் கூறுகிறான். ஆனால், இறைமறுப்பாளர்களுக்கு அவர்கள் செய்ததை நாம் அறிவிப்போம். அவர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
51. நாம் மனிதனுக்கு அருள்புரிந்தால் அவன் புறக்கணித்துத் தூரமாகி விடுகின்றான். அவனுக்குத் துன்பம் ஏற்பட்டாலோ நெடுநேரம் இறைஞ்சுகிறான்.
52. “இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, பின்னர் இதை நீங்கள் மறுத்தால் (அத்தகைய) பெரும் பிளவில் இருப்பவனைவிட மிக வழிகெட்டவன் யார் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?” என்று (நபியே!) கேட்பீராக!
53. இது உண்மையானதுதான் என்பது அவர்களுக்குத் தெளிவாவதற்காக (உலகின்) பல பாகங்களிலும், அவர்களுக்குள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளுக்கும் சாட்சியாளனாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?
54. தமது இறைவனைச் சந்திப்பதில் அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்வீராக! அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்தறிபவன் என்பதையும் அறிந்து கொள்வீராக!